Saturday, 27 March 2021

பல்கலை முத்து ‘முற்றம்’

இந்தயாவில் பழம் பெருமைவாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்வது சென்னைப்பல்கலைக்கழகம். இந்தியக் கல்விப்புலத்தில் ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்து பயணிக்கின்ற பெரு நிறுவனம். சென்னைப் பட்டினத்தின் அடையாளங்களில் ஒன்றாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் திராவிடக் கலைக் கட்டடங்கள் தனிச்சிறப்பானவை. தமிழகத்தின் முறைசார்ந்த கல்வியின் சிகரமாக சென்னைப் பல்கலைக்கழகத்தைப் பார்க்கலாம். தமிழ் பழமையின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின்   திராவிடப்பாணியில் அமைந்த  கட்டடங்களுக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது மணிக்கூட்டுக் கோபுரம். அதன் கீழே தொடர்பியல் மற்றும் இதழியல் துறை அமைந்துள்ளது. அது, எழுபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்து தனது பயணத்தைத் தொடர்கிறது. இந்தப் பயணத்தில் அந்தத் துறை பெற்றெடுத்த குழந்தையான ‘முற்றம்’ தனது பத்தாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது. இந்தப் பயணத்தில் நானும் சேர்ந்து பயணித்த வகையில் மனம் நிறைந்த பூரிப்பில் உள்ளேன்.  

தொடர்பியல் மற்றும் இதழியல் துறை பெற்றெடுத்;த குழந்தை ‘முற்றம்’ அதன் தாயுமாய்; தந்தையுமாய் இருப்பவர் பேராசிரியர் முனைவர் கோ.இரவீந்திரன். தேவநாயகம் தேவானந்த் குழந்தையைப் பெற்றுக்கொடுத்த வாடகைத் தாய். வாடகைத்தாயானாலும் உதிரத்தைக் கொடுத்து உயிர்கொடுத்த பாக்கியம் உண்டல்லவா!. தங்கள் குழந்தை தவழ்தலும் நடத்தலும் ஓடுதலும் பாய்தலும் கண்டு தாய் தந்தையோடு வாடகைத்தாயும் ஆனந்தமடைவது இங்கு தான் நடக்கிறது. அவ்வப்போது அந்தக் குழந்தையுடன் கூடிக் கும்மாளமடிப்க்கும் வாய்ப்பு வாடகைத் தாய்க்கு கிடைத்தது. அது தாயும் தந்தையும் தந்த பாக்கியம். 
சென்னைப் பல்கலை;க்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தை அழகு சேர்ப்பதில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு தனிச்சிறப்புண்டு அதன் முன்னே உள்ள ‘முற்றம்’ அழகானது. அதன் உள்ளே இருக்கும் ‘முற்றம்’ கொஞ்சம் ஆக்கிரோசமானது. மணிக்கூட்டுக் கொபுரத்திற்கு நீண்ட வரலாறு உண்டு அதில் பிறந்த குழந்தை ‘முற்றம்’ இன்று வரலாறாகியிருக்கிறது. மணிக்கூட்டு முற்றத்தில் கோ.ரவீந்திரனின் முற்றம் சிரித்து மகிழ்கிறது கோபித்துச் சண்டையிடுகிறது போராடுகிறது சமூகத்துடன் ஊடாடுகிறது மேலும மக்களை காதலிக்கிறது. அழகாக கோலமிடுகிறது. 
இறுக்கமான நியமங்களையும் பாரம்பரியமான வழக்காறுகளையும் கொண்டு பழம் பெருமைபேசி எழுந்து நிற்கின்ற ஒரு பல்கலைக்கழகத்தில் நியமம் தாண்டிய கல்விக்கான களத்தை திறப்பது என்பது மிகக் கடினமான பணி. பழம்பெருமையை ஆண்டாண்டுகால வழங்கங்களை அதனையே தலையில் தூக்கிக் கொண்டாடும் ஒரு சமூகத்தில் புதியவற்றைப் புகுத்துவது மிகக்கடினமான பணி. பண்பாட்டுப்புலத்தில் நோக்கினால் அது ‘பண்பாட்டு அதிர்ச்சியை’ ஏற்படுத்துவது எனலாம். ஒரு பழமையான நியமங்கள் கொண்ட பல்கலைக்கழகத்தில் பண்பாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவதென்பது இமாலயசாதனை என்பேன்.  பண்பாட்டு அதிர்ச்சியே பண்பாட்டுப் புரிட்சிக்கான முதற்படிநிலை. ஒரு புரட்சியை ஏற்படுத்துதற்கு பாடாய்ப்பாடுபட வேண்டும். அதைச் சாத்தியமாக்குவது மிக மிகக் கடினம். அதுவும் பண்பாட்டு அதிர்வைக் கொடுத்து ஒரு பண்பாட்டுக் குழப்பத்தை உருவாக்கி அதன் வழி பண்பாட்டுப்புரட்சியை உண்டாக்குவதற்கு பல தளங்களில் பணியாற்ற வேண்டும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையின் முற்றத்தினால் பண்பாட்டு அதிர்ச்சி ஏற்பட்டது. “வகுப்புக்கு வெளியே வகுப்பு” என்பது அதன் மூலமந்திரம். முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாரா வெளியை உருவாக்கி ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்திருக்கிறது.
சென்னைப்பல்கலைக்கழகம் தன்னை பட்டமேற்படிப்புக்கான கல்விக்களமாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. இங்கு பல்வேறு துறைசார்ந்த மாணவர்கள் தமது முதுமாணி மற்றும் முனைவர் ஆய்வு பட்டங்களுக்காக வருகிறார்கள். இதில் தவணை அடிப்படையிலான கற்கைகள் முக்கியம் பெறுகின்றன. விரிவுரைகள், ஆய்வு அளிக்கைகள் மற்றும் பரீட்சைகள் என்று அது தனக்கே உரித்தான சலிப்பூட்டம் ஒரு ‘வகைமாதிரிச் செல்நெறி’யைக் கொண்டு இயங்குவது வழமை. இதுவே மாணவ மதிப்பீடாகவும் அடைவுகளாகவும்  பேறுகளாகவும் கொள்ளப்படுகின்றது. நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கை நோக்கி நகர்வதற்கு மாணவர்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அது ஒருவகையில் ‘சுயசிந்தனை இல்லாது சொன்னதை திரும்பத்திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை உருவாக்குவது’ போன்றது. ‘குதிரைக்கு லாடம்கட்டிவிட்டது’ போன்றதாகும். ஒரு கரட் துண்டைக்காட்டி கழுதையைக் கூட்டிச்செல்வது போன்றதான நிலைமை. இதனை ஒரு தடவை செய்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்வது சுலபம். 
புதிது புதிதாக உருவாக்குவதற்கும் புத்தாக்கச் செயற்பாட்டுக்கும் வாய்ப்பில்லை. புதிய சிந்தைனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் இதன்வழி உருவாக மாட்டார்கள்.  இதில் ‘மாற்றி யோசி’ என்று  ஆண்டாண்டுகாலம் மூச்சிரைக்க ஓடிய தேருக்கு தடுப்புக்கட்டை போட்டது தான் நூற்றியம்பது ஆண்டுகால பழம்பெருமைமிக்க பண்பாட்டில் முற்றம் ஏற்படுத்திய ‘அதிர்ச்சி’ எனலாம். தமிழ்பண்பாட்டில் மாற்றி யோசித்த பெரியார் போன்றவர்களை சிலாகித்ததும் அவர்களைப் போற்றியதும் இங்கு முக்கியமான விடயங்கள். இதற்கு மேலாக விளிம்பு நிலை மக்களின் கலையாகப் போற்றப்பட்ட  பறையிசையை சென்னைப்பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் ஒலிக்க வைத்தது தான் முக்கியமான பண்பாட்டு அதிர்ச்சி என்பேன். 
2009 நவம்பர் 29 திகதியன்று இது சாத்தியமாகியது. தமிழ்நாட்டின் மாநில அரசுப்பல்கலைக்கழகத்தில் தமிழ் அடையாளங்களான நாட்டார் கலைகளைபட்ட மேற்படிப்புக்காகக் கற்கும் வாய்ப்பு இன்று வரை இல்லை. ஆனால் கர்நாடக இசையும் பரதநாட்டியமும் கற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் சென்னைப்பல்கலைக்கழக கல்வி வெளி என்பது மேட்டுக்குடி மேலோருக்கானது. இன்றும் ‘மேட்டுக்குடி மனப்பாங்கு’ கொண்டே பல கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் அடையாளமாக விளிம்பு நிலை மக்களின் கலையை கொண்டு வருவதும் அதனை நிலைநிறுத்த முயல்வதும் பண்பாட்டில் ஏற்படுத்தப்பட்ட அதிர்ச்சி அல்லாமல் வேறென்ன? அதனை அதே கல்வி நிறுவனத்தின் ஆசிரியராக இருந்து கொண்டு தனது எதிர்கால நலனைக்கருத்தில் கொள்ளாது செய்ய முற்பட்டவர் கோ. இரவீந்திரன் அவர்கள். பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற போது முதலில் நடப்பது நாமே நமக்கான எதிரிகளை சம்பாதித்துக் கொள்வது தான். கண்ணுக்கு தெரிந்தும் கண்ணுக்குப்புலனாகாமலும் இந்தப் எதிரிகள் முளைத்துக் கொள்வார்கள். இதனை பல புலமையாளர்கள் தமது நலன்கருதி விரும்புவதில்லை. ஆனால் கோ.ரவீந்திரன் இத்தனையும் தெரிந்தும் பண்பாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். அவர் பாராட்டப்பட வேண்டியவர், போற்றப்பட வேண்டியவர,; பாதகாக்கப்பட வேண்டியவர். அவரோடு முற்றத்தின் பயணம் புரட்சிகரமாக மேலும் தொடர வேண்டும். 
முற்றம் பத்தாவது ஆண்டு விழாவில் பங்கு கொள்ள ஆவலாக இருந்தேன். பல காரணங்களால் முடியவில்லை. இருப்பினும் முற்றத்தன் பத்தாவது ஆண்டில் நானும் உங்களோடு இருக்கிறேன். 
ஒரு தசாப்த காலமாக பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்கள் விதைத்த விதையின் விளைபயனை பத்தாவது ஆண்டு விழா பறைசாற்றும். முற்றத்தின் தொடக்கப்புள்ளியில் நானும் இருந்திருக்கிறேன் என்பது பெருமகிழ்ச்சி.
2009 நவம்பர் 25ம் திகதியை என்னால் மறக்கமுடியாது. நூற்றாண்டுகால பழமையின் மீதான அதிர்வை ஏற்படுத்திய நாள். அன்றிலிருந்து ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கொருதடவை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் இதழியல்துறையின் எனது மாணவர்களோடு முற்றம் நண்பர்களைச்சந்தித்து நீண்ட தூரங்கள் சேர்ந்து பயனித்திருக்கிறோம்;. இந்த நினைவுகள் பசுமையாக மனதில் கிடக்கின்றன. 
முற்றத்தின் மேனாள் தலைவர் ஆடலரசுவை இரண்டு தடவைகள் யாழ்ப்பாணம் அழைத்து பறையிசையை நிகழ்த்தி முற்றத்தின் வீச்சை இலங்கையிலும் பரப்பியிருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முற்றம் நண்பர்களுக்கு அரங்கப்பயிற்சி வழங்கும் வாய்ப்பை எனது பேறாகவே பார்க்கிறேன். இவை எல்லாம் மீள நினைக்கின்ற போது பேரானந்தமே. ஓவ்வொரு வருடமும் இது இனித் தொடரும்.
நண்பர்களே, பலருக்கு பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கை அனுபவமாக சிறந்த மனப்பதிவாக இருப்பதில்லை . ஏதோ போனோம் வந்தோம் என்ற நினைவுகள் மட்டுமே எஞ்சும். முற்றத்தில் அங்கம் வகித்து அதன் செயற்பாடுகளில் ஈடபட்டவர்களுக்கு கிடைத்த அனுபவம் ‘கல்மேல் எழுத்துப்’ போன்று உங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். அந்த வாய்ப்பைத் தந்த முற்றத்தை நாமெல்லோரும் வாயாறப் போற்றுவோம். இந்த அரிய களத்தை திரு~;டித்துத் தந்த பேராசிரியர் கோ.இரவீந்திரன் அவர்களை எம் நெஞ்சாற வாழ்த்துவோம. அடுத்த பத்தாண்டு கால முற்றத்தின் செயற்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும். நீண்ட நெடிய உழைப்பு வீண்போயிவிடக்கூடாது. முற்றத்தின் அத்தனை செயற்பாடுகளும் ஆவணமாக்கப்பட வேண்டும். முற்றத்தை காலத்துள் வாழ வைக்க நாம் ஒன்றுபடுவோம். அதற்கான உறுதியான அத்திவாரத்தை நாம் போட்டு விடவேண்டும். அது சாத்தியமானதே, அதை நாம் சாத்தியமாக்கலாம். 
விரைவில் யாழ்ப்பாணத்தில் ஒரு முற்றம் விழாவில் உங்களைச் சந்திப்பேன். வீரியமாகவும் வீச்சாகவும் முற்றம் விழா சிறப்பாக நடக்கட்டும். 
தேவநாயம் தேவானந்த்
முற்றம் நிறுவுனர் தலைவர்.
யாழ்ப்பாணம் இலங்கை
இயக்குனர்
செயல் திறன் அரங்க இயக்கம்
யாழ்ப்பாணம், இலங்கை
21.12.2018


No comments:

Post a Comment