Saturday 21 January 2017

உத்தம வில்லன்


விடிகாலை சலப்பை முட்டி அடிவயிற்றில உதைக்க கண்முழிச்சன். இன்னும் சூரிய வெளிச்சம் முழுசா வரேல்ல. எழும்பி பாத்ரூமுக்க போய் சிரம பரிகாரம் செய்து போட்டு தண்ணியை அடிக்க பிளாஸை பிடிச்சு அமர்த்தினன். அது உடைஞ்சு கையோட வந்திட்டிது. இனி என்ன செய்யிறதெண்டு வாளியில தண்ணியப்பிடிச்சு அள்ளி ஊத்த வேண்டியதாப் போச்சு. இன்றைக்கு உவன் பிளம்பருக்கு பின்னால திரியிற வேலையொன்று வந்து போச்சு.



மூன்று மாசத்துக்கு முன்னம் நெஞ்சு நோகிதென்று பிள்ளையள் பிரைவேற் ஆசுபத்திரிக்கு அவசரமாக் கொண்டு போய்க் காட்ட என்ர நிலைமையைப்பார்த்த டொக்ரர் உடன பெரியாஸ்பத்திரிக்கு போங்கோ என்று சொல்லிப்போட்டார். பிள்ளையள் பதறிப்போய் உடன பக்கத்தில நின்ற ஓட்டோவைக் கூப்பிட்டுதுகள். எனக்கு அந்தநேரம் பார்த்து சலம் வாரது போல இருக்க “நான் பொறுங்கோ  பாதரூமுக்குப் போட்டு வாரன்” என்று எழும்ப,டொக்ரர் சொன்னார் “நீங்கள் ஒரு இடமும் போக வேண்டாம். எல்லாம் பெரியாஸ்பத்திரிக்கு போய்ப்பாருங்கோ” என்று. எனக்கு கொஞ்சம் பயமாத் தான் போச்சுது. ஓடிப்போய் ஓட்டோவில ஏற. ஆஸ்த்திரிக்காரப் பெட்டையொன்று ஓடிவந்து “காசைக்கட்டுங்கோ காசைக்கட்டுங்கோ” என்று குளறிக்கத்திச்சு. இதைப்பார்த்த டொக்டர் “முதலில அவை போகட்டும் பிறகு வந்து காசக்கட்டுவினம். அவையை விடுங்கோ” என்று கோபப்பட்டார். அதெங்க அந்தப் பெட்டை ஓட்டோவப்பிடிச்சுக் கொண்டு “காசக்கட்டுக்கோ காசக்கட்டுங்கோ” என்று நிண்டு கொண்டுது. பிறகு மருமகள் இறங்கி “நான் கட்டுறன் நீங்கள் போங்கோ” என்று எங்களை விட்டுட்டு தான் இறங்கிட்டாள். அங்க கொண்டு போனா அதை இதையால்லாம் அங்க, இங்க எண்டு எல்லா இடமும் பூட்டி கடைசியில கண்டுபிடிச்சாங்கள் நெஞ்சுக்க அஞ்சு அடைப்பிருக்கெண்டு. பிறகு அவசரப்படுத்தி கொழும்புக்கு அனுப்பிட்டாங்கள். அங்கயும் அது இது என்று படாத பாடுபடுத்தி ரெஸ்ருகள் செய்தாங்கள். அடைப்பெடுக்க எல்லாம் வெட்டிப்பிரிச்சு மேயவேணுமென்று சொல்லிப் போட்டாங்கள். பிறகென்ன ஒருமாதிரியாக  பிரிச்சு மேஞ்சு காலில கிடந்த நரம்புகள் கொஞ்சத்தை பிடிங்கி இதயத்தில வைச்சதென்று ஒரு களேபரமாய்ப் போச்சு. இதுக்கிடையில் வெளிநாட்டில நிண்டதுகள் கொஞசம்; “கொழும்பில ஒப்பரேசன் செய்ய வேண்டாம.; சென்னைக்கு போங்கோ அங்க அப்பலோவில வடிவாச் செய்வாங்கள்” என்று நாண்டு கொண்டு நின்றுதுகள். நான் தான் விடாப்பிடியா வேண்டாம் என்று நிண்டு கொண்டன். நல்ல காலம் கண்டியளோ இந்த ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே காப்பாற்ற முடியாதவங்களை நம்பி எப்பிடி நாங்கள் போறது. கிடக்கிறதெல்லாத்தையும் கறந்து போட்டு ‘திடீர் மாரடைப்பு வந்து ஆள் போயிட்டாரென்று சொல்லியிருப்பாங்கள்.’ நல்ல வேளை கடவுள் காப்பாத்தினது. பிறகென்ன அது இது என்று எல்லாத்துக்குமாக ஒரு எட்டு இலட்சம் முடிஞ்சுது. கிளட்டு வயசில பிள்ளைகளுக்கு செலவு வைச்சுக் கொண்டு இருக்கிறன்.
முகத்தக்கழுவி ஒரு கோப்பியை வாங்கிக் குடிச்சுக் கொண்டு என்ர ஒரு மணித்தியால நடையை ஆரம்பிச்சன். எனக்கு ஆசுபத்திரியால வரரேக்க கடுமையான கட்டளை நல்லா வேர்க்க விறுவிறுக்க நடக்க வேணுமென்று. எட்டு இலட்சம் செலவழிச்சு செய்த ஒப்பரேஷனால இன்னும் பத்து வருசத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருக்கலாமென்று வரண்டி சேர்ட்டிபிகேட்டும் தந்திருக்கிறாங்கள். அதுக்கிடையில ஏதும் நடந்தா காசைத்திருப்பித் தருவாங்கள் போல. இதை வாயத்திறந்து சொன்னா “உங்களுக்கு எப்பவும் கிரந்தம் பேசத்தா தெரியும” என்று பிள்ளையள் பேசுங்கள். பத்து வருஷத்துக்கு வரண்டி தந்திருக்கிறாங்கள் என்ற திருப்தியோட பேசாமல் வாய மூடிக்கொண்டு திரியிறன்.
நடக்க நடக்க மனசுக்க “ ஆடிய ஆட்டமென்ன பாடிய பாட்டு என்ன?” என்று மேடையில நின்றாடினதுகள் தான்  வந்து போச்சுது. அம்பலத்தில ஆடிறவைக்கு  கைதட்டலும் பாராட்டும் தானே உயிர் கொடுக்கிறது. மேடையில ஆடேக்க ஒரு வருத்தமும் அண்டேல்ல. “அண்ணாச்சியிண்ட உடம்பு வைரம் “ என்று மேடையால இறங்க இளசுகள் வந்து சொல்லுங்கள். அப்ப நெஞ்சு தன்ர பாட்டில நிமிரும்.அதுவும் பெட்டையள் வந்து “நீங்கள் நல்ல பேசனாலிட்டியா இருந்தியள்” என்று சொன்னா கேட்கவே வேணும். ஆடுறதை எப்ப விட்டனோ அப்பதான் உந்த எல்லா வருத்தமும் வந்து குடிகொண்டிட்டுது. முதலில வந்தது ‘சலரோகம்’ இப்ப இருபத்து அஞ்சு வருசமா அது படுத்தாத பாடு படுத்துது. அது வந்தா பிறகென்ன மிச்சமெல்லாம் சேர்ந்தோடி வரும் தானே.
நடந்து சந்திக்கு வந்து சேரந்து ஓடர் பேப்பருகளை எடுக்க ‘அப்புச்சி இந்தப் பேப்பரிலயும் ஒன்றைக் கொண்டு போய் வாசியுங்;கோவன்” என்றாங்கள். எத்தின பேப்பர் வந்தாலும் எல்லாம் ஒரேமாதிரித்தானே இருக்கு என்று சலிச்சுக் கொண்டு நான் வெளிக்கிட சந்தியலயே நின்று பேப்பரைப்பிரிச்சு வாசிச்சுக் கொண்டிருந்தவர்.  “புதுச்சிரட்டையில் பழைய கள்ளுத்தான்” எண்டு முணுமுணுத்தார். ஆ ….அப்புடியோ என்று கேட்டுக் கொண்டு வெளிக்கிட பழக்கமான பேப்பர் பெடியன் ஒருத்தன் சைக்கிள்ள வந்தவன். “ என்ன அப்புச்சி இப்ப உஷாராயிட்டியல் போல” எண்டான். “உஷாராகத் தானே வேணும்” என்று நான் இழுக்க. “பேப்பர் பாத்தனீங்களே மட்டக்களப்பில புத்த பிக்குவிண்ட ஆட்டத்தை அவற்றை படங்கள் எல்லாப் பேப்பரிலையும் போட்டிருந்தவங்கள். “ ஓம், இளம் பெடியள் கொஞ்சம் கடுகடத்து நிக்க இவர் பொலிசுக்கு மேல ஏறிநிண்டு எகிறிறதைப் பார்த்தனான். அதைப்பார்க்க இரண்டாயிரமாம் ஆண்டு கம்பசுப்பபெடியள் ஒரு நாடகம் போட்டவங்கள் அதில ஒரு பலஸ்தீன் கவிதையொன்றை அழகா சொன்னாங்கள் அது தான் எனக்கு ஞாபகம் வந்தது” என்று சொன்னன். “அது என்ன கவிதை அப்புச்சி அதையொருக்கா சொல்லுங்கோ கேட்பம்”; என்றான் பெடியன்.
“அவன் தன்விதைகளை இளவயதினருக்குக் காட்டிக் கொண்டிருந்தான்.ஏனெனில் அவன் பேராசிரியர்களால் உயிரூட்டப்பட்டிருந்தான்” என்று சொன்னன். “உதுக்காகத்தான் அப்புச்சி உன்னட்ட இதுகளைக் கேட்கிறது. அது சரி உவர் எங்கட முதலமைச்சர் எப்பிடி நல்லவரா?கெட்டவரா?” ஏன்று கேட்டான். இவன் வேணுமென்று வாயைக் கிளறி என்னை வம்பில மாட்டப் போறான்; எண்டு போட்டு “ நான் வாறன்” எண்டு வெளிக்கிட்டன். அவன் பின்னால வந்து “ ஒண்டும் சொல்லாமல் போறியள்” என்று நாண்டு கொண்டு நிண்டான். பிலாப்பால் மாதிரி ஒட்டுறானே எண்டு போட்டு “ அவர் சம்பந்தருக்கு உத்தம வில்லன்” என்று சொல்லிப் போட்டு நின்றாக்கரைச்சலெண்டு வந்திட்டன்.


No comments:

Post a Comment