Friday, 23 May 2025

இலங்கையின் பழைய காவலர் கறைபடிந்த மரபுக்குச் சொந்தக்காரன்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரபல ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் தொகுத்து வழங்கிய அல் ஜசீராவின் "ஹெட் டு ஹெட்" நிகழ்ச்சியில் ஒரு உயர்மட்ட நேர்காணலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி யூடியூப்பில் மார்ச் 6 அன்று முதன்முதலில் ஒளிபரப்பரப்பப்பட்டது. இது ரணிலின் அரசியல் வாழ்வை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. அவரது முரண்பட்ட அரசியல் சிந்தாந்த்தை வெளிப்படுத்தி நிற்கிறது. 


அல் ஜசீராவின் "ஹெட் டு ஹெட்" தொடர் அதன் கடுமையான மற்றும் இடைவிடாத கேள்விகளுக்கு  பெயர்பெற்றது. இது தலைவர்களை திண்டாடச் செய்யும் மேலும் தமது கடந்தகாலச் செயற்பாடுகளுக்காக பொறுப்புக்கூற வைக்கும் நோக்கைக் கொண்டது. ரணிலின் அமர்வும் அதற்கு விதிவிலக்கல்ல. ஹசனின் கூர்மையான கேள்விகள் அவை ஒவ்வொன்றும் உரிய ஆய்வின் அடிப்படையாக இருந்ததன் காரணமாக  ரணில் வெளிப்படையாகவே பதட்டமடைந்தார். நேர்காணல் முழுமையும் அமைதியைப் பேண போராடினார். ஒரு கட்டத்தில், கேள்விகளின் நேரடித்தன்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல முறை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். தான் நேர்காணலின் இடையே வெளியேறப்போவதாகவும் கூறினார். 

இந்த நேர்காணலின் தொனி முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்மறையாக இருந்ததை மறுப்பதற்கில்லை. இலங்கை அரசியலில் ஒரு வலுவான கோபம், விரக்தி மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றின் உணர்வு அதில் இருந்தது. அது நியாயமானதும் கூட. 

முன்னாள் ஜனாதிபதி மீது ஊழல், மனித உரிமை மீறல்கள் குறிப்பாக படாலாண்டா சித்திரவதை முகாம் மீறல்கள் , பொருளாதார முறைகேடு, ராஜபக்சே குடும்பத்தைப் பாதுகாத்தல், ஈஸ்ரர் தாக்குதலுக்கு பொறுப்புக்கூறத்தவறியமை, 83 இனக்கலவரத்தைத் தடுக்கத் தவறியமை, மக்கள் கிளர்ச்சியை அடக்கியமை  போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

அல் ஜசீரா ரணிலின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டுவருவதில் வெற்றிகண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இந்த நேர்காணலை ஒரு இலங்கை அரசியல்வாதி சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூற வைக்கப்படும் ஒரு அரிய நிகழ்வாக பார்க்கலாம்.  

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை காத்திரமான நமபகத்தன்மையுள்ள எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை, எடுக்க விரும்பவில்லை என்பதை ரணிலின் வெளிப்படுத்துகை உணர்த்துகிறது.  தமிழ் பொதுமக்களுக்கு எதிராக அரசாங்கமும் இராணுவமும் செய்த அட்டூழியங்களுக்கு சர்வதேச நீதிவிசாரணை தேவை என்பதை இது உணர்த்துகிறது. 

அதே வேளை இலங்கையின் 2022 பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட அரகலயா மக்கள் போராட்டம். நாடு திவால்நிலை அடைந்தது, பொருளாதார நெருக்கடிக்கு ரணிலும், ராஜபக்சே குடும்பத்தினரும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். அவற்றில் 2022 ஆம் ஆண்டின் பெரிய பொருளாதார சரிவுக்கு முந்தைய மத்திய வங்கி பத்திர மோசடியும் அடங்கும்.

ரணிலின் கருத்துக்கள் அரசியல் அமைப்பிற்குள் பரவலான ஊழல் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த நேர்காணலைப் பார்க்கும் போது இலங்கையின் அரசியல் உயரடுக்கு மீதும் அதன் பழைய காவலரின் மீது ஆழ்ந்த விரக்தியும் வெறும்பும் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. இது இலங்கை அரசியல்வாதிகள் சுயநலவாதிகள், பொறுப்பற்றவர்கள் என்று கருதத் தோன்றுகிறது. அரசியல் அமைப்பு நிர்வாகம் நீதி அனைத்திலும்; "அமைப்பு மாற்றம்" தேவை என்பதை வலியுறுத்துகிறது. ஒரு அரசாங்கம் கடந்த கால குற்றங்கள், ஊழலுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு கடமைப்பட்டது என்பதை வெளிப்படுத்திநிற்கிறது இந்த நேர்காணல்.  ஆகவே புதிய அரசாங்கம் தன்மீதானநம்பிக்கையையும் இலங்கையில் முறையான மாற்றத்திற்கான விருப்பத்தையும் ஏற்படுத்தும் பொறுப்பைக்கொண்டுள்ளது. 

இங்கு, கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாக்கும் எந்தவொரு முயற்சியையும் ரணிலின் உறுதியாக மறுத்தார், இலங்கையில், சட்டமா அதிபரே வழக்குத் தொடர்வது தொடர்பாக முடிவு செயய வேண்டும் என்று வலியுறுத்தினார். 2022 இல் ராஜபக்ஷவை இலங்கைக்குத் திரும்ப அனுமதித்த தனது முடிவை அவர் நியாயப்படுத்தினார்;. மேலும், ரணிலில் கருத்துக்கள் கத்தோலிக்க திருச்சபையின் பேராயரின் குற்றச்சாட்டுகளுடன் முரண்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.  இது "முட்டாள்தனம்" என்று நிராகரித்தார், அவை கத்தோலிக்க திருச்சபையின் அரசியல் சூழ்ச்சி என்றும் கூறினார்.


மேலும் இந்த நேர்காணலில் போரினால் பாதிக்கப்பட்ட எந்த சமூகத்திற்கும் நீதி வழங்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், இலங்கைப் படைகளால் மருத்துவமனைகள் மீது பெரிய அளவிலான குண்டுவீச்சுகளை அவர் மறுத்தார், இருப்பினும் மருத்துவமனைகள் தாக்கப்பட்ட சில நிகழ்வுகளை அவர் ஒப்புக்கொண்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை போர்க்குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டும் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை மீண்டும் நியமிப்பது குறித்த அவரது நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார். 

1980களின் பிற்பகுதியில் ரணிலின் கண்காணிப்பின் கீழ் இருந்த ,  பட்டாலந்தா என்ற வீட்டு வளாகம் தொடர்பான சித்திரவதை மற்றும் கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தது இந்த நேர்காணலின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். அரசாங்க விசாரணை அறிக்கையில் அவர் அங்குள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து அறிந்திருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், விக்கிரமசிங்கே இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்து, அறிக்கையின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினார், ஏனெனில் அது ஒருபோதும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த நேர்காணல் வெளியான பின்னர் ரணில் வெளியிடும் தகவல்கள் அவர் எவ்வளவு அடிப்படைவாதியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, அல் ஜசீராவும் மெஹ்தி ஹசனும் இலங்கைக்கு எதிராக ஒரு சார்புடையவர்களாகவும், புலிகளுக்கு ஆதரவான அல்லது சிங்கள எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயல்கிறார். ரணில் ஆதரவாளர்கள் இந்த நேர்காணல் தமிழ் புலம்பெயர்ந்தவர்களால் அரங்கேற்றப்பட்டதாக, நிதியளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். 

மொத்தத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பௌத்த மேலாதிக்க மனநிலையுடையவர், இனத்துவேசம்மிக்கவர், ஊழல்வாதி, கொலைகாரன், ராஜபக்சக்களின் பாதுகாவலர, இனக்கலவரங்களை ஆதரித்தவர்; மற்றும் இலங்கையின் பொருளாதார துயரங்களுக்கு பொறுப்பானவர் என்பது நிருபணமாகியிருக்கிறது. ஆனால், இவரையே முன்னாள் தமிழ் அமைச்சர் இலங்கைக்கான சர்வரோக நிவாரணி ரணில் என்று குறிப்பிட்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தது முரண்நகையாக உள்ளது. 

இறுதியில், நேர்காணல் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையின் சிக்கலான மற்றும் பெரும்பாலும் முரண்பாடான மரபை வெளிப்படுத்தியது. 


No comments:

Post a Comment