Wednesday 1 February 2017

“இரும்பு மனிசர்”



தொடர்ச்சியாக நாலு நாள் லீவு எண்டு போட்டு பேரப்பிள்ளைகள் நாண்டு கொண்டு நின்றுதுகள் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்துக்குப் போக வேணுமென்று அதில ஒரு நாள் கீரிமலை மாவிட்டபுரம் என்று ஒரு சுத்துச் சுத்தினவை. என்னையும் வரச்சொல்லி நிண்டாப்போல போகவேண்டியதாப் போச்சு. கிழடுகட்டைகள் என்றால் கோயில் குளம் போற காலமென்று தான் எல்லாற்ற நினைப்பும்.பிள்ளை பேரப்பிள்ளை எல்லாம் அப்பிடித் தான் நினைக்கினம். முதல் நாள் காங்கேசன்துறையில உந்த ஆமிக்காரன் கட்டி ஓகோவென்று நடத்துற தெல்செவினவோ என்னவோ என்று பெயர்வைச்சிருக்கிற ஹொட்டேலுக்கு போனவையள். அப்ப இந்தக் கிழடுகளைக் கூப்பிடக் கூடாதென்று விட்டிட்டு போயிட்டாங்கள். அது உந்த இளசுகள் கூடிக்குலாவிற இடமெல்லே அது கிழடுகளுக்கு ஒத்துவராது தானே.





இந்த நடப்புகளைப் பார்க்கேக்க ரி.வி நிகழ்ச்சியொன்று தான் ஞாபகத்துக்கு வருகுது. சைவச் சாமியார் ஒருவரும் கிருஸ்தவச் சாமியார் ஒருவரையும் பொதிகை ரி.வியில கதைக்க விட்டாங்கள். இரண்டு சாமியாரும் நல்லா கொண்டும் கொடுத்தும் கதைச்சாங்கள். அப்பிடி ஒரு டிஸ்கசனை இங்கையும் வைக்க வேணும் பாருங்கோ. அவை கதைச்சுக் கொண்டிருக்கேக்க கிருஸ்தவ சாமியார் சொல்லுறார். நாங்கள் துறவிகள் எல்லாவற்றிலும் பற்றற்று இருக்கிறது தான் எங்கட நிலையென்றார். அப்ப அந்தச் சைவச்சாமியார் சொல்லுறார். நான் அப்படியில்லை. நான் எல்லாத்தையும் ‘லவ’; பண்ணுறவன். நான் எல்லாத்திலயும் அன்பு வைச்சிருக்கிறவன். பற்று வைத்தல் தான் உண்மையான  துறவு நிலையென்றார். அதைக் கேட்க வியப்பாய் இருந்தது. அது தான் உண்மை பாருங்கோ. இந்தக்கிழடுகளென்றால் கோயில் குளத்தோட சிவனேயென்று பற்றற்று மேலபோக வீசாக்கு அப்ளைபண்ணி கிடக்கவேணுமென்று  இளசுகள் நினைக்கேக்க அந்த சாமியார் சொன்னது தான் எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும் பாருங்கோ.
கீரிமலையில குளிச்சுப்போட்டு நகுலேஸ்வரத்தில கும்பிட்டு மாவிட்டபுரத்துக்கு வந்து கொண்டிருக்க சீமெந்து பக்ரரிக்கு வெட்டின கிடங்குகள் கண்ணுக்குத் தெரியும். அந்தக்கிடங்குகளை நிரப்பி வீடுகட்டுறதுக்கும் மைதானம் அமைக்கவும் நல்லாட்சி அரசு உறுதிபூண்டிருக்காம். அதைப்பற்றி எங்கட வெள்ளையும் சொள்ளையுமா திரியவைகளுக்கு ஒரு அக்கறையும் இல்லைத்தானே! அது அவனுக்கு வாய்ப்பா இருக்கு நினைச்சதை செய்யிறதுக்கு. உதுகள் எல்லாத்தையும் செய்யிறதுக்கு உந்த சும்மா இருக்கிற ஆமிக்காரங்களை பயன்படுத்துகினமாம். பிழைப்புக்கு தேடிப்பிடிச்சு ஒவ்வொரு வழிகளைக் கண்டு பிடிக்கிறாங்கள். அந்தக்கிடங்கை நாடு முழுக்க இருக்கிற குப்பைகளைக் கொண்டு வந்து போட்டு நிரப்பப் போறதாயும் ஒரு கதையிருக்கு. பிறகென்ன சுற்றுச்சூழுல் எல்லாம் திறமா இருக்கும் தானே!!!! உதுகளைப்பற்றி யாருக்கு கவலை. உந்த இந்தியாக்கார அரசில்வாதிகளைப்பார்த்து வெள்ளையும் சொள்ளையுமா திரியிறாங்களேயல்லாமல். உருப்படியா ஒன்றையும் காணேல்ல. இந்த வெப்பியாரங்களை மனசுக்க வைச்சுக் கொண்டு அசைபோட மாவிட்டபுரம் கோவில் வாசல் வந்திட்டுது. “ அப்பா இறங்குங்கோ கோயிலுக்க போய் கும்பிட்டிட்டு வருவம்’ என்றாள் பிள்ளை. ‘சரி’ என்று போட்டு மெதுவா வாகனத்தால இறங்க தெரிஞ்ச முகமொன்று எதிர்பட்டுது. என்ன அப்புச்சி  “குடும்பத்தோட கோயிலுக்கு வந்திருக்கிறியள் போல” என்ற படி எதிரில வந்து நின்றான் என்னோட வேலைசெய்த கீரிமலைக்காரனொருத்தன். “பிள்ளை நான் இவரோட நின்று கதைக்கிறன் கோவிலுக்கு போட்டு வாங்கோ” என்று சொல்லி அனுப்பிப் போட்டு ‘எப்பிடி இருக்கிறாய்?’ என்று கதையைத்  தொடக்கினன். “இருபத்தியந்து வருஷத்துக்குப்பிறகு ஊருக்கு வந்திருக்கிறன். காணியளைத் துப்பரவாக்கிக் கொண்டிருக்கிறம்” என்றான். “ஏன் உங்களுக்கு இன்னும் வீட்டுத்திட்டம் தரயில்லையே” என்று நான் இழுக்க. அதையேன் கேக்கிறியள். வீட்டுத்திட்டத்திற்கு பத்து பதினைஞ்சு தரம் பதிஞ்சிட்டாங்கள். இப்பகடைசியா இரும்பு வீடு விருப்பமோ என்றும் கேட்டு ஒரு படிவம் நிரப்பினவங்கள். 22 இலட்சத்தில இரும்பில வீடுதாரனென்று சுவாமிநாதன் ஒற்றக்காலில நிக்கிறார். அதைப்பார்த்துக் கொண்டிருக்கிறம்” என்றான் அவன். எனக்கு வாய்கிடக்காமல் “ஓம்…. அவர் ஒற்றக்காலில நின்று மகாராணியாரிட்ட போய் சிங்களத் தலைவர்களை விடுவிச்ச இராமநாதன் பரம்பரையில வந்தவரெல்லே அப்படித் தான் நிற்பார்.”என்றன். “தமிழ்நாட்டில ஒரு இரும்பு மனிசியா  ஜெயலலிதா இருந்தா. அதுக்கு முன்னம் இந்திராகாந்தி இருந்தா. இலண்டனில மாக்கிறட் தச்சர் இரும்பு மனுசியா இருந்திருக்கிறா. எங்களுக்குத்தான் இரும்பு மனுசர் இல்லை. அந்தக் கவலையைப் போக்க இரும்பு வீட்டோட சுவாமிநாதன் வந்திருக்கிறார.;இனி அவரை இரும்பு மனிசர் என்று கூப்பிடலாம். இரும்பு வீட்டால ஒரு இரும்பு மனிசர் கிடைச்சிருக்கிறார்” என்றான் நக்கலாக. அவன்பாவி இதுகளை சொல்ல நான் சொன்னன் “ நீ என்ன வரலாறு தெரியாமல் கதைக்கிறாய் எங்களிட்டையும் ஒரு இரும்பு மனிசர் இருந்தவர் கண்டியோ. அறுபதுகளில தனிச்சிங்களச்சட்டம் கொண்டு வர செல்வநாயமாக்கள் சத்தியாகக்கிரகப் போராட்டம் நடத்தினவை கொழும்பிலயும் யாழ்ப்பாணத்திலயும் நடந்தது. இவையள் சத்தியாக்கிர போராட்டம் நடத்த அவங்கள் விடுவாங்களே பொலிஸ்தடியடி நடத்தினவங்கள். அப்ப தமிழரசுக்கட்சியில இருந்த நாகநாதன் போராட்டம் என்றால் முன்னுக்கு நிற்கிற மனிசன். யாழ்ப்பாணக்கச்சேரிக்கு முன்னால நடந்த போராட்டத்தில பொலிஸ்காரர் கொட்டன் தடியால அந்தாளுக்கு தலையில  அடிச்சவங்கள். அப்பிடி அடிக்க தலையிலபட்ட கொட்டன் தடி முறிஞ்சு போச்சு அதுக்குப்பிறகு இந்தாளை ‘இரும்புமனிசன்’ நாகநாதன் என்று  தான் எல்லாரும் கூப்பிடுறது பாருங்கோ.”
இதைக் கேட்டுப் போட்டு “அப்புச்சி உனக்கு அந்தக்காலத்து விஷயமெல்லாம் நல்லா ஞாபகமிருக்கு அப்பிடியே படம்பார்த்தது போல சொல்லுறாய் என்றான்.” “அம்பலத்தாடிக்கு கதைசொல்லுறதுக்கு சொல்லியே கொடுக்க வேணும”; என்றன். “அது சரி அப்புச்சி உந்த நாகநாதன் தானே அப்ப மாவட்ட நீதியபதியா இருந்த மாட்டீனை தமிழரசுக்கட்சியில எலக்சன் கேட்கப்பண்ணினவர்.” என்றான். “ஓம் உந்த நீதிபதிகளை பிடிச்சுக்கொண்டு வந்து எலெக்னில நிற்பாட்டி வில்லங்கப்படுகிறது தான் தமிழரசுக்கட்சியின்ர வேலை. மாட்டீன் பிறகு ஆளும் கட்சிக்கு தாவ பெரும் தலைகுனிவாப்போச்சுது. அதுக்குப்பிறகு உந்த இரும்பு மனிசர் நாகநாதன் மேடைக்கு மேடை கொக்ரிச்சார். “ “ஆட்டினை வாங்கலாம், கோழியை வாங்கலாம்.ஏன் மாட்டீனையும் வாங்கலாம். ஆனால் எங்களை வாங்க முடியாது” இதைக்கேட்டிட்டு “அந்தக்காலத்திலயிருந்து உந்தக் கூத்துத்தானே நடந்தது” என்றான். “ஓம் ஓம் இதைத்தான் சொல்லுறது வேலில போன ஓணானை பிடிச்சு மடிக்க விட்டிட்டு என்ரை ஐயோ என்ர ஐயோ என்று கத்துறதுதெண்டு” இதை நான் சொல்லி முடிக்கவும் மகளவை வரவும்சரியாப் போச்சு “நான் வாறன். பிறகு சந்திப்பம்” என்று போட்டு நான் வந்திட்டன்.

No comments:

Post a Comment