Dr.தேவநாயகம் தேவானந்த்
இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் (2024) நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் மூஞ்;சைகள் கிளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தேசியம், தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற வார்த்தைகள் இன்னமும் சுவர்களில் கிடக்கின்றன. ஒரு புயல் வந்து போயிருக்கிறது. அதனோடு சேர்ந்து கனமழையும் வந்து போயிருக்கிறது. இத்தனைக்கு மத்தியிலும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகளில் மிச்சமும் சொச்சமுமாக இந்த வார்த்தைகள் காணப்படுகின்றன. அவை ஏதோ அர்த்தம் தருகின்றன. அல்லது புதிய அர்த்தத்திற்காக காத்திருக்கின்றன. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழர்கள் சிங்கள தேசத்துடன் ஒத்தோடத் தயாராகிவிட்டார்கள் என்ற பிம்பத்தை ஆளும்தரப்புக்கு கொடுத்திருக்கிறது. இது பல கேள்விகளையும் புருவம் உயர்த்த வைக்கும் ஆச்சரியங்களையும் தோற்றுவிக்கின்றன. சிங்கள தேசத்தோடு ஓத்தோடுதல் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? உண்மையில் தமிழர்தம் பிரச்னைதான் என்ன? எதனை இத்தனைகாலம் கோரினார்கள் என்பதை மீள் வாசிப்புக்கு உட்படுத்தியாக வேண்டும். இதற்கு நீண்ட, அகண்ட ஆய்வுகளும் விவாதங்களும் அவசியமாகிறது. உண்மையில் தமிழ்தேசம் நீர்த்துப் போயிருந்தால் அதனை உடற்கூற்றாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.