இரு தேசம் பேசுவோர் எதற்காக சிறிலங்கா நாடாளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடுகிறார்கள்?
–
இலங்கைத் தீவின் தமிழர்கள் மீது ‘பரிதாபப்பட்டு’, அவர்களைத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் மீட்பர்களாக இப்போது பலர் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ் மக்களின் மீட்சிக்காக எனக் கூறிக் கொண்டு புதிய அரசியல் கட்சிகளையும் உருவாக்கி வருகிறார்கள். இதில் கடைசியாக உருவாக்கப்பட்டிருப்பது ‘தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி’. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன் தலைமையில் இக்கட்சி செயற்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் வேறு சிலரும் (சிவாஜிலிங்கம், சிறிகாந்தா) தமது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு வசதியாக வேறு கட்சிகளை உருவாக்கி உள்ளார்கள். தமிழ்த் தேசியம், இறைமை உள்ள தனியரசு என்ற கோ~ங்களுடன் இக் கட்சிகள் உருவாக்கம் பெறுகின்றன.
அண்மைக் காலமாக ஈழத்து அரசியல்வாதிகளின் இச் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான தகவலைத் தந்து நிற்கிறது. “மக்களே! இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை; நாங்கள் அனேகம் பிரதிநிதிகள் இருக்கிறோம்” என்பதுவே அந்தத் தகவல்.
ஏகம் அனேகமாகி விட்ட விந்தை கண்டு தமிழ் மக்கள் வியந்து நிற்கிறார்கள்.
ஒரே நோக்கத்திற்காக ஒரே குடையின் கீழ் ஒன்றுபட்டதாக முன்னர் சொல்லிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது சிறிலங்காவின் பாராளுமன்றக் கதிரைகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்.
இந்தத் தேர்தல் அரசியல் சித்து விளையாட்டும் தமிழ் மக்களை விக்கித்துப் போக வைத்துள்ளது.
புதிய கட்சிகளின் தோற்றம் ஏன்?
ஒரு நாட்டில் பல அரசியல் கட்சிகள் உருவாவதும் அவை தேர்தலில் போட்டியிடுவதும் நல்ல மக்களாட்சிப் பண்பாகவே நோக்கப்பட வேண்டும் என்று அரசியல் வல்லாளர்கள் குறிப்பிடுவார்கள்.
புதிய புதிய தமிழ்க் கட்சிகள் தோற்றம் பெறுவதன் மூலம் இலங்கைத் தீவில் மக்களாட்சி இன்னும் நிலைத்து(……?) நிற்கிறது என்கிற முடிவுக்கு வரலாம் அல்லவா?
ஆனால், நாம் இங்கு அலச வேண்டியது சிறிலங்காவின் மக்களாட்சி மாண்பு பற்றியல்ல, தமிழர் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் பற்றியே…
முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்த மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் அரசியல் மயப்பட்டிருக்கவில்லை என்பதை தமிழ் தேசியத்தின் பெயரால் பாராளுமன்ற போனவர்களின் இன்றைய செயற்பாடுகள் நிறுவிக் காட்டுகின்றன.
இத்தனை இழப்புக்களுக்கும் துயரங்களுக்கும் வேதனைகளுக்கும் பின்பு, நாகரீகமான, ஒருமித்த அரசியல் நடவடிக்கையையே தமிழ் மக்களால் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடப்பவையோ அதற்கு மாறானவையாக உள்ளன.
பாராளுமன்றக் கதிரைகளுக்காக அடிபட்டுக் கொள்ளும் அசிங்கமான அரசியல் மீண்டும் அரங்கேற ஆரம்பித்து விட்டது. வெறும் பதவி சுகத்திற்காகவே இவையெல்லாம் நடப்பது வேதனையானது.
இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதிதுவத்தையும் இப்போது இழந்து, மேலும் பலமிழந்து விடுவோமோ என்ற பயமே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது எழுகின்றது.
இன்றைய ஈழத் தமிழ்ச் சூழலில் புதிய கட்சிகளின் தோற்றத்திற்கான அவசியம் என்ன?
கடைசியாக உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சி, மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுபணம் செலுத்தி உள்ள கட்சி என்ற வகையில் ‘தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி’யின் உருவாக்கத்தை மையமாக வைத்து இன்றைய ஈழத் தமிழர் அரசியலைக் கொஞ்சம் அலசலாம்.
இந்த முன்னணியின் உருவாக்கத்திற்கான முக்கிய காரணம், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு (கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படாததே என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தமிழ்த் தேசியத்தைத் தீவிரமாகப் பேசினார்கள்(இது தனியான விவாதத்துக்கரியது) என்பதாலேயே கூட்டமைப்பு சார்பில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள் என்பதே அவர்களது தமிழ்த் தேசியவாதிகள் அடையாளத்திற்கான சார்பு நிலையாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதனடிப்படையில், தமிழ்த் தேசியவாதிகள் இருவருக்கு பாராளுமன்றக் கதிரைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி’ என்று கொள்ளலாம்.
புலம்பெயர் தமிழர்களில் சிறு பகுதியினரின் ஆதரவும் இதன் பின்னணியில் செயற்படுவதாகத் தகவல்கள் இருக்கின்றன. கட்சியின் செயற்பாடுகளுக்கான நிதி உதவிகள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்தே எதிர்பார்க்கப்படுகின்றன.
இது ஈழத்தில் இன்னொருவிதமான கேள்வியையும் எழுப்பி உள்ளது. புலம்பெயர் தமிழர்கள் தமது ‘பண பலத்தின்’ மூலம் தாயகத் தமிழர்கள் மீது கட்டளையிட முடியுமா? என்ற விவாதம் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழ்க் கட்சிகளின் உருவாக்கத்தின் பின்னணியிலும் அவற்றின் செயற்பாடுகளின் பின்னணியிலும் புலம்பெயர் தமிழர்களது பணமே முதுகெலும்பாக இருக்கின்றது என சுட்டிக்காட்டப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இந்தப் புதிய கட்சிகள் தாயகத் தமிழர்களை மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களையும் பல துண்டுகளாகச் சிதறச் செய்வதற்கான ‘முகவர் அமைப்பு’களாகச் செயற்படப் போகின்றன எனக் கொள்ளவும் இடமுண்டு.
இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்துள்ளமையும், தாங்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததன் காரணமாகவே விலக்கப்பட்டதாக அவற்றில் இரு குழுக்கள் உரிமை கோருகின்றன என்பதுமே ஆகும
தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்துபவர்கள் என்று கூறிக்கொள்ளும் அவர்கள் இடையேயே கூட ஒற்றுமை இல்லை என்பதை அவர்கள் தனித் தனியாக நிற்பது எடுத்துக்காட்டுகிறது. அதனாலேயே சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்றோர் ஓர் அணியாகவும் கஜேந்திரன், பத்மினி போன்றோர் ஓர் அணியாகவும் பிரிந்து விட்டனர். சொலமன் சிறில் தனித்து விடப்பட்டிருக்கிறார்.
ஒரே இலக்குக்காக ஒன்றுபட முடியாதவர்கள் எவ்வாறு அந்த இலக்கை வெற்றி கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அப்படிப் பார்க்கும் போது இவர்களின் இலக்கு தமிழ்த் தேசியத்தை வெற்றெடுப்பது என்பதைவிட பாராளுமன்றக் கதிரைகளின் சொகுசை மீண்டும் வெற்றெடுப்பதாகவே தெரிகிறது.
இத்தகைய பிரிவுகளை ஊக்குவிக்கும் செயல்களில் புலம்பெயர் தமிழர்களும் ஈடுபட்டிருப்பது வேதனைக்குரியது. புலத்தில் இருந்து தாயகத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்ற போது மாயையில் இருந்து முடிவுகளை எடுக்காது, குறிப்பாக ஒருமுகப் பார்வையுடன் முடிவுகளை எடுக்காது, களத்தை ஆய்வு செய்து சரியான முடிவுகளை எடுப்பதே எதிர்கால நலன்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
ஏனெனில் பாராளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு என்பது இன்றைய அரசியல் நிலையில் வெறும் கதிரைகளுக்கான போட்டி அல்ல. அது தமிழ் மக்களின் உரிமைகளுக்கான அடித்தளம்.
வேட்பாளர் தெரிவு முறை
கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு ‘கோளாறுகளற்றது’ என்ற முற்கற்பிதத்தோடு, அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் செயற்படமுடியாது.’விமர்சனத்துக்கான வெளி’ வழங்கப்படாமல் கடந்த தேர்தலில் வேட்பாளர் தெரிவு இடம் பெற்றது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், அத் தெரிவுகள் அனைத்தும் ‘கோளாறுகள்’ நிறைந்தவை என்பது 5 வருடங்களில் இப்போது ஐயந்திரிபுற நிரூபிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் அவற்றையே எடுத்துக் காட்டுகின்றன.
அதேவேளை, எந்தவொரு தேர்தலிலும் மக்களுக்கான பிரதிநிதிகளைப் பன்முகப் பார்வையுடன், வெளிப்படையான நிகழ்ச்சி நிரலுடன் தெரிவு செய்வது அவசியம். வேட்பாளர் தெரிவின் போது எந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது மக்களுக்குத் தெளிவாக்கப்பட வேண்டும்.
ஆனால், யதார்த்தத்தில் ஒரு முகமான, மூடிய தெரிவு முறையே தற்போதும் தமிழ் பேசும் கட்சிகளால் வேட்பாளர் தெரிவில் பின்பற்றப்படுவது வேதனையானது.
விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் என்று கருத்துடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சிலர் அரசுடனும் வேறு சிங்களக் கட்சிகளுடனும் இப்போது இணைந்து போட்டியிடுவது, வேட்பாளர் தெரிவு முறையில் குறைபாட்டால் ஏற்பட்டதே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அதையே செய்திருக்கின்றது என்பதும் இங்கு கவனத்திற்குரியது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை ஏன் விலக்கியது என்பதற்கும் புதிதாகத் தெரிவானவர்கள் என்ன தகுதிகள், காரணங்களுக்காகத் தெரிவானார்கள் என்பதும் இன்னும் தெளிவாக்கப்படவில்லை.
தேர்தலில் வென்ற பின்னர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவ மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதும் புரியவில்லை.
கடந்த காலத் தவறுகள் தவிர்த்து இனிவரும் காலங்களில் ‘திறந்த தெரிவு’ நோக்கி தமிழ்க் கட்சிகள் நகர வேண்டும். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்கள் தமது பதவிக் காலத்தில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற ‘மறுவாசிப்பு’ம் அவசியம் செய்யப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து நின்ற போது அவர்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மக்களுடன் இல்லை.மக்கள் அனாதரவான கையறு நிலையில் இருந்தார்கள்.தமக்கு உயிர் அச்சுறுத்தல் என்று கூறிக் கொண்டு வெளிநாடுகளிலேயே அவர்களில் பலரும் தங்கி இருந்தார்கள்.
இப்போது, விடுதலைப் புலிகள் அற்றதொரு சூழலில், அவர்கள் தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கி சிறிலங்கா பாராளுமன்றக் கதிரைகளுக்காகப் போட்டியிடுவது, அவர்களுக்கு யாரால் உயிர் ஆபத்து ஏற்பட்டது என்ற சந்தேகங்களையும் எழுப்புகிறது. ஆனாலும் அவர்கள் தமிழ் தேசியவாதிகளாகத் தம்மைத் தாமே பிரகடனம் செய்து தமிழ்த் தேசியம், தனியரசு பற்றியெல்லாம் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் கடந்த தேர்தலின் போது போட்டியிட்டுத் தோற்றுப்போன, சங்கானையின் முன்னாள் பிரதேச செயலர் காலஞ்சென்ற சந்திரராசா தனது தோல்விக்காகக் கூறிய கருத்துக்களில் ஒன்றை இங்கு முன்வைக்கிறேன், “நாங்கள் எப்போதும் கறுவாக்காட்டு அரசியல்வாதிகளுக்கு வாக்குப் போட்டுப் பழக்கப்பட்டவர்கள்”. அவர் கூறிய இந்த யதார்த்தம் ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் உண்மையில் மிகப் பயங்கரமானது.
தாயகத்து மண்ணில் இல்லாது கொழும்பில் வசிப்பவர்களையும், ‘கனவான்’களையுமே எமது பிரதிநிதிகளாக நாம் நீண்ட காலமாகத் தெரிவு செய்து வந்திருக்கின்றோம். தேர்தல் சந்தை கூடுகின்ற போது இவர்கள் வருவார்கள், வாக்குக் கேட்பார்கள், பின்னர் போய்விடுவார்கள்.
அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சிதானோ என்னவோ கடந்த முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் பலரும் மக்கள் துன்பங்களை அனுபவித்த போது அவர்களுடன் இல்லை.
புலிகள்தான் ஏகப் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டுவிட்டார்கள் போல் உள்ளது.
அப்படி இருந்தவர்கள் எல்லோரும் இப்போது மீண்டும் தமிழ்த் தேசியத்தைத் தூக்கிப் பிடித்தபடி தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார்கள்.
கறுவாக்காட்டு அரசியலின் தொடர்ச்சியாக இப்போதும் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்களில் ‘கல்விமான்’களும் ‘கனவான்’களும் நிரம்பிக் கிடக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைப்படுத்தப்பட்ட மக்களுக்கு இவர்களால் ஏதாவது செய்ய முடியுமா என்பதும் கேள்விக்குரியதே.
மீண்டும் கறுவாக்காட்டு அரசியல் பண்பாட்டுக்குள்ளேயே நாம் மூழ்கிப் போய்விடப் போகிறோமா, அல்லது மக்களின் விடுதலைக்காக சிந்திக்கும் உண்மையானவர்களைத் தேடிப் போகப் போகிறோமா என்பதே இப்போதுள்ள கேள்வி.
இன்று பேயாகப் பொய்மை கிடக்கிறது. அதில் உண்மை தேடி வாக்களிக்க வேண்டிய சவால் தமிழ் மக்கள் முன் உள்ளது.
தனியரசும் யதார்த்தமும்
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் முதல் ஊடக அறிக்கையில்,
1. இறைமை உள்ள தனித்துவமான தனியரசு அமைத்தல்
2. தமிழ் மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளுக்காக உண்மையாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்தல்
ஆகிய இரண்டு விடயங்கள் முக்கியமாகச் சொல்லப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் சிறிலங்காவின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு, சிறிலங்கா சட்டப்படி பதவியேற்கும் எவரும் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் ஒரு போதும் பேச முடியாது என்பது வெளிப்படை.
அப்படி இருக்கும் போது, இவர்களின் கொள்கைகளும் செயல்பாடுகளும் தொடக்கத்திலேயே முரண்பட்டவையாக அமைகின்றன.
அவர்களின் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கு சிறிலங்காப் பாராளுமன்றக் கதிரைகள் அவர்களுக்கு எப்படி உதவப் போகின்றன என்பதை அவர்கள் தங்கள் அறிக்கைகளிலோ பரப்புரைகளிலோ தெளிவுபடுத்தவே இல்லை.
மேற்குறிப்பிட்ட அவர்களின் இரண்டு கொள்கைகளையும் எட்ட வேண்டுமானால் அவர்கள் சிறிலங்கா பாராளுமன்றத்தைப் புறக்கணித்து அதற்கு வெளியேதான் செயற்பட வேண்டும். இதே இலட்சியத்தைக் கொண்டிருந்த புலிகள் அதனைத்தான் செய்தார்கள் என்பதும் கவனத்திற்கு உரியது.
இருந்தாலும் இவர்கள் இப்போது பாராளுமன்றக் கதிரைகளுக்காக அடிபடுகிறார்கள். இதனை எப்படிப் புரிந்து கொள்வது?
கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட அல்லது வெளியேறிய இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
ஆனால், தமிழர்களுக்காக தாங்கள் முன்வைக்கும் கொள்கையின் அடிப்படையிலான தீர்வுத் திட்டம் என்ன, அதனை எப்படிச் சாத்தியமாக்க முடியும் என்று அவர்கள் விளக்குகிறார்களில்லை.
அப்படி அவர்கள் விளக்கும் போது, அவர்கள் கூறும் தனியரசு என்பது எப்படிப்பட்டது, அது ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளா அல்லது வெளியிலா, அதனை அடைவதற்கான பாதைதான் என்ன, அது எந்தத் தலைமையின் கீழ் செயற்படும் என்பன பற்றியெல்லாம் கூறுவார்கள் என்று எதிர்பார்ப்போம்!
30 வருட அனுபவத்திற்குப் பின்னரும் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் போன்ற ஒன்றை வெளியிட்டுவிட்டால் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கும் இவர்களின் அரசியல் விவேகத்தை எப்படி மெச்சிக் கொள்வது என்றும் தெரியவில்லை…?
1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 மக்களாணை என்றெல்லாம் குறிப்பிடும் தமிழ்த் தேசியத்திற்கான முன்னணி, மூத்த அரசியல்வாதிகளால் பாராளுமன்றக் பதவிகள் ஏன் தூக்கி வீசப்பட்டன? அதற்கான தர்க்க நியாயங்கள் என்ன? என்பன பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
தோல்வி அடைந்ததாக அவர்களே குறிப்பிடும் சிறிலங்காவின் தேர்தல் முறையில் இப்போது தாங்களே பெரு விருப்புக் கொண்டு செயற்படுவதற்கான காரணங்களையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
சிறிலங்காப் பாராளுமன்றக் கதிரைகளில் இருந்து பதவி சுகத்தை அனுபவிக்கலாமே தவிர, அதிலிருந்தபடி அந்த நாட்டுக்குள் இறைமையுள்ள மற்றொரு தேசத்தை உருவாக்குவது சாத்தியமே இல்லை என்பதை தந்தை செல்வா காலத்திலிருந்தான வரலாறு தெளிவாக முன்வைக்கிறது.
மக்கள் இன்று தமது யதார்த்த வாழ்க்கையில் இருந்தபடி தமது அரசியல் அபிலாசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளவே எத்தனிக்கிறார்கள். அபிவிருத்தி, பொருளாதார எழுச்சி பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள்.
திறந்து விடப்பட்டுள்ள பாதைகளினூடாக வெள்ளமெனத் திரண்டு வரும் பண்டநுகர்வுக் கலாசாரத்தில் தங்களை எங்கு நிலைநிறுத்திக் கொள்வது என்பதும், அதற்கு மத்தியில் தமது அடையாளத்தை இழந்து விடாமல் தக்க வைப்பது எப்படி என்பதும் அவர்களின் பெரும் பிரச்சினைகளாக இருக்கின்றன.
இந்தக் கள யதார்த்தத்தின் மத்தியில் இருந்தான் புதிய அரசியல் கொள்கைகளும் கோட்பாடுகளும் கட்சிகளும் உருவாக வேண்டுமே தவிர, மீண்டும் கறுவாக்காட்டு அரசியல் பண்பாட்டுக்கான கட்சிகளின் உருவாக்கம் தேவையில்லை.
ஒற்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில் புற்றீசல் போல் கட்சிகளை ஆரம்பிப்பதால் மட்டும் ஈழத் தமிழர்களின் விடுதலையை வென்றெடுத்துவிட முடியாது. புதிது புதிதாகக் கட்சிகளை ஆரம்பிப்பவர்களும் அவற்றுக் ஆதரவு அளிப்பவர்களும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆடுகள் சிதறுவது சிங்கங்களுக்கு நன்மை தருமே தவிர, ஆடுகளுக்கல்ல….!
No comments:
Post a Comment