Thursday, 9 February 2012

கிராமிய விளையாட்டுக்கள்



கிராமியப் பண்பாட்டில் கலையல்லாத கூறுகளுக்குள் விளையாட்டுக்கள் அடங்குகின்றன.  கிராமியப் பண்பாட்டிற்கும் கிராமிய விளையாட்டுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கிராமிய விiயாட்டுக்கள் எப்போதும் ‘மண்வாசனை’ நிரம்பியவைகளாகவே காணப்படகின்றன. ஒரு வளமான மனித சமுதாயத்தின் நிலைபேற்றிற்கு அது வேரூன்றி நின்று நிலைப்பதற்கு பல்வேறு காரணிகள் உறுதுணையாக நிற்கின்றன. வேரடி மண்ணாக அரண் சேர்ப்பவற்றில் கிராமிய விளையாட்டுகளும் அடங்கும்.

 மனிதனது இயல்பில் விளையாடுதல் என்ற பண்பு இரண்டறக் கலந்து கிடப்பது அகமகிழ்வும் உடல் ஆரோக்கியமும் இதில் அடங்கியிருப்பதால் விளையாட்டை நாடி மனிதன் செல்கிறான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்புடன் ஈடுபடும் ஒன்றாக விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் புறச்சூழலிலிருந்து விடுபட்டு சாதாரண களத்தை உயிர்ப்புள்ள களமாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதில் அவர்கள் பரவசத்தை தரிசிப்பார்கள். தங்கள் மனத்தடைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக காணப்படுவார்கள். இதனால் திருப்தியடைந்து சந்தோசப்படுவார்கள். இந்தத் திருப்தியும் சந்தோசமும் தான் பண்டைக்காலம் தொட்டு இன்றுவரை விளையாட்டுக்கள் நின்று நிலைப்பதற்கு காரணமாக அமைகின்றன.




விளையாட்டை விளையாடுகின்றவருக்கு ஏற்படுகின்ற திருப்தியை விட பார்த்துக் கொண்டிருப்பவருக்கு உள்ள திருப்தியும் சந்தோசமும் மிகையானது. அவர்களின் மனதும் கட்டுத்தளைகளிலிருந்தும் விடுபடுகின்றது. பார்ப்போரின் ஆர்ப்பரிப்பு விளையாடும் களத்தை மேலும் உயிர்ப்புள்ளதாக்கி நிற்கும். விளையாட்டில் ‘ஆர்ப்பரிப்பு’ முக்கியமானது.

 கிராமிய விளையாட்டுக்கள் மக்கள் கூட்டங்களுக்கிடையில் வேறுபட்டவையாக காணப்படுகின்றன. கிராமங்களில் காணப்படும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படும் சமயம், மொழிப்பழக்கங்கள், வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் அமைப்பு, தொழில், பால்வேறுபாடு என்பவற்றுக்கேற்ப அவற்றின் பண்புநிலைத் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு விளையாட்டு ஒவ்வொரு கிராமங்களுக்கு ஏற்ப சிறு சிறு மாற்றத்திற்கு உட்பட்டிருப்பதை அவதானிக்கின்ற போது மேற்சொன்ன காரணிகளின் தாக்கத்தை உணரமுடியும்.

 மனிதன் பிறப்பு முதல் இளமைப் பருவம், விடலைப்பருவம், முதுமைப்பருவம் என ஒவ்வொரு கட்டங்களிலும் உடலின் மாற்றங்கள், உணர்வு மாற்றங்களுக்கேற்ப தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு விளையாட்டுக்களை கண்டு கொண்டுள்ளான். குறிப்பாக குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவக் காலத்தில் குழந்தைகளை ஆறுதல் படுத்துவதற்காகவும் மகிழ்வூட்டுவதற்காகவும் தவழுதல், நடத்தல், கையசைத்தல், பருவங்கள் ஒவ்வொன்றிற்கும் மனிதன் விளையாட்டுக்களை கண்டு கொண்டுள்ளான்.
 கிராமிய விளையாட்டுக்கள் விளையாடப்படுவதற்கான களமாக விசேட இடங்கள் தயார்ப்படுத்தப்பட வேண்டிய தேவை இல்லை. வாழ்க்கையோடு பிண்ணிப்பிணைந்தது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டது. வீட்டின் முற்றமும் வளவும் பாரம்பரிய விளையாட்டுக்களுக்கான களமாக அமைந்துவிடும். நேரமிருக்கின்றபோதும் உற்சாகம் ஏற்படுகின்றபோதும் விளையாட்டுக்கள் நடைபெறுவதைக் காணமுடியும். முக்கியமாக பண்டிகைக்காலங்களில் மகிழ்ச்சியானதொரு சூழல் காணப்படும். அதில் அதிகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சியாகவும் ஒழுங்கமைக்கப்படாத நிகழ்ச்சிகளாகவும் பாரம்பரிய விளையாட்டுக்கள் நிகழ்த்தப்படுவதைக் காணமுடியும். வீரமும் மகிழ்ச்சியும் விளையாட்டுக்கான அடிப்படை மனித மனவெழுச்சிகளாகும். வீரத்தை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படும் விளையாட்டுக்கள் சங்ககாலம் தொடக்கம் தமிழர் மத்தியில் காணப்படுகின்றன.

 பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறுவர்களுக்குரியவைகளே அதிகம் காணப்படுகின்றன. சிறுவர்கள் கூடும் இடம் எல்லாம் விளையாட்டுக்கள் அதிகம் முளைத்துவிடும். வீடுகளில் விளையாடப்படுவதால் சந்ததிக் கையளிப்பு இலகுவாக நடைபெறுகின்றது. பாரம்பரிய விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுப்பதற்கான அமைப்புக்கள் இல்லை. அவை பரம்பரை பரம்பரையாக ஊடுகடத்தப்படுகின்றன.

 ஆண், பெண் வேறுபாட்டிற்கு ஏற்ப விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. பெண்கள் சமூகத்தில் எவ்வாறு கணிக்கப்படுகின்றார்களோ அதற்கேற்பவே பாரம்பரிய விளையாட்டுக்கள் காணப்படும். தமிழ் சமூகத்தில் பெண் வீட்டில் இருப்பவளாகவே கருதப்படுகிறாள். ஆகவே பெண்களின் விளையாட்டுக்கள் ‘உள்ளக’ விளையாட்டுக்களாகவே இருக்கின்றன. ஆண்களிடம் உடல் வலுவும், வீரமும் இருப்பதாக கருதப்படுவதால் ‘வெளியக’ விளையாட்டுக்கள் அவர்களுக்குரியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

 காலநிலை, பருவகாலங்களுக்கு ஏற்றதாக விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் கூட விளையாட்டுக்களில் தாக்கம் செலுத்துகின்றன. அறுவடை முடிந்த காலத்தில் வயல்வெளிகள் விளையாட்டுத்திடல்களாக மாறிவிடுவது வயல் வேலைகள் முடிந்ததை சுட்டி நிற்கின்றன. நேரமும், களமும் இருப்பதால் இக்காலத்தில் விளையாடுகிறார்கள். கடற்கரையோரங்களில் மணலோடு விளையாடும் விளையாட்டுக்கள் அதிகம். காற்று அதிகம் வீசும்போது பட்டம் விடும் விளையாட்டை கரையோர மக்கள் விளையாடுகிறார்கள். சிற்பி, சோகி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பல விளையாட்டுக்களை விளையாடுவதையும் அவதானிக்க முடிகிறது.

 கிராமத்தில் காணப்படும் தொழில் முறைகளுக்கு ஏற்றதாக அவற்றை மீளச் செய்து மகிழ்வதாக அநேகமான விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. சமய பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் விளையாட்டுக்களில் காணப்படுகின்றன.

 சமூக கட்டமைப்பும் சாதி அமைப்பு முறையும் அதிகமான பாரம்பரிய விளையாட்டுப் பாடல்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. வரலாற்று ரீதியான தகவல்களையும், உணவுப் பழக்கங்கள் அடங்கலான பலவற்றையும் பாரம்பரிய விளையாட்டுக்கள் சுட்டி நிற்பதைக் காணமுடியும்

No comments:

Post a Comment