Thursday, 23 February 2012

மிகத்துணிச்சலான பெண் பத்திரிகையாளர் மேரி கொல்வின்






அமெரிக்காவில் பிறந்து பத்திரிகையாளராக பணியாற்றி பின்னர் பிரித்தானியாவின் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியவர் மேரி கொல்வின்.இவர் சிரியாவில் செய்தி சேகரிப்பதற்காக கிளர்ச்சி படைகளின் கட்டப்பாட்டுப்பகுதிக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஊடக மையத்தில் தங்கியிருந்த போது சிரிய ராணுவத்தின் ஆட்லெறி தாக்குதலின் பின்னர் நடந்த ரொக்கற் தாக்குதலில் சிக்கி இறந்துள்ளார்.




1956ம் ஆண்டு ஐனவரி 12ம் திகதி அமெரிக்காவில் பிறந்த இவர் 1985 ஆண்டிலிருந்து த சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ஒரு இதழியலாளராக பணியாற்றினார்.சிரியாவின் கிளர்ச்சி தொடர்பான செய்தி சேகரிப்பிலீடுபட்ட போது 2012ம் ஆண்டு பெப்ரவரி 22 இல் கொல்லப்பட்டார்.மானுடவியலில் தனது முதல் பட்டத்தை 1978 இல் பெற்றுக் கொண்ட மேரி கொல்வின் ஓராண்டு கழித்து பொலிஸ் ரிப்போட்டராக நியுயோர்க் யுனைற்றட் பிறஸ் இன்ரநாசனலில் இணைந்து பணியாற்றினார்.பின்னர் 1985 பிரித்தானியாவின் த சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இணைந்து பணியாற்றினார்.முதலில் மத்திய கிழக்கு விடயங்களுக்கான விசேட செய்தியாளராக  நியமிக்கப்பட்டு பின்னர் 1995 தொடக்கம் உலக விடயங்களை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டார்.

1986 இல் இவரே முதல் முதலில் முகமட் கடாபியை நேர்காணல் செய்தவரென்பது குறிப்பிடத்தக்கது.மத்திய கிழக்கு விடயங்களில் சிறப்பு தேர்ச்சி கொண்டவரான மேரிகொல்வின் செச்சினியா,கொசோவோ,சியராலியோன்,சிம்பாவே,கிழக்கு தீமோர்,இலங்கை போன்ற யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் மிக ஆபத்தான சூழ்நிலைகளில் பணியாற்றியிருக்கிறார்.

1999ம் ஆண்டு கிழக்கு தீமோரில் யுத்தப்பிரதேசத்தில் அகப்பட்டிருந்த 1,500 பெண்களையும் சிறுவர்களையும் ஐ.நா அமைதிப்படையுடனிருந்து தனது அறிக்ககையிடல்கள் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்து காப்பாற்றியிருக்கிறார்.

சர்வதேச பெண்கள் ஊடக அமைப்பின் இதழியலின் தற்துணிவுக்காக வழங்கப்படும் சர்வதேச விருதை கொசொவோ செச்சினிய முரண்பாட்டு சூழலை வெளிக்கொண்டுவந்ததற்காக பெற்றுக் கொண்டார்.இவர் பல ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார் அதில் அரபாத் பற்றி அவர் தயாரித்த ஆவணப்படம் முக்கியமானது.

2001ம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்று செய்தி சேகரித்து மீண்டும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்துக்குள் நுழையும் போது  ‘பத்திரிகையாளர் பத்திரிகையாளர்’ என்ற அழைப்பின் பின்னான  இலங்கை இராணுவத்தின் ஆர்.பி.ஐp தாக்குதலினால் தனது இடது கண்ணை இழந்த மேரி கொல்வின் அதனை மறைப்பதற்கு கறுப்பு துணி அணியும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்.

இலங்கையில் நடைப்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைந்தது தொடர்பான விடயங்களில் ஐ.நா, இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் இடையேயான தகவல் பரிமாற்றப்பணியை இறுதி நேரத்தில் மேற் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது முயற்சியால் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைந்தனர் என்றும் பின்னர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் சர்ச்சைக்குரிய விடயமாகியிருந்தன.தற்போது இலங்கையரசுக்கு எதிரான போர் குற்றசாட்டில் இவர் ஒரு முக்கியமான சாட்சியாகக் கருதப்பட்டார்.மிகச்சர்ச்சைக்குரியதான  சனல்4 தொலைக்காட்சியின் ;இலங்கையின் கொலைக்களம்;’ ஆவணப்படத்தில் இவரது தகவல்களும் பதிவாக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2011 லிபாயாவின் உள்நாட்டு யுத்தத்தை அறிக்கையிடும் போது முகமட் கடாபியை நேர்காணும் வாய்ப்பைப்பபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.பெப்ரவரி 22 மேரி கொல்வின் சட்டவிரோதமாக சிரியாவுக்குள் நுழைந்து செய்தி சேகரிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.சிரிய அரசாங்கம் பத்திரிகையாளர்களை கிளர்ச்சி நடைபெறும் பகுதிகளுக்குள் அனுதிக்கவில்லை சிரியாவின்  பாபாஅமீர் நகரத்தில் கிளர்ச்சியாளர்களின் தற்காலிக ஊடக மையத்திலிருந்து தனது ஒலி,ஒளிபரப்பினை 21ம் திகதி பி.பி.சி,சி.என்.என,;;சனல்4 மற்றும் ஐ.ரி.என் சேவைகளில் தோன்றி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.;.தனது சற்றிலைட் தொலைபேசியின் உதவியுடன் தனது சேவையை தொடர்ந்த போது சற்றிலைட் தொலைபேசி சிக்கல்களை பின்தொடர்ந்து சிரிய ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.தான் தங்கியிருந்த கட்டடம் தாக்கப்படுவது தெரிந்து தப்பி ஓடும் போது அவர் கொல்லப்பட்டாரென்று செய்திகள் தெரிவிக்கின்றன.இவரோடு விருது பெற்ற பிரெஞ்சு நாட்டின் புகைப்படப்பிடிப்பாளர் ரெமி ஓச்லினும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிகத்துணிச்சலுடன் முரண்பாட்டுப்பகுதிக்கு சென்று தங்கியிருந்து செய்திகளை சேகரித்து உலகுக்கு உண்மைகளைக் கொண்டுவரும் மேரி கொல்வின் போன்றவர்கள் தாம் பணிபுரியும் துறைக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் பணியாற்றியிருப்பதை பத்திரிகையாளர்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.இன்று களத்துக்கு செல்லாமல் செவிவழி செய்திகளை தொலைபேசிகளில் கேட்டு தகவல் ,தரவு மற்றும் நேர்த்தி பிறள்வுகளுடன் செய்தி சேகரிக்கும் வியாபாரிகளின் நவீன யுகத்தில் உண்மையைத்தேடும் தனது முயற்சியில் மேரி கொல்வின் தன் உயிரை நீத்திருப்பது முக்கியமான விடயமாகும்.மேரி கொல்வின் எந்தவொரு சூழ்நிலைக்குள்ளாலும் தப்பித்து வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்த குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த ஏமாற்றம் தருவதாக அவரது இறப்பு செய்தி அமைந்திருக்கிறது.


மேரி கொல்வின் பெற்றுக் கொண்ட விருதுகள்



2000: Journalist of the Year: Foreign Press Association.
2000: Courage in Journalism: International Women's Media Foundation.
2001: Foreign Reporter of the Year:British Press Awards
2010: Foreign Reporter of the Year:British Press Awards (second award).


No comments:

Post a Comment