Saturday 9 April 2022

பேரிடர்காலத்தில் சிறுவர் மனச்சுமைத் தணிப்பு அரங்கு


யாழ் தினக்குரல் பத்திரிகையில் ஞாயிறு தோறும் வெளிவந்த இந்தத் தொடர்  இங்கு மீள்பிரசுரமாகிறது. 

தொடர் -01 

தேவநாயகம் தேவானந்த்

COVID 19 வைரஸ் பரவல் உலகெங்கலும் பல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றது. சமூகமுடக்கம், பொருளாதார மந்த நிலை, புதிய வாய்ப்புக்களுக்கான வழிகள் திறக்கப்படாமை, கல்விக்கூடங்கள் மூடப்பட்டமை என்று பல நெருக்கடிகால நிலைமைகள் சிறுவர்கள் மீது பலவிதமான மன அழுத்தங்களைக் ஏற்படுத்தியிருக்கின்றன. பாடசாலைச்சூழல் இல்லாது போனதால் பாடசாலைப்பருவத்தின் மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் இல்லாது போகின்றன. சகபாடியுடன் உறவாடும் மற்றும்; நட்புக்கொள்ளும் வாய்ப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. நண்பர் வட்டத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல் போன்ற பல பாடசாலைப்பராய வனப்புக்கள் இல்லாமல் போயிருக்கின்றன. 

சும்மாயிருக்கும் சிறுவர்களுக்கு பாடங்களைகற்பித்தால் போதும் என்று சிந்திக்கப்படுகிறது. பாடங்களைக்கற்பதற்கு இணையவழிக்கல்வி ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. தொலைதூரத்திலிருந்தபடி மாணவரும் ஆசிரியரும் மென்செயலி வழி இணைந்து கற்றால் போதும் என்ற சிந்தனை உருவாகிறது, இருந்தாலும் அந்த புதிய கல்விக்கான களமும் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை காணலாம்.



பாடசாலை என்பது ஒரு குறித்த நேரத்துக்குரியதென்றும் கற்பதற்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டது என்றும் எண்ணியிருந்த மாணவர்கள் இப்போ அதிகாலை தொடக்கம் மதியம், மாலை, இரவு என்று என்நேரமும் இணையவழி வகுப்பறைகளுக்குள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். இணையவழி கற்றல் என்பது ஒருமுகத் தன்மை கொண்டது. ஒரே இடத்திலிருந்து ஆசிரியர் கொட்டித்தீர்ப்பதை விழுங்கிவிடவேட்டிய கட்டாயத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். பன்முகத் தன்மையுடைய கற்றல் இல்லாது போயுள்ளது. உயிரோட்டம் இல்லாது ஒரு வகையான சலிப்பூட்டும் தொடர்பாடலை அவதானிக்கலாம். இதனாலும் சிறுவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இணையவழிக்கற்றலில் மாணவர்களுக்கு ‘ஓம் சேர்’,  ‘நன்றி சேர்’ போன்றவற்றை ஒரு கோரசாக சொல்வதற்கான வாய்ப்பு மட்டுமே கிடைக்கின்றது. இந்தச்சுழலால் ஏற்பட்ட மனச்சுமையைத் தணிப்பது எவ்வாறு என்று சிந்திக்கின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இங்கு ஒரு விடயம் முக்கியமானது இந்தக்காலகட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற மனச்சுமை முற்றாக இல்லாது செய்யாது விட்டாலும் மனச்சுமையைத் தணிக்க முடியும். அதற்கு சிறுவர் நாடக அரங்கச் செயற்பாடுகளைப் பிரயோகிக்கலாம். இந்தக் களத்தில்  பெற்றோர்களும் சிறுவர்களும் இணைந்து செயற்பட வேண்டியிருக்கும்.


நெருக்கீடுகளில் வாழ்வது தமிழ்சமூகத்திற்கு புதிதானதல்ல, யுத்த காலத்திலும் சிறுவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கினார்கள். சுனாமியின் தாக்கம் வேறொருவகை நெருக்கீட்டைத் தந்தது. அப்போதெல்லாம் மனச்சுமையை இறக்கி வைக்க மனித உறவாடல்கள் துணையாக இருந்தன. ஓடியாட முடிந்தது. நகர்ந்து அயலில் உள்ளவர்களிடம் செல்ல முடிந்தது.தமது மனச்சுமைகளைதக் கொண்டித்தீர்க்க முடிந்தது. பிறர் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சிகொள்ள முடிந்தது. ஆனால் இப்போது முகத்தை முழுமையாகப்பார்த்து பேச முடியவில்லை, அருகில் இருக்கமுடியவில்லை ஒட்டியுறவாட முடியாத நிலை இந்த நிலையில் சிறுவர்களை தொழில்நுட்பத்திடம் அடகுவைக்கவேண்டியிருக்கிறது. சடப்பொருளுடன் தொடர்பாடு என்று சிவனேயென்று இருந்துவிட முடியாதுள்ளது. குழந்தை உளவியலாளர்கள் இந்தச் சூழ்நிலை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்தப் பேரிடர் நிலையால் மனித உறவில் பாரிய விரிசல் ஏற்படலாம் என்று குறிப்பிடுகிறார்கள். அது பற்றிய ஆய்வுகள் அவசியமாகின்றன. 


சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியம் பற்றிப் பேசப்படுகின்றன. கணனியிடமும், கைபேசியிடமும் தொலைக்காட்சியிடமும் சிறுவர்களைக் கொடுத்து விட்டு இருப்பதால் நெருக்கடிக்காலத்தை ஓட்டிவிடலாம் என்பது சரியல்ல என்பதையும்  அது இன்னொரு நெருக்கடியைக் உருவாக்குகிறது என்பதை உணரத் தொடங்குகின்றோம்.


நெருக்கடியான காலகட்டங்கள் எப்போதும் சமூக நெருக்கடிகளை உருவாக்கும் ஆனால் அதிலிருந்து மீள்வதற்கு முயற்சித்தாக வேண்டும் கிடைக்கும் வளங்களையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும். எம்மிடமுள்ள மனச் சுமைத்தணிப்பு பணியை பல தசாப்தங்களாகச் செயற்படுத்தி வருகின்ற நாடக அரங்கை இதற்காக பயன்படுத்தும் நோக்கம் கருதியதே இந்தத் தொடர். 


சிறுவர்களின் மனச்சுமை சமூக மனச்சுமையின் ஒரு அங்கம், ஆகவே இங்கு சமூக உளவியல் பற்றியும் சிந்தித்தாக வேண்டும். ‘உளசமூகம்’ என்ற சொல் மனித அனுபவத்தின் உளவியல் அம்சங்களுக்கும் பரந்த சமூக அனுபவத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை வலியுறுத்துகிறது. உளவியல் விளைவுகள் ஒருவரின் அறிவாற்றல் (எண்ணங்கள் மற்றும் கற்றலுக்கான அடிப்படையான கருத்து மற்றும் நினைவகம்), உணர்ச்சிகள் மற்றும் நடத்தை உள்ளிட்ட பல்வேறு நிலைகளின் செயல்பாட்டை பாதிக்கும். உறவுகள், குடும்பம் மற்றும் சமூகவலையமைப்புக்கள்;, கலாச்சார மரபுகள் மற்றும் பொருளாதார நிலை, பள்ளி அல்லது வேலை போன்ற வாழ்க்கை பணிகள் உட்பட்டவற்றை உள்ளடக்கியதாக சமூக உளவியல் காணப்படுகிறது. இது பேரிடர்காலத்தில் பாதிப்புக்குள்ளாகிறது. இன்றைய கோவிட் 19 காலகட்டத்தில் குடும்ப உளவியல் அதிகளவு பாதிக்கட்டு வருவதை குறிப்புணர்த்துகிறார்கள். இதனால், சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். குடும்ப உளநல நல்வாழ்வுக்கான செயற்பாடு பற்றி சிந்திக்க வேண்டும், அதன் மேம்பாடு சமூக உளநல மேம்பாடாக வளர்ச்சியடையும். இந்தப்பணியில்; உடல்நலம், உயிரியல், உணர்ச்சி, ஆன்மீகம், கலாச்சார, சமூக, மன மற்றும் பொருள் அம்சங்களை ஒன்றிலிருந்து பிரிக்க முடியாது என்ற கருத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் இந்த விடயங்கள்; பரந்த குடும்ப மற்றும் சமூக வலைப்பின்னல்களின் ஒருவருக்கொருவர் கவனிக்க வேண்டிய விடயங்களை வலியுறுத்துகின்றன.


உளம், சமூகம் இந்த இரு அம்சங்களும் சிக்கலான அவசரநிலைகளின் பின்னணியில் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து பாதிப்புக்குள்ளாகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதும் முக்கியமானது, மனிதாபிமான நிவாரண உதவிகள் மற்றும் ஆரம்பகால மீட்பு முயற்சிகளும் இதன் ஒரு பகுதியாகும். ஆனால் அவை மட்டுமே போதாது புதிய சூழலால் ஏற்படும் மனச்சுமையைத் தணிக்க வழிவகைகளைத் தேட வேண்டியிருக்கிறது.


வீட்டில் இருந்தபடியே அதற்கான செயலியக்கத்தை கண்டு கொள்ள முடியும். இதற்கு சிறுவர் அரங்கு சிறப்பாகப் பணியாற்ற முடியும். கடந்த காலங்களில் யுத்தத்தால் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட  சிறுவர்களோடு பணியாற்றிய அனுபவங்களின் வழியாக பல சிறுவர் அரங்கச் செயலியக்கங்கள் இனங்காணப்பட்டன. அவை பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம். 


No comments:

Post a Comment