Wednesday, 10 March 2010

ஊடாட்டம்

இராகவன்,யாழ்ப்பாணம்,இலங்கை

கூத்தரங்கம் இதழ் 29, இதழ்,30 வாசித்தேன், உள்ளடக்கத்தின் அடிப்படையில் வைத்து நோக்கம்போது யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்விதழ் வெளிவருகின்றதென்பது பெருமிதத்திற்கும் வியப்பிற்குமுரியதாகின்றுது, இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது தேவானந் காட்டிவரும் முனைப்பேயாகும், நேர்காணலுக்காகத் தேர்ந்தெடுக்கும் ஆளுமைகளிலிருந்து அவரது தேடலும் புத்தாக்க நிலைப்பாடும் நன்கு வெளிப்படக் காணலாம்-(சிலவேளை தேவானந் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்திருந்தால் கற்கை நெறிப்பட்ட புலத்தினுள் தேங்கி பத்தோடு பதினொன்றாகியிருக்கக்கூடிய விபத்து நேர்ந்திருக்கும் - நல்லவேளை அவ்விபத்திலிருந்து தப்பித்தார்) அ.மங்கை , ச.முருகப+பதி ஆகியோருடன் தேவானந் நிகழ்த்தியுள்ள நேர்காணல்கள் அரங்காற்றுகையில் முனைப்புள்ள எவரும் வாசிக்க வேண்டியவையாகும்.



அதிநவீன நாடகப்பிரதிகள் குறித்த உரையாடலில் ச.முருகப+பதி தவிர்க்க முடியாத ஆளுமை – செம்மூதாய், கூந்தல்பனை ஆகிய பனுவல்களின் மூலம் அதிநவீன நாடகத்தின் உச்சத்தைத் தொட்டவர் - இவருடன் தேவானந் நிகழ்த்தியுள்ள நேர்காணலில் தனது பாட்டனர் மதரகவி – பாஸ்கரதாஸ் பற்றி ஒருவரியேனும் குறிப்பிடாதது ஒருகுறையாகத் தோன்றினாலும் இது ஒரு சீர்மையான நேர்காணலென்பதைக் குறிப்பிட வேண்டும். – “………..நாங்கள் நாடக நிலத்தைத் தேடுகிறோம், ஆனால் இன்று ஈழத்தில் நிலமில்லை – நிலமிழந்து நெருக்கடிக்குள் இருக்கிறான் . இப்போது திசைக் குழப்பம் வருகிறது , நிலம் உடைந்துபோய் இருக்கிறது, பதுங்கு குழிகளாக , அழிந்த கால்நடைகளாக , அவலங்களாக நிலம் கிடக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்? இந்த நிலமற்ற தன்மைக்கு உடலற்ற தன்மைக்கு இப்போது என்ன செய்யலாம்? உடல்கள் எல்லாம் உறைந்துபோய் நிற்கிறது . இதில் நிலம் ஏது? இதைக் கலைத் துடிப்போடு சொல்ல வேண்டும், அதைச் செய்ய முடியவில்லை, ஊடகங்கள் இதையெல்லாவற்றையும் செய்தியாக மாற்றுகின்றன – ஆனால் உள்ளே பயணித்து எதையும் செய்ய முடியவில்லை. இது எனக்கு முன்னுள்ள சவால்.’’ என முருகப+பதி குறிப்பிட்டுள்ளமை அவரது கலை நேர்மைக்கும் - ஈழத்தமிழர் குறித்த நேர்மைக்கும் சான்றாகிறது. - ஈழத்தமிழர் பிரச்சினையை ஏற்கனவே வியாபாரமாக்கிய மணிரத்தினம், புகழேந்தி ஆகியோருக்கும் - “கிளிநொச்சி’’ என்ற தலைப்பில் படமெடுக்கவுள்ள அமீருக்கும் ச.முருகப+பதியின் இக்கருத்துப் பகிர்வினைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

காலங்கள் கடந்தும் வாழும் “தண்ணீர் தண்ணீர்” நாடக விமர்சனம் நேர்த்தியாக அமைந்திருந்தது. “நதியின் கருணை” குறித்த நிழற்படங்கள் இதழுக்கு மெருகூட்டின ,

“யாழ்ப்பாணத்தில் பொம்மலாட்ட அரங்கு “ எனும் ஆனந்தின் கட்டுரை குறிப்பிடத்தக்கதொன்று. இது குறித்து நண்பர்கள் சிலருடன் உரையாடியபோது யாழ்ப்பாணத்தில் பொம்மலாட்ட அரங்கா? என ஆச்சரியப்பட்டனர். இதுபோன்ற பதிவுகள்தான் காலத்தின் தேவையாக உள்ளன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

“கலையரசு சொர்ணலிங்கமும் அவரது நாடக வாழ்வும்” முக்கியமான இன்னொரு பதிவு . வியத்தகு கலைஞர்கள் ஈழத்திலே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இப்பதிவு மிகைப்படுத்தலின்றிச் சான்று பகர்கின்றது. ‘கலைக்காகவே வாழ்ந்த கலைமாமணி மகாதேவன்’ எனும் மதியழகனின் குறிப்பும் இத்தகையதொன்றே.

‘வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு ஒரு முழுமையான எடுத்துக்காட்டு’ எனும் தேவானந்தின் விரிந்த பார்வையில் ‘நினைப்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படையாகப் பச்சையாகப் பேசும் சுதந்திரத்தையும் வெளியையும் தமிழக அரங்கு கொண்டிருக்கிறது இந்த நிலை பிரமிக்கவைக்கிறது.அந்தத் துணிவு எங்கிருந்து வருகிறது? ஏன்பது உண்மையில் வியப்பு நீங்காக் கேள்வி’ என ஆதங்கப்படும் நிலையில் நெருக்கடியான காலகட்டங்களிலே “பேசாப் பொருள்” போன்ற துணிகரமான ஆற்றுகைகள் நமது மண்ணிலே நிகழ்ந்ததையும் இப்போது எலலோருமே நத்தைக் கூட்டிற்குள் ஒடுங்கிப்போய்ப் பெருமூச்செறிவதையும் நினைத்துப் பார்க்கிறேன் . ஒரு முழுமையான வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றி ஈழத்து அரங்கில் இனி எப்போதும் பேச முடியாதோ? ஏன்ற கேள்விதான் மேலோங்கி நிற்கிறது. கூடவே மன வேதனைக்குரியதுமாகிறது.

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் ‘பாலுக்குப் பாலகன்’ பனுவல் நாடக எழுத்துருவாக்கத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஓர் எளிமையான வழிகாட்டியென வாசிப்பில் உணர்ந்து கொண்டேன் . அவரது பனுவல்களை தொடர்ந்து வெளியிடுவது மிகுந்த நன்மை பயக்குமெனக் கருதுகிறேன் . ‘ஜெமன்’ சின்னமணி பற்றிய ஆக்கம் தொன்மத்தை மீட்டெடுக்கும் ஒரு முக்கிய பதிவாகவே தோன்றுகிறது . இது போன்ற ஆக்கங்களும் கூத்தரங்கத்தில் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்பது என் கருத்தாகும். மேலும் கூத்தரங்கத்தின் பக்க அளவினை அதிகரிப்பதற்கான தேவையிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இலக்கிய இதழ்கள் என்னும் பெயரில் தற்போது யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருப்பவையெல்லாம் சிறுபிள்ளை வேளாண்மையென அவசியமில்லாத விபரங்களைத் தாங்கி அதிகமான பக்கங்களில் வெளிவந்துகொண்டிக்கும் நிலையில் பக்ககங்களை அதிகமாக்குவது பற்றிக் கூத்தரங்கம் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும்…

No comments:

Post a Comment