Saturday, 4 January 2025

"உலகமயமாதலுக்கு பதில் அமெரிக்கமயமாதல்"



Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் புதிய அரசாங்கம், பல சவால்களைஎதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார சரிவிற்குப் பிந்தைய முன்னேற்றத்திற்கு உலக வங்கி, IMF போன்ற அமைப்புகளின் உதவியை நாடி நிதி பூர்த்தியை மேம்படுத்த முயற்சிக்கிறது. சமூக நல்லிணக்கம் இந்த அரசின் முதன்மை வேலைத்திட்டமாகச்சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து சமூகங்களை இணைத்து அரசியல் நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாய சூழலும் காணப்படுகின்றது. அதே வேளை வெளிநாட்டு உறவுகளை தந்திரோபாயமாக முன்நகர்த்த வேண்டியுள்ளது.  இந்தியா, சீனா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான சிறந்த தந்திரோபாயங்களை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த அத்தனை விடயங்களும்; நிலையான அரசியல் சூழலை உருவாக்குவதனூடாக பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்கும் நோக்கம் கொண்டன.

இந்தச் சவால்கள் போதாதென்று பொந்தனும் வந்த கதையாக அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட டிரம் அமெரிக்காவின் அதிஉயர் கதிரையில் ஏறிக் ;குந்தப் போகிறார். அந்தக் கதிரையில் அவர் குந்த முதலே பல முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். உலகின் போக்கைத் தீர்மானிக்கின்ற அந்தக் கதிரையில் அவர் அமர்ந்ததும் இலங்கைக்கு எவ்வாறான தாக்கங்கள் ஏற்படும்? 

டிரம்பின் வருகையோடு இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்iகையை வெளிநாடுகளுடனான தனது உறவை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் ஜனவரி நடுப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி சீனா செல்லவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  அனுரவின் சீன விஜயம் எதை சாதிக்கவுள்ளது 

1. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்க்கமான முடிவுகள்

2. சுயாதீன பொருளாதார வலயங்களில் முதலீடுகளை அதிகரிக்கும் உத்திகள்.

3. போர்ட் சிட்டி மற்றும் ஹம்பாந்தோட்டை உள்கட்டமைப்பு திட்டங்களை விரிவாக்குதல்.

4. சீனாவின் Belt and Road Initiative (BRI)  திட்டத்தில் இலங்கையின் பங்களிப்பை வலுப்படுத்துதல், 

5. பன்னாட்டு வர்த்தக சுமைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான புதிய ஒப்பந்தங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் சாத்தியமாகலாம்.

அதே வேளை, அமெரிக்க ஜனாதிபதியான டிரம்பின்; இரண்டாவது ஆட்சிக்காலம் உலகமயமாதலை வலியுறுத்தவதாக இல்லாமல் அது அமெரிக்கமயமாதலை வலியுறுத்துவதாகவே அமையவுள்ளது எனலாம்.  

America First (அமெரிக்கா-முதலில்); என்ற டிரம்பின் கொள்கை, முழுமையாக அமெரிக்காவின் நலன்களை முன்னிலைப்படுத்தும். அதில் சீனா முக்கிய எதிரியாகக் கொள்ளப்படும், மேலும் அமெரிக்காவிற்கு எதிரான பொருளாதார மற்றும் அரசியல் வலிமைகளைத் தகர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதில் அமெரிக்கா சீனாவுடன்  பொருளாதாரத் துண்டிப்புகள், அதிக வரிகள், மற்றும் தைவானை பாதுகாப்பது போன்ற விடயங்களில்; மோதல் போக்கையே கொண்டிருக்க போகிறது. .

இதன் நோக்கம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மீண்டும் கட்டமைத்தலாகும். டிரம்ப் பதிவியேற்றதும் நிகழப்போகும் மாற்றங்களுக்கான பதட்டம் உலகை தற்போது தொற்றிக்கொண்டுள்ளது. அதற்கேற்றால் போல கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைத்துக் கொள்வது, டென்மார்க்கின் கீரீன் லாண்ட்டை வாங்குவது போன்ற பல முரண்பாடான தகவல்கள் தினமும் வெளிவருகின்றன. டிரம்பின் முடிவுகளை தினமும் காலையில் வெளியிடப்படும் ட்விட்டர் பதிவை பார்த்து பயம்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று அவரது அதிகாரிகள் பதட்டமடைவதை அவர்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.  முற்றிலும் கணிக்க முடியாத, எதிர்பாராத விடயங்களை டிரம்ப் வெளியிடுவார் என்று நம்பப்படுகிறது. அதற்கேற்ப்ப அவரது இராஜதந்திரிகள் எதிர்வினையாற்றுவது மிகவும் கடினம்.

டிரம்ப் ஏற்கனவே உலகில் எரிநிலையிலுள்ள நிலைமைகளில் அவற்றை மேலும் எரியக்கூடியதாக எண்ணையூற்றுவார் என்று நம்பலாம். அது ஆச்சரியமல்ல அது அவரது வழமையான செயற்பாடு என்றால் மிகையாகாது. தற்போது  இரண்டு போர்கள் நடைபெறுகின்றன. ஒன்று வட கொரிய துருப்புக்கள் ரஷ்யாவுடன் இணைந்து உக்ரேனுக்கு எதிராகப் போரிடுகின்றன, மற்றொன்று இஸ்ரேல் காஸா யுத்தம் அதன் நீட்சியாக ஈரானை இஸ்ரேலுக்கு எதிராக மோத வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதைவிட சீனா தைவான் மீது படையெடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இவையெல்லாம் டிரம்பின் செயற்பாடுகளால் பற்றியெரிய வாய்ப்புள்ளது. 

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் வெளியுறவுக் கொள்கையை எவ்வாறு நடத்துவார் என்பதற்கான சில குறிப்புக்களைத் தந்திருக்கிறார். பெரும்பாலும் டிரம்ப்  குறிப்பிடும் முன்மொழிவுகள் வெறும் தலைப்புச் செய்திகளாக முக்கியம் பெறவல்லவையாகவே இருந்தன. அதாவது, உக்ரைனில் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவருவது, அமெரிக்காவில் சட்டவிரொதமாக குடியேறிய 10 மில்லியன் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது போன்ற விடயங்கள் அந்த தலைப்புச் செய்திகளில் முக்கியமானவை.   இவை முன்னோக்கிப்பாய்வதற்குப்பதிலாக குழம்பங்களை உருவாக்குபவையாகவே காணப்படும். 

 அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் தனது கடந்தகாலத் தோல்விகளுக்கு பரிகாரம் தேடும் முய்ற்சியை மேற்கொள்ளும் என்று நம்பலாம். 2016 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையை முதன்முதலில் வென்றபோது ட்ரம்ப் அறிவித்தது போல், இனி உலகமயமாதல்; அல்ல, அமெரிக்கமயமாதல்; உலகெங்கும் வலியுறுத்தப்படும். என்பதை உலகம்புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இரண்டாவது டிரம்பின் பதவிக்காலம்; ஆபத்தான உலகில் அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதற்கான தடுப்பை மீட்டெடுக்கவும் முயற்சிக்கும். இதற்காக, சீனாவுடன் பொருளாதாரத் தொடர்புகளை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என டிரம்பின் ஆலோசகர் குழுவில் பலர் வலியுறுத்துகின்றனர்.

சீனாவின் தீவிர வளர்ச்சி மற்றும் நீட்சிப் பெருக்கம் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவே உள்ளது என்பதே டிரம்ப் அரசாங்கத்தின் கருத்துநிலையாக உள்ளது. 

டிரம்ப் சீன ஏற்றுமதிகளுக்கு 60% வரிகள் (மின்சார வாகனங்களுக்கு 200ம% வரையிலும்) விதிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச வர்த்தக அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் விளைவாக, ஐரோப்பாவும் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலை உருவாகலாம்.

டிரம்பின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர்களின் செயல்பாடுகளைத் தாண்டி அவரது வெளிநாட்டுக் கொள்கை தனிப்பட்ட சுபாவத்தை மையமாகக் கொண்டிருக்கும். வைராக்கியம் மற்றும் திடீரென முடிவுகள எடுப்பது போன்ற விடயங்கள்  பீஜிங் மற்றும் மாஸ்கோ போன்ற அரசுகளுக்கு பதட்டத்தை உருவாக்கும்.

இவ்வாறு, டிரம்ப் தலைமையிலான புதிய உலக ஒழுங்கு அதன் ஆதிக்கம், பிரித்தாளும் நிலைகள், மற்றும் தனிப்பட்ட முடிவுகளை மையமாகக் கொண்டதாக இருக்கும்.

இதில் இலங்கையும் பந்தாடப்பட வாய்ப்புள்ளது.

இலங்கை Belt and Road Initiative (BRI) மூலமாக சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் போது, அமெரிக்கா இலங்கையை அழுத்தம் மற்றும் சலுகைகள் மூலம் சீனவில்; இருந்து விலகச் செய்ய முயலும்.

இலங்கையின் வெளிநாட்டு கொள்கை, டிரம்பின் புதிய ஆட்சியால் உருவாகும் உலகளாவிய மாற்றங்களால் பாதிக்கப்படும் சூழலில் உள்ளது. சீனாவுடனான உறவுகளை முற்றிலும் குறைத்தல் எளிதாக இல்லாதபோதிலும், அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் புதிய சலுகைகள் இலங்கையை புதிய திசை நோக்கி நகர்த்தக்கூடும். அதே நேரத்தில், இலங்கை தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை பாதுகாக்கும் வகையில் சமநிலை கொள்கையைத் தழுவ வேண்டும். உலக அரசியலில் மீண்டும் ஒருமுறை இலங்கை தனது தனித்துவத்தையும் வளர்ச்சி வழிகாட்டும் திறனையும் நிரூபிக்க வேண்டிய நேரம் இது.





No comments:

Post a Comment