Saturday, 8 February 2025

சுதந்திரதின உரை : பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை


 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை, ஒரு புறம் நாட்டின் நீண்ட அடிமைப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தது, அதில் நாடடின் வீழ்ச்சியும் அதனிலிருந்து எழவேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின்  எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தபோதும், அந்தக்கனவு தேசத்தை மக்கள்முன்வைக்க ஜனாதிபதி தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.  இந்த உரையில் வெளிப்பட்ட தூரப்பார்வை, அதன் அரசியல் உள்நோக்கங்கள், மற்றும் சமூக, பொருளாதார உண்மைகளுடன் கூடிய பிணைப்பு ஆகியவை சார்ந்து சிந்திக்கத்தூண்டுகிறது.

ஜனாதிபதி தனது உரையின் தொடக்கத்தில் 1948ஆம் ஆண்டு அரசியல் சுதந்திரம் அடைந்தது ஒரு முக்கியமான தளமாக சொல்லப்படுகிறது. ஆனால், அது குறுகிய பார்வையாகவே இருக்கிறது போலும். 1948 இல் கிடைத்த சுதந்திரம் அனைத்து இனக் குழுக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்கவில்லை. சிறுபான்மையினர், குறிப்பாக தமிழர்கள், அரசியலில் புறக்கணிக்கப்பட்டு, காலப்போக்கில் அவர்கள் அனுபவித்த பாகுபாடுகள் ஆழமாக்கப்பட்டன. இந்த உண்மைகளைச் சொல்லாமல், பன்முகத்தன்மை கொண்ட இலங்கை வரலாற்றை ஒரே கோட்டில் வரையறுப்பதாகவே இந்த உரையமைந்துள்ளது. வுரலாற்றை ஆழமாகத்திரும்பிப்பபார்ப்பதன்மூலமே பாடங்களைக்கற்றுக கொள்ள முடியும் மாறாக எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தி அதனை இலட்சிய அடிப்படையிலான பார்வையாகக் காட்டமுனைவதென்பது வழக்கமான அரசியல் பேச்சின் சாயலைப் பெற்றுவிடுகிறது. 

உரையில் பலமுறை "ஒற்றுமை" என்பதைக் குறிப்பிட்டு, இன, மத, சமூக பேதங்களை கடந்து நட்புறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதில் தத்துவ ரீதியான அழகிய சொற்களே காணப்படுகின்றன. அதிகம்; நடைமுறை நடவடிக்கைகள் பற்றிய விளக்கங்கள் குறைவு எனலாம். இதனையே பேச்சுப் பல்லக்கு தம்பி கால்கடை’ என்று சொல்லலாம். இங்கு மக்கள் பலவிடயங்களைப் பற்றிய தெளிவை ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். அதாவது,


இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள பாகுபாடுகளைக் களைய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்வதற்கான திட்டம் என்ன?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நிலப்பிரச்சினைகள், காணாமல் போனவர்கள், மொழிச்சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஏன் எந்தவொரு உறுதியும் வழங்கப்படவில்லை?

இது போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்காமல், வெறும் சமாதானமான உரையாடல்களின் மூலமாக தேசிய ஒற்றுமை உருவாகும் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எது இலக்கு என்று  மட்டும் சொல்வதால் பயனில்லை போகும் வழிஐயயும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

மேலும் ஜனாதிபதியின் உரையில்  பொருளாதார சுதந்திரம் மீது அதிகம்  கவனம் செலுத்தப்படுகின்றது. . விவசாயிகள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரைப் புகழ்ந்த போதிலும், உண்மையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்மொழியப்படவில்லை.

இங்கு, இலங்கை பொருளாதாரம் கடனில் தத்தளிக்கின்ற ஒரு கட்டத்தில் இருக்கிறது. பொருளாதார சுதந்திரம் என்பது அரசாங்கம் மக்கள் மீது அதிக வரி சுமத்தி, வெளிநாட்டு கடன்களை மேலும் திரட்டுவதன் மூலம் வருமா? விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உண்மையான உரிமைகள் வழங்கப்படுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமென்பது ஒருபுறம், ஆனால் அதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? அவையே மக்களுக்கான சுமையாக அமைந்துவிடுவதற்கான ஏதுநிலைகைத் தவிர்ப்பதற்கு என்ன நடவடிக்கை  எடுக்கப்படும் போன்ற பல விடயங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றில் எந்தவொரு தெளிவும் இல்லாமல், வெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பொருளாதாரத்தை மீட்டெடுப்போம் என்பதுபோன்ற பொதுவான உறுதிமொழிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பற்றிய குறிப்புகள் உரையில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் கல்வி அமைப்பு எதிர்கொள்ளும் கடுமையான சிக்கல்கள் குறித்து எடுத்துரைக்கப்;படவில்லை.


இலங்கை கல்வி முறையில் அரசியல் தலையீடுகள், மற்றும் கல்விக் கட்டமைப்பு சார்ந்த விவகாரங்கள் மீள்கட்டமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களும் எதிர்பார்க்கப்பட்டன. தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா? இலங்கை அரசு தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கிறதா? அல்லது கல்வி முறைமைகளுக்கிடையிலான பாகுபாடுகளைக் கட்டுப்படுத்துகிறதா? ஏன்ற கேள்விகள் தொடர்ந்து காணப்படுகின்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மீளமுடியாத நச்சு வட்டத்துக்குள் சிக்கியுள்ளன. பொதுவாக இலங்கையின் கல்வி அமைப்பு அரசியல் மற்றும் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிகாரங்கள் தாமதிக்காது மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. 

கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் ஆகியோருக்கு சமூக பொறுப்புகளைஉணர்ந்து செயற்பட வேண்டும், அதனை  ஏற்படுத்துவதற்காக பாடுபடவேண்டும் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், இவர்கள் மீது அரசின் கட்டுப்பாடு அதிகரிக்க வேண்டுமா?, அல்லது சுதந்திரமான ஒரு கலாச்சார சூழல் உருவாக்கப்பட வேண்டுமா? என்பதில் தெளிவில்லை குறிப்பாக, ஊடகவியலாளர்கள் மீது கொண்டுவரப்படவுள்ள சட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டியுள்ளது. இலங்கை அரசியல் சமூகத்தில் கலைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினால் அவர்களைத் துன்புறுத்தும் நிலை தொடரும் என்ற அச்சம் நீங்குகிறதா? போன்றவற்றில் தெளிவான பார்வை தேவைப்படுகின்றது. 

மதத் தலைவர்கள் அரசியல் ஆட்டங்களிலிருந்து விலகி செயல்படுவதற்கு எந்த உறுதியான கட்டமைப்பையும் காணமுடியவில்லை. சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு சட்டப் பாதுகாப்பிற்கான வழிவகைகள்பற்றிய விவாதங்களுக்கு வழியிருப்பதான நிலைமைகளை கோடிகாட்டுவதாக சுதந்திரதின உரை இல்லை எனலாம்.

2025 ஆண்டு சுதந்திர தின உரை, மேலோட்டமாக பார்க்கும் போது, கனவு நிறைந்த ஒரு நாட்டிற்கான புகழ்பெற்ற உரையாக தோன்றலாம். ஆனால், விமர்சனப் பார்வை இல்லாத போது மிகவும் சிலாகிக்கப்படுவதாக இருக்கலாம். ஆனால்;, இந்த உரை வெறும் அரசியல் மேடைப்பேச்சாகவே நிலைத்திருக்கிறது போலும்.


இது, எந்தவொரு புதிய தீர்வுகளையும் முன்வைக்காமல், பழைய அரசியல் ரீதியான உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் சொல்லும் உரையாகவே இருக்கிறது. மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் தொடர்பாக எந்தவொரு உறுதியும் வழங்கப்படவில்லை.

எதிர்கால இலங்கை பற்றிய இலட்சியங்களைப் பேசிய போதிலும், அதன் அடிப்படை மாற்றங்கள் பற்றிய வழிமுறைகள் குறித்து எந்தவொரு தெளிவும் இல்லை. சுதந்திரதின உரை, சர்வதேச ரீதியில் இலங்கையின் தற்போதைய நிலையை முழுமையாக பிரதிபலிக்க முடியாத வெற்று ஆட்சிக் கலை சொல்லாடலாகவே பார்க்க முடியும். உண்மையான சுதந்திரம் என்பது மக்கள் பங்களிக்கும்போதும், அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் போது மட்டுமே பெறப்படும். அரசியல் உரைகளின் மூலம் அல்ல.


No comments:

Post a Comment