( Yarl Thinakural Article 29th Dec, 2024)
Dr. தேவநாயகம் தோனந்த்
அண்மைக் காலங்களின் இந்தியாவின் அயலுறவு கொள்கை ஒரு பதட்டமான நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியாவின் அயல்நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் அதன் விளைவாக அந்த நாடுகள் சீனாவின் பக்கம் நகரும் தோற்றப்பாடுகள் போன்ற நிலைமைகளால் இந்திய வெளியுறவுக் கொள்கை பதட்டத்தில் காணப்படுகிறது எனலாம்.
பொதுவாக இந்தியாவின் அயல்நாடுகளில் ஆட்சியமைப்பவர்கள் தமது முதல் வெளிநாட்டுப்பயணத்தை இந்தியாவிற்கு சென்று ஆரம்பிப்பது வழமை. இது அயலில் உள்ள பெரியண்ணையைப் ( Big Brother ) பார்க்காது போவது தவறாகிவிடும் என்ற பய உணர்வு சார்ந்தது என்ற விமர்சனங்களையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், இதற்கு மாறாக இந்த மாதம் முதல் பகுதிகளில், நேபாளத்தில் புதிதாக தேரந்தெடுக்கப்பட்ட பிரதமர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனா சென்றார். இதற்கு முன், நேபாள தலைவர்களின் முதல் அதிகாரப்பூர்வ பயணத்திற்கு இந்தியாவை தெரிவு செய்வது வழக்கம். இந்த பயணம் மற்றும் பிராந்தியத்தில் நிகழ்ந்த சில மாற்றங்கள் இந்தியாவை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இடதுசாரிக் கொள்கை சார்ந்த அரசாக அமைந்திருந்த வகையில் அதன் முதல் உத்தியோகபூர்வப்பயணமும் சீனாவாக இருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் இந்திய அயலுறவுத் துறை பதட்டமாக இருந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் அனுரகுமாரவின் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப்பயணம் இந்தியாவாக இருந்ததில் இந்தியத் தரப்பிற்கு அதிக மகிழ்ச்சி. இதனை இந்திய ஊடகங்கள் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த பெருவெற்றி என்று கொண்டாடின. மேலும் இதனை சில இந்திய ஊடகங்கள் (Carnival)) களியாட்டம் என்று வர்ணித்தன.
ஒரு இந்திய ஊடகம் "சிறிலங்காவின் சீனாவிலிருந்து விலகல்: இந்திய வெளிநாட்டு கொள்கைக்கு பெரிய வெற்றி" என்ற தலைப்பில் கருத்துக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதேவேளை, இந்த பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு அளித்த முக்கிய உறுதியைப் பல்வேறு இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டின. அவர், "இந்தியாவின் ஆர்வங்களுக்கு பாதகமாக எங்கள் நிலப்பரப்பை எந்தவிதத்திலும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்" என உறுதியளித்தார்.
நேபாளம் மற்றும் இலங்கை நாடுகளின் பயணத் தேர்வுகளைப் பொறுத்தவரை, இந்தியா கவலையுடன் இருந்தாலும் அல்லது வெற்றியை கொண்டாடினாலும், இலங்கையின் நகர்வு அதன் இன்றைய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பெருவெற்றியாகவே பார்க்கப்பட வேண்டும்.
அதே வேளை தென்கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நாடுகளை, எந்த பக்கம் செல்ல வேண்டும் என வலியுறுத்துவதில்லை என்ற கொள்கையைக் சீனா கொண்டிருப்பதாக கூறுகிறது. குறிப்பாக, இந்தியாவின் அண்டைநாடுகள் தமது கொள்கைகளை சுயமாகத் தீர்மானிக்க வேண்டும். இந்த நாடுகள் தங்களது எதிர்கால நலன்களை முன்னேற்றுவதற்கு சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தகிறது. பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான கூட்டு முயற்சிகளைச் செய்ய சீனா உற்சாகமாக உள்ளதாக சீனா வலியுறுத்துகிறது. இதன் காரணமாக, சீனா-சிறிலங்கா உறவுகள் பல ஆண்டுகளாக நிலைத்திருக்கின்றன. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பந்தோட்ட துறைமுகம் போன்ற சீன திட்டங்கள் சிறிலங்காவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. இது விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இங்கு, இந்திய ஊடகங்கள் சீனா- இலங்கை உறவுகளில் மோதல்களை உருவாக்க முயல்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா தன்னை பெரியண்ணை (Big Brother) என்று கருதி செயற்பட்டதன் விளைவு தான் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் சீனா பக்கம் செல்லக் காரணம் என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்தச் சூழலில் சில இந்திய ஊடகங்கள் சொல்வது போல அனுரகுமாரவின் இந்திய விஜயம் "பெரிய வெற்றி" தான், அதே வேளை, இந்தியாவின் நிம்மதியின்மையையும் தன்னம்பிக்கை குறைபாட்டையும் வெளிப்படுத்துகிறது. சீனாவின் பொருளாதார வலிமை தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஈர்க்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இந்திய-இலங்கை உறவுகள் பல தளங்களில் மிக நீண்ட காலத்துக்கு மூழ்கி உள்ளன. இந்த இரண்டு நாடுகளும் பண்டைய காலத்தில் இருந்து வரலாற்றுரீதியாகவும், மதம், கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தில் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டு வருகின்றன. இது மட்டும் அல்லாமல், இருநாடுகளும் பல சவால்களையும் சந்தித்து வருகின்றன, ஆனால் உறவுகளை மேம்படுத்த புதிய வாய்ப்புகளையும் கண்டுபிடிக்கின்றன.
வரலாற்று பார்வையில், இந்தியாவிலிருந்து புத்த மதம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இது இலங்கையின் முக்கிய மத அடையாளமாக மாறியது. இராமாயணத்தில் சித்திரிக்கப்பட்ட இராவணனின் கதைகள் இலங்கையின் பாரம்பரிய கலாச்சாரத்துடன் மிகவும் தொடர்புடையவை. இது இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள புராணங்களை மையமாக வைத்து உறவுகளை அடையாளப்படுத்துகிறது.
அதே வேளை இருநாடுகளின் பொருளாதார உறவுகளும் மிகவும் வலுவானவை. இந்தியா இலங்கைக்கு முதன்மையான வணிக கூட்டாளியாக உள்ளது. 2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (ISFTA) இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார பரிமாற்றங்களை அதிகரிக்க உதவியது.
ஆனால், சமகாலத்தில் சில சவால்களும் உள்ளன. தமிழர்களின் உரிமைகளைப் பற்றிய விவாதங்கள் இந்திய அரசியலில் முக்கிய பங்காகும், இது இலங்கை அரசாங்கத்துடனான உறவுகளில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், சீனாவின் இலங்கையில் முதலீடுகள், குறிப்பாக ஹம்பாந்தோட்டா துறைமுகம், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கின்றன.
இந்த சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், இருநாடுகளும் உரையாடல்களை மேம்படுத்தி, பொதுநலனுக்கான புதிய திட்டங்களை வடிவமைக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இந்தியா குரல் கொடுக்கும் போது, இந்தியா, இலங்கை இடையிலான அரசியல் பதட்டமடையும். பொருளாதார ரீதியாக, புதுமையான தொழில்நுட்பங்கள், மாற்று வலு ஆற்றலின் மீது கவனம் செலுத்தி, புதிய வாய்ப்புகளை உருவாக்குவது இலங்கைக்கு சாதகமாக அமையும். இந்தப்பின்னணியில்
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கான முதற்பயணம் முக்கியம் பெறுகின்றது. பிராந்திய அரசியலில் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. இது இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் வெற்றியாகக் காணப்பட்டாலும், இது அனுரகுமாரவின் மதிநுட்பமான அதே வேளை உறுதியான முடிவாகும். அந்த அடிப்படையில் முதல் உத்தியோகபூர்வ விஜம் இலங்கைக்கு பெருவெற்றி எனலாம்.
இறுதியாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்பட்டால், உலகளாவிய அமைதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் புவியியல் அரசியலில் சமநிலையை உருவாக்க முடியும். உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் இருநாடுகளுக்கும் மக்களுக்கும் நல்ல பலன்களைத் தரும்.
No comments:
Post a Comment