Dr.தேவநாயகம் தேவானந்த்
இந்தியா-பாகிஸ்தான் மோதல் இந்தியாவிற்கு தெளிவான பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக, சீனா மோதல்களில் எவ்வளவு பங்கு வகித்தது என்பது தான் இங்கு நோக்கப்பட வேண்டியது. சீனா யுத்தத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிரான ஒரு சோதனைக் களமாகப் பயன்படுத்தியது, அதன் ஆயுதங்களை விளம்பரப்படுத்தியது மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பைச் சோதித்தது. இந்தச் சூழலில் இந்திய அயலுறவுக் கொள்கை முக்கியம் பெறுகிறது. இந்தச்சந்தர்ப்பத்தில் இலங்கை மிக முக்கிய ஸ்தானத்திலிருப்பதால் அதனோடுடனான இந்திய உறவு முக்கியமாகிறது.
வரலாற்றுரீதியாக இலங்கை பொருளாதார நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இடர்கால நண்பனாக செயற்பட்டிருக்கிறது. இந்தியாவின் அண்மைய கொள்கையில் முக்கியமானதாக இருப்பது ‘அயல்நாடுகளுக்கு முன்னுரிமை’ என்பதாகும். இதில் ஏனைய அயல்நாடுகளைவிட இலங்கையில் இந்தியாவின் கவனம் மிகஅதிகமாகவே உள்ளதை அவதானிக்கலாம். இந்தச்சூழலில் இலங்கை இந்தியாவின் நேசக்கரத்தை எவ்வாறு பற்றுறிதோடு தொடர்ந்து தனது பொருளாதார நிலைத்த தன்மையைப் பேணப்போகிறது என்பது முக்கியமாகிறது. இலங்கை புதிய அரசியல் கலாச்சாரத்திற்குள் தன்னை நிலைநிறுத்த முற்படுகின்றதான இந்தக்காலகட்டத்தில் தனது அயலுறவுக்கொள்கையை தெளிந்த மனதோடு வடிவமைத்தாக வேண்டும். இந்திய உதவிகளிலிருந்து இலங்கையின் பொருதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய அணுகுமுறைகள் தேவை எனலாம். இலங்கை அரசாங்கம் தனது ‘தறுக்கணித்த’ நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு நகரமுற்படுவதன் விளைவுகளை,; அதன்நகர்வு வேகம் மிக மந்தமாகவே இருக்கிறது. இதற்கு ஏலவே இருந்த நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு புதிய சிந்தனைகளையும் நடைமுறைகளையும் நகர்த்த முடியாத இக்கட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும் இந்திய உதவிகளை துரிதகதியில் பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை நோக்கி நகர்ந்தாக வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியப்பங்களிப்பை பயன்படுத்தும் திறன் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும். சந்தேகங்களையும் தயக்கங்களையும் தாண்டி எதிர்கொண்டு வளரும் உத்தியைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.சென்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் இந்தியா பல புதிய உதவிக்கரங்களை முன்மொழிந்திருந்தது. அவற்றில் பலவற்றை அனுர அரசும் ஏற்றுக்கொண்டிருந்தது.
2020 ஆம் ஆண்டில் முந்தைய அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுகத்தை இலங்கையில் ஒரு முக்கிய வணிக துறைமுகமாக நிலைநிறுத்த முடிவு செய்தது, இந்தியாவின் நிதி உதவியைப் பயன்படுத்தி துறைமுகத்தின் மேம்பாடு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது. இலங்கையின் நிதி அமைச்சகமும் இந்திய ஏற்றுமதி - இறக்குமதி (எக்ஸிம்) வங்கியும் ஜனவரி 2018 இல் இது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருப்பினும் இன்று வரை அதுவிடயமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று அண்மைய ஊடக அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. அதாவது, காங்கேசன்துறை துறைமுகத்தின் புதுப்பித்தல் மற்றும் அதைத் தொடர்ந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (ஆழுரு) இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் தற்போது தான் இறுதி செய்து வருவதாக இலங்கை துறைமுக ஆணையம் (ளுடுPயு) தெரிவித்துள்ளது. இந்திய நிதியில் என்ன செய்வது என்பது திடமாக வரையறுக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்திருந்தது.
வளமான மற்றும் நீண்ட வரலாற்றைக் கொண்ட காங்கேசன்துறை துறைமுகம், 1950 ஆம் ஆண்டு காங்கேசன்துறையில் சிமென்ட் தொழிற்சாலை நிறுவப்பட்டவுடன் வணிகத் துறைமுகமாக அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. ஒரு காலத்தில் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தத் துறைமுகம், உள்நாட்டுப் போரின் முக்கியபங்காற்றியிருந்தது. இந்தத் துறைமுகத்தின் மகத்தான ஆற்றலை அங்கீகரித்த இலங்கை அரசாங்கம், அதை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு சுற்றுலாத் துறைமுகமாக மாற்ற முடிவு செய்தது.
இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் நீரோட்டங்கள், அலைகள் மற்றும் புயல் அலைகளிலிருந்து பாதுகாக்க ஒரு அலைத் தடம் அல்லது நிரந்தர அமைப்பு கட்டப்படும். ஆழமான கப்பல் போக்குவரத்திற்காக துறைமுகத்தை 30 மீட்டர் ஆழம் வரை தோண்டி எடுப்பதும் அடங்கும்.
16 ஏக்கர் பரப்பளவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காங்கேசன்துறை துறைமுகம், கொழும்பு அல்லது ஹம்பாந்தோட்டா போன்ற முக்கிய இலங்கை துறைமுகங்களை விட சிறியது, ஆனால் நாட்டின் துறைமுக வலையமைப்பில் ஒரு தனித்துவமான மற்றும் மூலோபாய பங்கைக் கொண்டிருக்கும். ஒரு சுற்றுலா மற்றும் பயணிகள் துறைமுகமாக உருவாக்கப்பட்டு, தமிழர் தாயகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்த வல்லது. சரக்குகளைக் கையாளுதலில் பெரிய துறைமுகங்களுடன் இது போட்டியிடாது என்றாலும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வடகிழக்கு பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவும் டிசம்பர் 16, 2024 அன்று புதுதில்லியில் சந்தித்தபோது துறைமுக அபிவிருத்தி தொடர்பான உடன்பாட்டுக்கு வந்திருந்தார்கள். இருநாடுகளுக்கிடையிலான அதிகமான இணைப்பு மிக அவசியம் என்ற அடிப்படையில் கடல், வான் தொடர்புககளை அதிகரிப்பது பற்றி உடன்பட்டுக்கொண்டார்கள் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரு பொருளாதாரங்களுக்கிடையில் ஊடாட்டம் கொடுக்கல் வாங்கல் முக்கியமானதாக உணரப்பட்டது.
இந்தக்கலந்துரையாடலில், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டதில் திருப்தி தெரிவித்த அதே வேளையில், ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே பயணிகள் படகு சேவையை விரைவில் மீண்டும் தொடங்குவதற்கு அதிகாரிகள் பாடுபட வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்தின் விரிவான வளர்ச்சிக்கு 61.5 மில்லியன் டாலர் மானியம் வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது.
இலங்கை;கான இந்தியத்தூதுவர் சந்தோ~; ஜா, இரு நாடுகளுக்கும் இலங்கைக்கு அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு முழு ஆதரவை வழங்குவதை உறுதிசெய்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அக்டோபர் 04, 2024 அன்று கொழும்புக்கு விஜயம் செய்தார். அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கே, பிரதமர் ஹரிணி அமரசூரியா, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேராத்துடன் கலந்துரையாடினார். இதன்போது, காங்கேசன்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் மூலம் நவீனமயமாக்க இந்தியா முன்வந்துள்ளது என்பதை அவர் தெரிவித்தார். அதே வேளை 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான 7 முடிக்கப்பட்ட கடன் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மானியமாக மாற்ற முடியும் மற்றும் இலங்கை ரயில்வேக்கு 22 டீசல் என்ஜின்களை பரிசளிக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நுடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு அபிவிருத்தி பற்றி நீட்டிமுழங்கிய அனுர அரசு வடக்குக்கு பயன்தரக்கூடிய பொருளாதார மேம்பாட்டுக்கான நிரந்தர கட்டமைப்பாக உள்ள காங்கேசன் துறை துறைமுகத்தை புணரமைப்பதில் காட்டும் தாமதம் வடக்கின் அபிவிருத்திப பற்றி அக்கறையீனமாகவும் கடந்த அரசுகள் போன்று பாராமுகமாகவும் இருப்பதையே காட்டுகிறது. கையில் நிதியிருந்தும் அபிவிருத்தித்திட்டத்தை ஆரம்பிக்காதது, கையில் வெண்ணை இருக்க நெய்கலைந்த கதையாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment