Showing posts with label Chinees Dragon. Show all posts
Showing posts with label Chinees Dragon. Show all posts

Saturday, 31 May 2025

பெருநிறுவன உணவு தட்டில் தொலையும் யாழ்ப்பாணச் சுவை

 - திணிக்கப்படும் உணவு அரசியலுக்கெதிராக குரல் கொடுப்போம் - 

Dr.தேவநாயகம் தேவானந்த்


சென்ற வாரங்களில் சூடான செய்தியாக இருந்தது நல்லூரில் புதிதாகத் திறக்கப்பட்ட Barista உணவுப்பெரு நிறுவனத்தின் கிளை திறப்பும் அதற்கெதிராக சைவ அமைப்புக்களின் போராட்டமும் ஆகும். போராட்டத்திற்கான காரணம் நல்லூருக்கு அண்மையில் மாமிச உணவுப்பரிமாற்றம் கோவிலின் தூய்மையைக் கெடுக்கிறது என்பதாகும். இதில் முன்னெப்போதும் இல்லாது சைவ அமைப்புக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தியிருந்தன. இங்கு, பல்தேசிய உணவு வலையமைப்பு மாநகர சபையில் அனுமதி பெறாமலே அந்தக்கிளையைத் திறந்ததாகவும். மாநகர சபை அதற்கெதிராக வழக்குப்பதிவு செய்வதாகவும் பேசப்பட்டது. இதற்கிடையில் குறித்த பல்தேசிய உணவு வலையமைப்பு தாம் அந்தக்கிளையில் மாமிச உணவு பரிமாறமாட்டோம் என்று ஒரு பனர் வைத்ததோடு அந்தப்போராட்டம் நீர்த்துப்போனது. இதே போல சில மாதங்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு பிரியாணிக்கடைகள் அதிகளவில் வருகின்றன என்று தனது விசனத்தைப்பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் ஆழ அகலங்கள் பற்றி சிந்தித்து அதன் அரசியல் பற்றிய தெளிவோடு எமது அரசியல் தலைமைகள் செயற்படுகின்றனவா? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஏனெனில் இத்தனை கலவரங்களுக்கு மத்தியில் நல்லூருக்கு அண்மையில் இன்னொரு பல்தேசிய உணவு வலையமைப்பான Chinees Dragon தனது கிளையைத் திறக்க ஆயத்தமாகிறது.