Tuesday 14 June 2022

போரில் சிக்கிய பெண்ணின் கதைபேசும் “பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்”


போர் எமக்குப் பாதுகாப்பாக இருந்த பலவற்றை அழித்தொழித்துச் சென்றுவிட்டது. எமது சூழல், உறவுகள், கட்டமைப்புக்கள் அனைத்தும் மீள் உருவாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. எமது பலமென்று நாம் சொல்லிவந்த “குடும்ப நிறுவனம்” சிதைவடைந்து உருமாறிக் கிடக்கிறது. வீட்டு மண்டபங்களில் வெள்ளை – கறுப்பு நிறங்களில் தொங்கிக் கிடந்த குடும்பப் படத்தை பார்க்கின்றபோதெல்லாம் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய குடும்பப் படத்தை இனி எவ்வாறு எடுப்பேன் என்று ஏங்கியபடி வீட்டுக்குள் கிடக்கும் பெரியவர்களின் துடிப்பு இருபது வருடப் போர் தந்த சீரழிவைச் சுட்டி நிற்கின்றன.

எமக்குப் பலம் தந்த பண்புகள், பண்டங்கள், பாரம்பரியங்கள் வெள்ளம் போல் வந்த போரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவை மீளக் கண்டுபிடிக்கப்படவேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். வாரி எடுத்துச் சீராட்டப்பட வேண்டும். இவற்றுக்காக நின்று நிதானிக்க நேரம் தேவை. ஆற, அமர இருந்து அலசி ஆராய ஆறுதல் தேவை. இதற்கு குடியிருக்கும் வீடு, வளவு, ஊர், உறவு எனப் பலதும் தேவை. இவை எமக்குமீளக்கிடைப்பதற்கு முன் புதிய சிந்தனைகளை, சித்தாந்தங்களுடன் கூடிய செயலாமர்வுகள், கருத்தரங்குகள், பட்டறைகள், பகட்டுக்கள் நடத்தப்பட்டு மூளைகள் சலவை செய்யப்படுகின்றன. இது போதாதென்று தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் சின்னத்திரை புகுந்து முறிவை ஏற்படுத்தி நிற்கிறது.

இன்று, பல்வேறு நிறுவனங்களும் தமிழர் தாயகப் பிரதேசத்திற்குள் நுழைந்து “பாவம் மக்கள்”, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உலாவுகிறார்கள். அவ்வாறு அலையும் அனைவரும் “பௌதிக கட்டுமானம்” பற்றியும் பொருள்கள் விநியோகிப்பது பற்றியும் அதிகம் சிந்திக்கிறார்கள். பொருள்களைக் கையாளும் மனிதன் பற்றி, பொருள்களோடு ஊடாடும் மனிதன் பற்றி, அவனது “ஆத்மா” பற்றி “ஆத்மாவின் அபிவிருத்தி” பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நல்லவீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதில் குடியேறுவதற்கு சுயசிந்தனையும் திறன்களும் உள்ள மனிதர்கள் இல்iயென்று பலரும் ஆதங்கப்படுகிறார்கள். நாம், சுய சிந்தனையையும், மீயாற்றலையும் விருத்தி செய்கின்றபோது பல நல்ல வீடுகள் தானே கட்டப்படும். இதுவே, அகதிகள் புர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கம். இந்த எண்ணத்தை மனதில் கொண்டு சாவகச்சேரி பிரதேசச் செயலர் பிரிவில் உள்ள இருபது கிராமங்களில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் வேலை செய்துவருகிறது.

பெண்கள் நிறுவனமயமாக வேண்டும். அவர்களின் திறன் விருத்தியாக வேண்டும் என்பதற்கானபல்வேறு செயற்றிட்டங்கள் முன் எடுக்கப்படுகின்றன. பெண்கள்தம்மைத் தாமே உணர்ந்து கொள்ள சுயசிந்தனையைப் பெற்றுக் கொள்ள, சுயபொருளாதாரத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்பது இத்திட்டத்தின் அடிப்படைத்தத்துவம்.

ஒரு பெண்ணின் பொருளாதார மேம்பாட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டும் போதாது. பணத்தைப் பெற்று சுயமுயற்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன் “தன்னால் முடியும்” என்ற நினைப்பை அவள் பெற்றுக்கொள் வேண்டும். “துணிவு பெறுதல்” என்பது மனதொடு, ஆத்மாவோடு தொடர்புடையது. அந்தப் பணியைச் செய்வனே செய்தோமானால் “பெண் சுயசார்பு” நிலையை அடைதல் சாத்தியமானதொன்றாக இருக்கும். இந்தப்பணியைச் செய்வதற்கு அரங்கு அவசியமென்று உணரப்பட்டிருக்கிறது. பெண்களுடன் பேசுவதற்கும், பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கும், அணிதிரள்வதற்கும் அரங்கு ஒரு கருவியாகி உதவியிருக்கிறது. துணிவு பெற ஊக்குவித்த பிறகுதான் பெண்களுக்கு சுயமுயற்சிக்காக நிதிகொடுக்க முற்படுகிறது அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்.

அதற்காக, செயல் திறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் “பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்” என்ற நாடகத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றத் திட்டமிட்டிருக்கிறது.

“பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்” நாடகம் போருக்குள் சிக்குண்ட பெண்ணொருத்தி பற்றிப் பேசுகிறது. துணை இழந்த தவிப்பு, சுருங்கித் துவண்டு கிடக்கும் உடம்பு, துயர் வெல்லும் திறன், வேர்கொண்டெழும் ஆற்றல் என்றவாறான பல்பரிமாண வீச்சுக் கொண்ட பெண்ணொருத்தி மேடையில் நிக்கிறாள். சாதாரண குடும்பப் படத்துடன் ஆரம்பமாகும் நாடகம் பல்லாற்றல் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் குடும்பப் படத்துடன் முடிகிறது. இதுவே போரின் பின் உள்ள “யதார்த்தம்” அதுவே எமக்குள்ள பலம் என்றவாறான எண்ணப்பாங்கு முன்னிறுத்தப்படுகிறது.

நாடகத்திற்கான கரு ஊர்கள் தோறும் களநிலைச் செயலாளிகளும் அரங்கச் செயலாளிகளும் ஊடாடியபோது பெற்றுக் கொள்ளப்பட்டது. சிறுசிறு அரங்காற்றுகைகள் கிராமங்களில் நிகழ்த்தப்பட்டன. அப்போதெல்லாம் அங்கு கூடி நின்றோரின் தெறிப்புக்கள், பிரத்தியேக உரையாடல்களின் போது எழுந்து நின்றவைகள் அரங்க வெளிக்குள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.

“பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்” நாடக மேடையேற்றத்திற்குப் பலரும் தங்கள் ஆதரவை நல்கி ஒத்துழைத்திருக்கிறார்கள். நாடக, தயாரிப்பு மேடையேற்றத்திற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் சமாதான செயலணி வழங்கிய ஆதரவு குறிப்பிடக் கூடியது. இந்த உதவிகளினால் சேகரிக்கப்படுகின்ற நிதி முழுமையையும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கு பயன்படுத்த முடியும். அனைவரினதும் ஒத்துழைப்புடனும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சுயசார்பு நிலையை அடைவார்கள் என்று நம்பலாம்.

----------------------------

 

அபினாஸ்

உதயன்

22.02.2005


‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடக மேடையேற்றத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுரை.

இடம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு

கால் 23.02.2005 காலை 10.30 பிற்பகல் 3.30 மணி


No comments:

Post a Comment