Showing posts with label Srilankan radio. Show all posts
Showing posts with label Srilankan radio. Show all posts

Thursday, 5 October 2023

வானலையில் தமிழ் ஒலி -18 : சமுதாய வானொலியாக புலிகளின் குரல்




வானொலிகளில் முக்கியமானதாகக் கருதப்படுவதும் போற்றப்படுவதும் சமுதாய வானொலி, இது வணிக மற்றும் பொது ஒளிபரப்புக்கு மாற்றான மூன்றாவது வானலையை உருவாக்கும் முயற்சியாகும்.. சமுதாய வானொலிகள் குறித்த எல்லைப் பரப்புக்குள் உள்ள, அதாவது வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகளை உடைய சமூகங்களுக்கு சேவை செய்கின்றன. உள்ளுரின் குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு பிரபலமான மற்றும் பொருத்தமான உள்ளடக்கத்தை அவை ஒளிபரப்புகின்றன, ஆனால் அவை பெரும்பாலும் வணிக அல்லது வெகுஜன ஊடக ஒளிபரப்பாளர்களால் கவனிக்கப்படுவதில்லை. சமுதாய வானொலி நிலையங்கள் அவர்கள் சேவை செய்யும் சமூகங்கத்தினரால் இயக்கப்படுகின்றன எனலாம். அவர்களுக்கு அது சொந்தமானது என்ற உணர்வைக் கொடுக்கின்றன. அவர்களின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. பொதுவாக இவ்வாறான சமுதாய வானொலிகள் இலாப நோக்கற்றவை மேலும் தனிநபர்கள் குழுக்கள் மற்றும் சமூகங்கள் தங்கள் கதைகளைச் சொல்லவும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பை வழங்குகின்றன. 

இலங்கைத் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து புலிகளின் குரல் ஒலிபரப்பு

தொன்னூறுகளில் விடுதலைப்புலிகள், விடுதலை இயக்கத்தின் போராட்ட நோக்கத்தை மக்களுக்கு உணர்த்தவும் இயக்கத்திற்கும்
மக்களுக்கும் இடையே தொடர்பை விரிவுபடுத்தி வலுப்படுத்தவும்; ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். இதற்குக்காரணம் விடுதலைப்புலிகள் ;தமது தலைமறைவு வாழ்வை மெல்ல முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் முன் வெளிப்படையாக வந்தார்கள், தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் மக்கள் முன் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை காணப்பட்டது போலும். தமது முகங்களைக்காட்டி பொதுவெளிக்கு வந்த பின்னர் மக்களின் கேள்விகளுக்கு விடைகொடுக்க வேண்டிய சூழல் இயல்பாகவே தோன்றியிருந்தது இதனை புலிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இதனை எதிர்கொள்வதற்காக ஊடகங்களை நன்கு திட்டமிட்டு தந்திரோபாயமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்தக்காலகட்டம் புலிகள் கரந்தடிப்படையாக இருந்து மரபுவழி இராணுவமாகவும் தம்மை பரிணாம வளர்ச்சிக்குள் இட்டுச் சென்ற செயல் முறையும் நடைபெற்றதை இனங்காண முடியும்.