Monday, 26 May 2025

சிறுவர் மகிழ்களம் மற்றும் நாடக இரவு : சிறுவர்கள் மகிழ்ந்திருப்பதற்கான அற்புதமான களம்

இ.தே.தே 

தமிழர் சமூகத்தில் கல்வி ஒரு அடையாள மதிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கடுமையான கல்வி நம்பிக்கையால் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து வருகிறார்கள். அவர்கள் கல்விச் சுமையில் சிக்கிக்கொண்டுள்ளார்கள் என்பது ஒரு மறுக்க முடியாத யதார்த்தம். ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசுத் தேர்விலிருந்து ஆரம்பித்து, G.C.E சாதாரணதரம் தொடக்கம் உயர்தரம்வரை, கல்வி கற்றல்; ஒரு போட்டிப் பயணமாகவே மாறியுள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை மருத்துவராகவும், பொறியியலாளராகவும்; வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆசையில், சிறுவர்கள் மீது அதிகமான  அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். 

விளையாட்டு, நட்பு, குடும்ப உறவுகள், இயற்கையுடனான தொடர்புகள், கலாசார பங்கேற்புகள் என அனைத்தும் சிறுவர்கள் மத்தியில் குறைவடைந்துள்ளன. ஒற்றை பிள்ளை குடும்பங்கள் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் வேலைபார்க்கும் சூழலில், குழந்தைகள் அதிக நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கின்றனர். இந்த மெய்நிகர் உலகம் அவர்களுடைய உண்மையான மனித உறவுகளை பாதித்து வருகிறது. இதன் விளைவாக தனிமை, மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள், நடத்தை பிரச்சனைகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. படி படி என்ற அழுத்தத்தைக் தினமும் கொடுத்தாலும் இறுதியாக பெறுபேறுகளைப் பொறுத்தவரை யாழ் மாவட்டம் நாட்டின் மிகக் குறைந்த தரவரிசையில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இது மனசோர்வு மற்றும் உளவியல் ஆதரவு இல்லாத கல்வியால் ஏற்படும் பின்விளைவுகளைக் காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில், சிறுவர்கள் சுவாசிக்க, தம் ஆற்றல்களை கண்டு பிடிக்க, ஆற்றல்களை வெளிப்படுத்த, சுதந்திரமாக செயல்படுவதற்கான இடம் தேவைப்படுகிறது. நாடகம் ஒரு சக்திவாய்ந்த உளவியல் கருவியாகக் கருதப்படுகிறது. சிக்கலான சூழ்நிலைகளில் உள்ள சிறுவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதில் நாடக செயல்பாடுகள் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கடந்த காலகட்டத்தில் யுத்தம் மற்றும் சுனாமி போன்ற பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிகிச்சைகளில் மனச்சுமைத்தணிப்பில், நாடகம், கலை, மற்றும் கதைசொல்லல்; ஆகியவை உளவியல் நலத்திற்கும், சமூக பரிமாற்றத்திற்கும் வலிமையான கருவிகளாக இருந்துள்ளன.

இந்தக் களத்தில், கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் செயல் திறன் அரங்க இயக்கம் என்ற அமைப்பு, நாடகத்தின் வழியே உளநல மேம்பாட்டிற்கான சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளது. ஆந்த அனுபவத்தை மூலதனமாகக் கொண்டு 2024 ஆண்டு யூன் மாதம் 15ம் திகதி நல்லூர் சிறுவர் மகிழ்களம் மற்றும் நாடக இரவு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாண கலைஞர்கள் மன்றம் மற்றும் செயல் திறன் அரங்க இயக்கம் ஒருங்கிணைத்து வாராந்த நிகழச்சியாக நடத்துகின்றன. 

நல்லூர் கோவிலருகே அமைந்துள்ள இயற்கையான திறந்த வெளி அரங்கில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 முதல் 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், விளையாட்டுகள், சுவரில் வரைதல், கைவினைப் பொருட்கள் செய்தல், நாடகம பார்த்தல்;, பாட்டும் நடனமும், நிழலாடல், கதைசொல்லல்;, பொம்மைகள் நாடகம், சிறுவர் நாடகம்  போன்ற கலைசெயல்பாடுகளில் பங்கேற்கின்றனர். இவை அனைத்தும் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, உணர்வுகளை வெளிப்படுத்தவும், குழுவாக செயல்படவும் உதவுகின்றன. இதுவரை 35 வாரங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ள இந்நிகழ்வுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் மிகுந்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் தமிழச்சூழலில் சிறுவர்களுக்கு மிக அவசியமாகின்றன. இதனைப் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. நாடகத்தின் வழியாக மன அழுத்தம் குறையும், உளநலநிலை மேம்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. கலைச் சிகிச்சை சிறுவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு முக்கிய செயற்பாடாகவும் இருப்பதைக் குறிப்பிடுகின்றனர். சிறுவர்களில் நாடகத்தால் உணர்ச்சி வெளிப்பாடு மேம்படுகிறது. நாடகச் செயற்பாடுகளை சமூக உணர்வுப் பயிற்சியாக பயன்படுத்தி சிறந்த விளைவுகளைப் பெறமுடியும். வகுப்பறையில் நடக்கும் கலைச் செயல்பாடுகள் சிறுவர்களின் மனநலத்திற்கு நேரடி பங்களிக்கின்றன என்றும் அந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

இந்த வகையில், “நல்லூர் சிறுவர் மகிழ்களம் மற்றும் நாடக இரவுகள்” நிகழ்ச்சி ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல அது சிறுவர்களின் சிந்தனையை மாற்றும் ஒரு சமூக இயக்கமாக உருவெடுக்கிறது. அதுவொரு புத்தாக்க தூண்டல் நிகழ்ச்சியாகும். இம்முயற்சி தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் நடைபெறுமாயின், நிறையச் சிறுவர்கள் பயன்பெறுவார்கள் அதனால் தமிழ் சமூகத்தின் மனநலம் மற்றும் கலாசார வளர்ச்சிக்கு பங்களிக்க வாய்ப்புள்ளது. இது எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தின் மேடையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment