Wednesday 1 February 2017

ஜெயலலிதாவைப் பற்றி வாசகர்களுக்கு முழுமையாக அறியத்தந்துள்ளார்

 க.அருள்நேசன்,குருநகர்

பலர் ஒரு சில துறைகளில் சிறந்து விளங்குவர். ஒரு சிலர் பல துறைகளில் சிறந்து விளங்குவர். இதில் இரண்டாவது நிலையிலேயே தே.தேவானந் அவர்களை ஒப்பிடலாம். காரணம் தேவானந் அவர்கள் நாடகம, ஊடகம்; மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பதை நான் இதுவரை அறிந்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உதயன் பத்திரிகையில் எழுத ஆரம்பித்த பிற்பாடே அறிந்துகொண்டேன்.



மக்களால் உற்றுநோக்கப்படுகின்ற பிரபல்யமானவர்கள் இறந்தால் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை சிலர் எழுதுவதுண்டு. பல மாதங்கள் நடந்த பிற்பாடே எழுதுவார்கள். காரணம் இறந்தவரைப்பற்றிய தகவல்களை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஆனால் இதில் விதிவிலக்காக தேவானந் இருக்கின்றார். அதாவது டிசம்பர் 5ம் நாள் மரணமடைந்த ஜெயலலிதாவைப் பற்றி ஒருநாள் கழித்து டிசம்பர் 7ம் நாள் உதயன் பத்திரிகையில் ஒரு தொடராக எழுத ஆரம்பித்தார் என்றால் உண்மையில் அவரது துறைசாரி ஆளுமை பாராட்டப்பட வேண்டியதே. அதுவும் பலரும் வாசித்து புரிந்துகொள்ளும் இலகு தமிழ் நடையில் எழுதி இருந்ததுடன் இத்தொடரிற்கேற்றவாறு புகைப்படங்களும் உள்ளீர்த்ததும் சிறப்பாக அமைந்திருந்தது.
இன்று சில பத்திரிகைகள் “நீத்தார் புகழ்” என்று ஒரு சில ஆக்கங்கள் வெளிவரும். அதில் முற்றுமுழுதாக இறந்தவரின் புகழ்பாடுவதையே மையமாகக் கொண்டிருக்கும். ஆனால் தேவானந் ஜெயலலிதாவைப் பற்றி எழுதும்போது தனித்து அவரது புகழ் பாடாமல் நடுநிலையாக தனது எழுதுகோலைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் தவறுகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளமையும் தொடருக்குள் ஒரு குறுகிய தொடராக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவைப் பற்றி எழுதியிருந்தமையும் நன்றாக அமைந்திருந்தது.
ஜெயலலிதாவின் 68 வருட வாழ்க்கையை 12 நாட்கள் கொண்ட ஒரு சிறிய தொடராக எழுதி ஜெயலலிதாவைப் பற்றி வாசகர்களுக்கு முழுமையாக அறியத்தந்துள்ளார் தேவானந். இவரது இத்தொடர் வாசகர் உள்ளத்தை தொட்டது என்பது மறுக்க முடியாத உண்மையே. இதுபோன்ற வேறுபல ஆக்கங்களையும் உதயன் பத்திரிகையில் எழுதி வாசகர்களுக்கு விருந்தளிக்க தேவானந் முன்வர வேண்டும். அதற்கு உதயன் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
க.அருள்நேசன்
குருநகர்

No comments:

Post a Comment