Thursday 14 April 2022

நாடகர் நினைவோடை -01


 இ.தே.தே


நாடகர் ஒருவரது முப்பது வருடகால நாடகத்துறை அனுபவங்களை பதிவிடுவதாக இந்தத் தொடர் அமைகிறது எனலாம். ஈழத்தமிழரின் வரலாற்றின் முக்கியமான மூன்று தசாப்த காலத்தின் நாடக முயற்சிகளின் பதியப்படாத ஒரு பக்கத்தை பதிவிடுவதாக ‘நாடகர் நினைவோடை’; தொடர் அமையும். தொடருக்கான பெயரை முன்மொழிந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் மு.இராமசாமி அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன். 

தனிநபர் நினைவுகளை இரைமீட்பதாக இந்த முயற்சியமைந்தாலும்  நீண்ட பயணத்தின் பட்டறிவாக, நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உள்ளுணர்வுசார்ந்த சுயபார்வையாக மேலும்பலவாக நீளும்.

1990 – 2020 வரையான ஒரு மூன்று தசாப்தகாலம் இலங்கை வடபுலத்தில் எத்தனையோ சம்பவங்கள் பதிவாகி வரலாறாகியிருக்கின்றன.  இதே காலகட்டத்தில் பயணித்த அரங்கப்பயணமும் முக்கியமானது. . இதுவொரு காலப்பதிவு, அதுவே வரலாறாகி நிற்கிறது போலும்.  

நினைவிலிருந்து ஒரு தொடரை எழுத முற்சிக்கின்ற இந்த முற்சியை ‘நினைவு அரங்கு’ என்பதாகக் கொள்ள முடியும். இங்கு "நினைவு." அதன் பொதுவான பயன்பாட்டில், நினைவகத்தில் சேமிக்கப்பட்ட கடந்தகால அனுபவங்களைக் குறிக்கிறது. அந்த அனுபவங்களை நினைவுபடுத்துவது ஒரு திறன் சார்ந்த செயற்பாடு, சிலர் அனுபவங்களை மீள நினைவுபடுத்துவதில் கைதேர்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்வாறான திறன் உள்ளவர்களை நல்ல ஞாபக சக்தியுள்ளவர்கள்; என்று நாம் கூறுவது வழமை. நினைவாற்றல் என்பது அற்புதமான கலை எனலாம். நினைவு ஒருவரது தொடர்ச்சியான உணர்வுக்கு மற்றும் வாழ்விற்கு துணைநிற்கிறது. நினைவகத்தில் சேமிக்கப்படும் சம்பவங்கள் ஒரு மன, உடல் மற்றும் சமூக நிகழ்வு ஆகும். நினைவாற்றல்; ஒரு செயல்திறன் மிக்க செயல். ஒருவர் எதையாவது நினைவில் கொள்ளும்போது, பெரும்பாலும் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ ஒருவித நடத்தைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். எதிர்காலத்தில் சில பணிகளைச் செய்வதற்கான நினைவூட்டல்கள பயன்தரவல்லன. . இதனால் தான் ஞாபக சக்தி அவசியமென்கிறோம். ஞாபகம் வைத்திருப்பது என்பது ஒரு கடினமான வேலை. ஞாபகத்திலிருந்து தான் நினைவுகூரல் ஆரம்பமாகிறது. 

ஒருவரது நினைவகம் எப்போதும் உயிருடன் துடிப்பாக இருக்கிறது, அதை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதைப் பொறுத்து நினைவாற்றல் அமையும். இது வாழ்வின் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளில் -நாம் எப்படி இருக்கிறோம் என்பதில் உள்ள வேறுபாடுகளைக் குறிக்கிறது. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை புரிந்து கொள்ள நினைவு உதவுகிறது. 
"நினைவு" என்ற சொல் பண்டைய கிரேக்க மெனமோசைனில்( Greek Mnemosyne) இருந்து வந்தது. கிரேக்க புராணங்களில், மெனொசைன் நம்பமுடியாத பயங்கர சக்தி கொண்ட பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறது. அதாவது எல்லா புராணங்களையும், நாடோடிக் கதைகளையும் அறிந்தவனாகக் கருதப்படுகிறான். கிரேக்க மெனமோசைன்( Greek Mnemosyne) பின்னர் அனைத்து கலைகளின் தாயாகப் போற்றப்படுகிறது.  குறிப்பாக நடிகனுக்கு தேவையான கலைகளின் தயாகக் கருதப்படுகிறது.

இங்கு ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது ஒரு நடிகரின் கலை ‘நினைவு’ சார்ந்தது. நடிகர்கள் வார்த்தைகளை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒரு நாடகத்தைப் பார்த்தவர்கள் நடிகரைப்பார்த்துக் கேட்பது “எப்படி வரிகள் அனைத்தும் உங்களுக்கு நினைவிருக்கிறது? ” நடிகர்கள் தங்கள் வரிகளை மட்டும் நினைவில் கொள்ளவதில்லை. மேடைச் செயல்கள்;, ஏனைய பாத்திரங்களுடனான உறவுகள், உணர்வு வெளிப்பாடுகள், வெளிப்பயன்பாடுகள், காட்சிக் கட்டமைப்பு தொடர்பு, மேடைக்குள் நுழைவது மற்றும் வெளியேறுகைகள் போன்ற பலவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒரு நடிகன் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர்மூச்சாக இருப்பது நினைவு அல்லது ஞாபகம் எனலாம். நடிப்பு ஒரு செயல்முறை அது ஞாபகம், உளவியல், நரம்பியல், சமூகவியல் மற்றும் தத்துவவியல் சார்ந்தே படைக்கப்படுகின்றது.  

இந்த அடிப்படையில் ஒரு நாடகரின் நினைவுகள் பல்வேறு வகையானவையாகின்றன. நடிகராக, நெறியாளராக, எழுத்தாளனாக, சகநடிகனாக, சகபடைப்பாளியாகவென்று பல்வேறு வகிபாகங்களின் பட்டறிவு, நினைவுகளின் பிரவாகத்தை நாடகர் நினைவோடை எனலாம். இது கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய ஒரு வட்டம்.  
எந்தவொரு விடயமும் மிகவும் பழக்கமானதாக ஆகாவிட்டால் அதை மறந்துவிடுவோம். ஆனால் அது  இதயம், சதை மற்றும் இரத்தத்தின்; ஒரு பகுதியாக மாறிய பிறகுதான், ஒருவரை அறியாமலேயே, அது நினைவில் இருக்கிறது. ஒரு நாடகர் தனது சொந்த நினைவுகளிலிருந்து படைக்கிறார். அந்த நினைவுகளே வரலாறாகிறது. 
1990 காலகட்டம் இரண்டாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட் காலம், இந்தக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் பகுதி இலங்கை இராணுவத்தின் பகுதியென இரண்டாக தெளிவான பிரிப்புக்களுடன் காணப்பட்ட காலகட்டம். நல்லூரில் அமைந்திருந்த முத்திரைச் சந்தியில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பாஸ் வழங்கும் அலுவலகத்தை அமைத்து பாஸ் வழங்கி வந்தகாலகட்டம். முன்னர் மன்னார் மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தாக்குதலணித் தலைவராக இருந்த சலீம் இந்த பாஸ் வழங்கும் அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்ததாக ஞாபகம். யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதும் பாடசாலைகள் மூடப்பட்டன ஒரு ஆறுமாதகாலம் பாடசாலைகள் இயங்கவில்லை. முதலுதவிப்பயிற்சிகளை இலங்கை செஞ்சிலுவைச்சங்கள், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் போன்ற அமைப்புக்கள் நடத்திக்கொண்டிருந்தன. வான்வழித் தாக்குதல்கள் நல்லூர் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தககாலகட்டத்தில் கல்வித்திணைக்களத்தின் முறைசாராக்ல்விப்பிரிவிக்கு திரு சுப்பிரமணியம் பொறுப்பாக இருந்தார். அவர் தலைமையில் பத்திரிகைத் துறை பயிற்சியொன்று ஒழுங்கு செய்து நடத்தப்பட்டது. திரு அருளானந்தம் அதனை முன்னின்று நடத்தினார். அந்தப்பயிற்சி நெறியில் ஆர்வங்கொண்டு இணைந்து கற்றுக்  கொண்டிருந்தேன். யாழ் வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் அந்தப் பயிற்சி நடைபெற்றது. இந்தக்காலகட்டத்தில் பாதைகள் அடைபட்டு பாடசாலைகள் பூட்டப்பட்டு வான்தாக்குதல்களும் n~ல்லடியும் அதிகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணக் கோட்டையில் இராணுவத்தினர் இருந்தார்கள் கோட்டையை மூன்று பக்கமாக சூழ்ந்து விடுதலைப்புலிகள் அரணமைத்து இராணுவத்தினரை வெளியேறாது தடுத்தார்கள். இந்தப்பகுதிகள் போர்களமாக காணப்பட்டன. கோட்டையிலுள்ள இராணுவத்தினரை அகற்றுவதற்கான ஆயத்தங்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டவண்ணம் இருந்தனர். இப்படியான ஒரு நெருக்கடியான சூழலில் நல்லூர் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள ஸ்தான அ.த.க.பாடசாலையில் முறைசாரா கல்விப்பிரிவால் நடத்தப்பட்ட முதலுதவிப்பயிற்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனை ஆரம்பிக்கும் போது விடுதலைப்புலிகளின் அப்போதைய பிரதித்தலைவர் மாத்தையா போன்றவர்கள் வந்திருந்ததும் நினைவிருக்கிறது. இந்தப்பயிற்சியின் தொடர்ச்சியாக மேலும் பல பிரிவுகளுக்கு பயிற்சியளிக்கும் பொறுப்பில் நாமும் துணையாக இருக்க ஒத்துக்கொள்கிறோம். பாடசாலையிலேயே முதலுதவி மையமொன்று உருவாக்கப்படுகின்றது. பாடசாலைகள் மற்றும் வேலைத்தளங்கள் இயங்காத காரணத்தால் பலர் இணைந்து பல பரிவுகளாக முதலுதவிப்பயிற்சிகளை பெற்றார்கள். 
பின்னர் பயிற்சிபெற்றவர்கள் இணைந்து வான்தாக்குதலின் போது காயப்படுபவர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை வழங்குவதற்காக முதலுதவி மையங்களை அமைத்தார்கள். வான் தாக்குதல் நடக்கும் போது அந்தப்பகுதிக்கு ஓடிச்சென்று முதலுதவி வழங்குவதில் உள்ள அபாயமுணர்ந்து காயப்படும் ஒருவர் தமக்கான முதலுதவியை தாமே செய்ய முற்பட வேண்டும் என்ற நோக்கம்கருதியே பரவலாக அந்தப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களாக தாமாக முன்வந்து இந்தப்பயிற்சியைப் பெற்று தம்மையும் அயலிலுள்ளவர்;களையும் பாதுகாத்தார்கள். முதலுதவி மையத்தில் உள்ளவர்கள் தாக்குதல் நடந்த பின்னர் களத்துக்கு சென்று தேவையானவர்களுக்கு உதவுவது மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசபாலை அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். முத்திரைச்சந்தியில் பாஸ் வழங்கும் அலுவலகம் அமைந்திருந்த காரணத்தால் அடிக்கடி அந்தப்பகுதி வான்தாக்குதலுக்கு ஆளாகி பலர் காயப்பட்டார்கள் சிலர் இறந்தும் போனார்கள். காலை, மதியம், இரவு எவ்வேளையிலும் தாக்குதல் நடைபெறலாம். நல்லூர் தேரடி, சங்கிலியன் சிலை அருகில், சைங்கிலியன் வீதி, கோவில் வீதி சந்தி, மூத்த விநாயகர் வீதி என்று பல இடங்களில் நடந்த வான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி செய்து வைத்திய சாலை அனுப்பிய நினைவுகள் உண்டு. இந்தக்காலகட்டத்தில் நீண்ட நாட்கள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாமையால் அயலிலுள்ள சிறுவர்களை அழைத்து பாதுகாப்பான சூழலில் பாடம்சொல்லிக்கொடுக்கும் பணியையும் இந்த முதலுதவி மையங்கள் மேற்கொண்டன. பெரிய பங்கர் அமைத்து தென்னைகளை வெட்டி அடக்கி அதற்கு மேலே மண்மூடைகளை போட்டு பாதுக்hப்பு ஏற்பாடுகள் செய்ததும் நினைவிருக்கிறது. இந்த நிலைமைகள் சற்று நீண்டு செல்ல கல்விகற்க வந்த மாணவர்கள் நவராத்திரிக்கு கலைநிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலுதவி மையத்திலிருந்தவர்களும் ஒன்றிணைந்து வில்லிசை மற்றும் நாடகம் சுயமாக தயாரித்து மேடையேற்றினார்கள். 
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் சிறிதேவி வில்லிசை குழுவின் சர்மா அவர்களை அணுகி ஒரு வில்லிசை எழுதித் தருமாறு கேட்டோம். அவர் ஈழதாகம் என்ற வில்லிசையை எமக்காகப் பழகினார். குகன், ரட்னேஸ் , தமிழ்செல்வன்,சிவா என்று பலரும் இணைந்து அந்த வில்லிசையை நடத்தியதாக நினைவு. நான் அதில் நகைச்சுவையாளன் வில்லிசையில் பிரதான கதைசொல்லியை கதை சொல்லத்தூண்டுகின்றவர், கேள்விகள் கேட்பார் நகைச்சுவையாகப் பேசுவார். அந்த வில்லிசையில் இரண்டு  காதிலும் பெரிய செவ்வரத்தப் பூ வைத்து மேலாடை இன்றி வெற்று உடம்பாக திருநீற்று பட்டை நெற்றியில் இட்டு தோற்றத்திலும் பார்க்கின்ற போது சிரிப்பு ஏற்படுவதாக இந்த நகைச்சுவையாளன் காணப்பட்டான். இது பாடி கதைசொல்லி அப்போதயை யுத்த சூழலை விளக்கிய ஒரு வில்லிசை. இந்த வில்லிசையை பல இடங்களில் மேடையேற்றினோம். இது மேடையேற்றிக்கொண்டிருக்கும் போது யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப்புலிகள் வசம் வீழ்ந்து விட்டது. ‘கோட்டையில் ஓட்டை போட்டு ஆமி ஓடிப்போனான்’ என்று உரையாடிய நினைவுண்டு. 
இந்தக்காலகட்டம் மிகநெருக்கடியான காலகட்டம். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது பலர் காயப்படுகிறார்கள்,சிலர் இறக்கிறார்கள், பொருளாதாரத் தடை மண்ணெண்ணை, சோப் எதுவும் கிடைக்காத நிலை முதலுதவி மையங்கள் முதலுதவி வழங்க அமைக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் அந்த மையங்கள் கலை விழாக்கள் நடத்தினார்கள். ஒவ்வொரு முதலுதவி மையங்களிலும் கலைவிழாக்கள் நடைபெற்றன. இது நெருக்கடியான சூழலில் மனவிடுவிப்புக்கானதாகவும் காணப்பட்டிருக்கிறது போலும். அந்த விழாக்களில்; பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளலயம் என்ற ஒரு நாடக வடிவத்தை சுப்பிரமணியம் சேர் எழுதி பழக்கி மேடையெற்றியிருந்தார். ஒரு சந்தத்திற்கு ஒரு கதையை கூறுவது. இலகுவான கதைசொல்லல் உத்தி எவரொருவரும் இலகுவாக பழகி இதில் நடிக்க முடியும். 

இந்தக்காலகட்டத்தில் ஸ்தான அ.த.க.பா முதலுதவி மையம் கலைவிழா ஒழுங்கு செய்கிறது. அதில் பலர் நிகழ்ச்சிகள் செய்கிறார்கள். நாங்கள் அதில் ஒரு நாடகத்தை மேடையேற்றினோம். 

தொடரும்


 

No comments:

Post a Comment