Saturday, 11 January 2025

மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்


Dr. தேவநாயகம் தேவானந்த்

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 25-ஆவது நினைவுப்பேருரையில், "மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்ந்தது. இந்த உரைத் தலைப்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் தமிழரசியல் சூழ்நிலைகளில் உருவாகியுள்ள மாற்றங்களை ஆழமாக ஆய்வு செய்யும் தேவையை முன்வைத்தது. ஆனால் உரையென்னமோ ’அரைத்தமாவை அரைப்பதாகவே’ காணப்பட்டது. இது தற்போது காணப்படும் புலமைத்துவ பின்னடைவை(Intellectual Bankruptcy) சுட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு பல்கலைக்கழக கல்விப்புலம்சார்ந்த ஒருவர் ஒரு மக்கள் தலைவனாகக் கருதப்பட்ட ஒருவரின் நினைவுப்பேருரையை புலமைத்துவ அடைவுளோடு முன்வைத்திருக்க வேண்டும். மாறாக  கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்ற கோதாவில் அந்தக்கட்சியின் கருத்துநிலையையே தனது நிலைப்பாடாகச் சொல்வதென்பது அவரது வங்குரோத்து நிலையையே சுட்டுகிறது என்லாம். சரி அது நிற்க, 


தமிழ்மக்களின் அரசியல் ஆர்வம் மெதுவாக மங்கிவருவது கவலைக்குரிய அம்சமாக உள்ளது. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் வடபுல தமிழர்களின் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. 31% பேர் வாக்களிக்கவில்லை, 10% பேர் அளித்த வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இந்த வாக்குகள், வாக்குப் போடும் முறைதெரியாமல் நடந்தது என்று மட்டும் கருதமுடியவில்லை. சிலர் தமது வெறுப்பை வாக்குச் சீட்டில் கிறுக்கியும் கெட்டவார்த்தைகள் எழுதியும் வெளிப்படுத்தியதாகவும் அறியமுடிகிறது. அரசியல் அமைப்புகளின் மீது நம்பிக்கையிழந்ததன் வெளிப்பாடாக இதனைக் கருதலாம்.

ஆயதப்போராட்டம் ஒரு தலைமையின் கீழ் நடைபெற்ற போது தமிழ்தேசிய அரசியல் கையளிப்புக்களின் குறைபாடுகளும் இதற்கு ஒரு காரணமாக அமைந்திருப்பதைக்காணலாம். இங்கு தேர்தல் அரசியலே தமிழ்தேசிய அரசியலாகக் கொள்ளப்படும் அபாயத்தையும் காணமுடிகிறது. தேர்தல் அரசியலைத் தலைமை வகித்தவர்களின்  தெளிவின்மையும் வழிகாட்டுதலின்மையையும் அதன்வழி எடுக்கப்பட்ட முடிவுகள் இந்த நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன. 

தமிழ் தேசிய அரசியலில் வழிகாட்டுதலின் தலைமையின்மையும் அரசியல் கட்டமைப்பின் தெளிவின்மையும் மக்கள் மத்தியில் அரசியல் ஆர்வத்தை மங்கச் செய்துள்ளது. யுத்தத்தின் முடிவுக்கு பின்னர், தமிழர் அரசியல் தனது அடையாளங்களை இழந்ததோடு, ஒரு குழப்பமான நிலை உருவாகியுள்ளது. இதில், வடபுல தமிழர்கள் தேசிய நீரோட்டத்துடன் இணைந்து முன்னேறுவதை விரும்புகிறார்கள் என்பதற்கான தோற்றம் நிலவினாலும், அது மொத்தத்தில் தனித்துவத்தை இழப்பதாகவும் தமிழர் உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இங்கு மக்களிடமிருந்து அரசியல் பிரிக்கப்பட்டு தனியாக ஒருசிலரின் கைகளில் இருப்பதைக்காணலாம். ஒருசிலரின் கைகளில் அரசியல் இருப்பதால் அது பணம்சார்ந்த அரசியலாகப்பரிணமித்திருப்பதைக்காணலாம். பணத்துக்கான அரசியல் பணம்தேடும்  அரசியல் என்பதாகவே விடுதலைக்காகப் போராடிய மக்களின் அரசியல் காணப்படுகின்றது. உண்மையில் பணம் இல்லையென்றால் அரசியல் இல்லை என்ற நிலை காணப்படுகின்றது. இந்தத் தடவை 23 கட்சிகள் 21 சுயேச்சைகள் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கின. இது தலைமையற்ற மக்கள் கூட்டத்தின சிதைவைக்குறித்தாலும் அரசியல் தலைமையை தேடுவதான நீண்ட பயணத்திற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிநின்றது. இங்கு இத்தனை கட்சிகள் சுயேச்சைகள் எதை நம்பி தேர்தல் அரசியலில் இறங்கினார்கள். இவர்களால் மக்களை அரசியல் மயப்படுத்த முடிந்ததா? ஏன்றால் இல்லை என்றே குறிப்பிடலாம். இத்தனைபேரும் தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட பணத்தை நம்பி களம் இறங்கினார்கள் என்றால் அது மிகையாகாது. 

பணம் தான் தேர்தல் அரசியலில் முக்கியமானது என்பதை நம்பியே தமிழ் அரசியலும் பயணிக்கிறது. பத்திரிகை விளம்பரம் கலர்அச்சுப்பதிப்புக்க்ளில் துண்டுப்பிரசுரம்; என்றும் வீடுவீடா தரிசனங்களுக்காக கூலிக்கு பிடிக்கப்பட்ட ஆட்கள்,   பொலிஸ் கிளிக்ககிளிக்க ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் இதனை எல்லாவற்றையும்விட பணம் செலுத்திய சமூக ஊடக விளம்பரங்களை நம்பியே பலர் அரசியல்களத்தில் குதித்தார்கள.; மக்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவே அணைத்துக்கொள்ளலாம் என்று முயற்சி செய்தார்கள். பத்திரகைகள் இணையத்தளங்கள் தொலைக்காட்சிகள் எல்லாம் தேர்தல்கால வருமானத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளன. விளம்பரம் போட்டவரின் செய்திகளே பிரசுரமாகின, ஒளிபரப்பாகின. இந்த நிலைமைகளால் அரசியல் வெறுமை நிலை உருவானது. தற்போதைய தேர்தல் முறை, மக்களாட்சியில் பங்கேற்கும் உரிமையை பரிபூரணமாக நிலைநிறுத்தவில்லை. மக்களின் வாக்குகள் பணத்துக்கு வாங்கப்படும் நிலை பரவலாக காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் செலவழிக்கும் மொத்த பணம் வாக்காளர்களின் எண்ணங்கள் பொருளாதார நன்மைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன என்பதைப் பரப்புகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் செலவழித்தது இதற்கான உதாரணமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் ஒரு இலக்கைத் தீர்மானித்து அதை அடைவதற்காக வாக்களிக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். பணத்துக்கு வாக்களிக்கும் நிலை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.

இந்தப் பின்னணியில்; தமிழர் அரசியல் மையம் தொலைந்த அரசியலாக உருவாகியிருக்கிறது. இப்போது தமிழர்கள் தமது அரசியல் மையத்தை தேடிக்கண்டுகொள்ள வேண்டியதாகிறது. எமது தூர இலக்கு என்ன ? அதன் செல்வழி என்ன ? என்பதை தெளிவாக்க வேண்டியுள்ளது. இங்கு , விடுதலைப் புலிகளின் இலக்கே இப்போதும் தமிழர் இலக்கு என்று கொள்ள முடியுமா என்ற கேள்வி உண்டு.

தமிழ் அரசியல் தனது மையத்தை தீர்மானித்து அதனைச் சுற்றி நிலைநிறுத்தப்பட வேண்டும். ஆனால், இப்போது தெரிவாகியுள்ள அரசியலவாதிகள் தங்களை சாகசங்கள் செய்யும் சாண்டோக்களாகக் கருதுகிறார்கள்  முகப்புத்தக வீரர்களாகவும் யூரியூப் பிரபல்யங்களாகவும் ஆகிவிடுவதால் தாம் மக்கள் மத்தியில் அரசியலவாதியாக நிலைபெறலாம் என்று எண்ணுகிறார்களே தவிர மக்களிடம் அரசியலைக்ககைளிக்க தயாராகவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாவகச்சேரியில் சுண்ணக்கற்களை ஏற்றுச்சென்ற பாரவூர்தியை ஒருசிலரோடு சேர்ந்து மறித்து வாகனத்தின் மேல் ஏறி சாகசம் நிகழ்த்த அதனைப்படம்பிடிக்க சிலரை ஏற்பாடு செய்யதிருக்கிறார். தனது அரசுக்கெதிராக யூரியுப்பர்களோடு தானே போராட்டம் நடத்தும் பரிதாப நிலைக்கு அந்தப்பாராளுமன்ற உறுப்பினர் வந்திருக்கிறார்.

மக்கள்மைய அரசியல் என்பது தனி யுக்தியோ, குறுகிய கால திட்டமோ அல்ல. இது நீண்டகால முயற்சியாக இருக்க வேண்டும். கல்வியாளர்கள், சமூகப் பணியாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் ஒருமித்து புதிய அரசியல் சிந்தனைகளை உருவாக்க வேண்டும். இளைய தலைமுறையை அரசியல் துறைக்குள் அழைத்து வர கல்வி மற்றும் செயல்முறை அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் கோரிக்கைகள் ஒரு மையநிலைப்பட்டு வெளிப்படையாக அடையாளம் காணப்பட வேண்டும். அதனை முன்னெடுக்குவதற்கான உள் மற்றும் வெளி கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மக்களை தனித்த தீவுகளாக மாற்றாமல், அவர்களுக்கான சமுதாய அடிப்படையிலான ஒன்றிணைந்த செயற்பாடுகளை வகுக்க வேண்டும்;.

"மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்" என்பது தமிழ்தேசிய அரசியலின் மீள்புதுப்பிப்புக்கு வழிகாட்டும் குறிகாட்டியாக அமைய முடியும். அரசியலின் நிலைமையை மக்களின் கைகளுக்கு மீண்டும் அளிக்கவேண்டிய காலம் இது. அந்த முயற்சியில், ஒவ்வொரு தமிழருக்கும் பங்கு உள்ளதாக உணர்த்தும் கடினமான, ஆனால் சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 


No comments:

Post a Comment