Dr. தேவநாயகம் தேவானந்த்
(Sunday Yarl Thinakural 19.01.2025)
டிசம்பர் 17, 2022 அன்று, வடக்கு இலங்கை மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். டிசம்பர் 18 அன்று, படகில் இருந்து 104 பேர் கொண்ட குழு மீட்க்கப்பட்டனர். கடற்படை அவர்களை மியான்மர் நாட்டின் ரோஹிங்கியர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடற்றவர்கள், மியான்மரில் இனஅழிப்பு செய்யப்படுவதால்; தமது வாழ்விடத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு தமது நாட்டைவிட்டு கடல்வழியாக வெளியேறியவர்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு கடற்படையால் மீட்கப்பட்டார்கள்.
ஜனவரி 10, 2025 தமிழாராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகளளின் 51ம் ஆண்டு நிறைவு நினைவு தினம் 1974ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். இது இலங்கை சுதந்திரம் அடைந்தத்ன பின்னர் எழுச்சியடைந்து வந்த சிங்களத் தேசியத்திற்கு நிகரான தமிழ்தேசிய எழுச்சிக்கான சிகரமாகப் பார்க்கப்பட வேண்டியது. தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு தெடர்பான தமது பெருமையை போற்றுவதாக அதைப்பறைசாற்றுவதாக அந்த மகாநாடு நடைபெற்றது.
தற்போது பல்கலைக்கழகங்களில் நிறையவே ஆராய்ச்சி மகாநாடுகள் நடக்கின்றன அவையெல்லாம் மக்கள் கவனத்தைப் பெறுவதாகத் தெரியவில்லை. இந்த ஆராய்ச்சி மகாநாடுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருநப்பதாகத் தெரியவில்லை. இன்று ஆராய்ச்சி மகாநாட்டின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் சிலபத்துப்பேர்கள் கூடக்கேட்பதில்லை. ஆனால் 1974 நடைபெற்ற தமிழாராச்சி மநாநாடு மக்களின் எழுச்சி மகாநாடாக நடைபெற்றது. அதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமைவகித்தார். ஒருவாரகாலம் தொடர்ச்சியாக நடைபெற்ற மகாநாட்டில். உள்ளுூர் கலைஞர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள என்று எல்லோரும் ஒன்று திரண்டு பணியாற்றினார்கள். தமிழ்லாராய்ச்சி மகாநாட்டை பொது மக்களின் உதவியுடன் குறிப்பாக அரச ஆதரவின்றி அத்தனை சிறப்பாக நடத்தியிருந்தார்கள். பல ஆயிரம் பேர் திரண்டார்கள். அது ஒரு இனத்தின் அடையாளமாக தமிழின் மார்தட்டலாக அமைந்திருந்தது. ஊர்கள் தெருக்கள் தோறும் தோரணங்கள் வாழைகள் பனைமரங்கள் நட்டு கொண்டாடினார்கள். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொருகுடிமகனும் கொண்டாடினான். இதில் பண்பாடு மொழி வாழ்விடம் போன்ற பலவற்றின் பிணைப்பின் மையமாக அந்த மகாநாடு நடைபெற்றது. இந்த எழுச்சியை எதிர்பார்த்தோ என்னவோ மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை அப்போது ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை.
மகாநாட்டை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்திருந்தது. குறிப்பாக, மாநாடு நடைபெறுவதற்கான முக்கிய அரங்குகளின் அனுமதி இறுதி நேரம் வரை மறுக்கப்பட்டிருந்தது. மகாநாட்டில் கலந்து கொள்ள பல வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா மறுக்கப்பட்டது. இந்தத் தடைகள் ஒரு ஆராய்ச்சி மகாநாட்டை தமிழ்தேசிய எழுச்சி மகாநாடாக மாற்றம் கொள்ளச் செய்திருந்தது. தடைகள் அதிகரிக்க அதிகரிக்க எவ்வாறு இருந்தாலும், மகாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற மனவெழுச்சி அமைப்பாளர்களிடமும், மக்களிடமும் இருந்தது. மக்கள் அலை அலையாகத் திரண்டதைக் கண்ட அரசாங்கம் பின்னர் வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா வழங்கியது.
மாநாட்டுக் குழுத்தலைவர் நீதியாளர் தம்பையா மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு விரும்பவில்லை. ஆகையால் அவர் தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் தமிழ்துறைப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தலைமையில் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. மூன்றாம் திகதி ஆரம்பமாகி பத்தாம் திகதிவரை யாழ். முற்றவெளி திறந்த வெளியரங்கில, வீரசிங்கம் மண்டபத்தில்; சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் யாழ்குடாநாடு விழாக்கோலம் பூண்டிருந்தது. எந்தவொரு ஆராய்ச்சி மகாநாடும் இதுபோல சிறப்பாக மக்கள் திரளுடன் நடைபெறவில்லை எனலாம்.
இவ்வாறு எழுச்சிக் கோலக்கொண்டிருக்க மகாநாட்டின் இறுதி நாள் 1974ஆம் ஆண்டு ஜனவரி பத்தாம் திகதி மக்கள் உணர்வோடு கலந்திருக்க அறிஞர்கள் தமிழின் பெருமைகளையும், பண்பாட்டின் பெருமையையும் பற்றிப் பேசினார்கள். கைதட்டல,; ஆரவாரம், உற்சாகம் மிகுந்திருந்தது. அப்போது தமிழகப் பேராசிரியர் நைனா முகமது” பேசிக் கொண்டிருந்தார். பொங்கிவரும் போது பானை உடைந்தது’ போல அந்த ஆரவாரத்துக்குள் புகுந்த இலங்கைப் பொலிசார், துப்பாக்கிச் சூடு நடத்தினர் வன்முறைளில் ஈடுபட்டனர் அதில் ஒன்பது பேர் சாவடைந்தனர். அந்த வன்முறையை அரங்கேற்றியவர் பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா, அவர் பின்னர் அப்போதிருந்த பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் காவற்துறை அத்தியட்சகராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
இது நடந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது அந்த நிகழ்வை நினைவுகூறும் முகமாக ஒருநிகழ்வை நல்லூரில் தமிழ்தேசியக்கட்சி பொங்கல் பரபரப்புக்கிடையில் ஜனவரி 13 அன்று ஒழுங்கு செய்திருந்தது. அதற்கு ஒருசில பத்துப்பேர் வந்திருந்தார்கள். சிறப்பான தலைப்பொன்று கொடுத்திருந்தார்கள.; இங்கிருந்து எங்கே? ஏன்ற அந்தத் தலைப்பில் பலர் பேசினார்கள் அரசியல்வாதிகள் பலர் பேசியிருந்தாலும் அதில் அரசியல்தனம் இல்லாமல் ஒரு இனத்தின் எழுச்சியை முன்னகர்ந்த வேண்டும் என்ற உண்மையான விருப்பம் இருந்தது தெரிந்தது.
இதில் பேசிய சிவில்சமூக செயற்பாட்டாளரும் அறிமுக அரசியல்வாதியும் தந்தை செல்வாவின் பேரனுமான ச.இளங்கோ குறிப்பிட்ட விடயம் மேலும் தேடலைத் தூண்டியது, அதாவது தமிழாராய்ச்சி மகாநாடு சிங்களத் தேசியத்திற்கு எதிரான தமிழ்தேசிய திரட்சிக்கு வித்திட்டது. ஆந்தப்படுகொலைகள் தமிழர் இருப்பிற்கான போராட்டத்தை வலுப்படுத்தியிருந்தது. சிங்களத் தேசியத்தின் தீவிரமான எழுச்சியின் பின்னர் தமிழர் முற்றாக நிராகரிக்கப்பட்ட சூழலில் போராடாமல் இருந்திருந்தால் மியான்மாரின் ரோகிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிரான இனஅழிப்பு போன்ற ஒன்று நடந்து இந்த நாட்டில் தமிழர்கள் இல்லாது போயிருக்க வாய்ப்புள்ளது. ஆதனால் இந்த நாட்டில் தமிழர்கள் போராடியதால் தான் இங்கு நாம் இருக்கிறோம்.’ ஏன்ற கருத்தை இளங்கோ முன்வைத்தார். நீண்டநாட்களாகவே சில புத்தியீவிகள் சொல்லிவரும் ஒரு விடயம் காதைக்குடைந்துகொண்டிருந்தது. போராட்டத்தால் தமிழர்கள் பலவற்றை இழந்தார்கள் என்று எதிர்ப்பதைவிட அனுசரிப்பினூடாக நிறையப் பெற்றிருக்கலாம் என்று கூறுவதை காதுபுளிக்கக் கேட்டிருக்கிறேன். இதற்கு நேர்மாறாக இளங்கோவின் கருத்து ஏனோ தூரத்தே தெரியும் விடிவெள்ளி போன்று இருந்தது. ஆக ஒடுக்கப்படும் ஒரு இனம் தனது இருப்பு கேள்விகுட்படுத்தப்படும் போது தனது இருப்புக்காக போராட வேண்டும். மாறாக, ரோஹிங்கியர்கள் போல எதிர்த்து போரிடாமல் இருந்தால், இனச்சுத்திகரிப்புக்கு ஆளாக நேரிடும்.
ரோஹிங்கியர்கள் மியான்மாரின் முஸ்லிம் சிறுபான்மை குழுவாக உள்ளவர்கள். 2017 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு, மியான்மாரில் சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்கியர்கள் வாழ்ந்தனர், அங்கு அவர்கள் மியான்மாரின் முக்கிய பௌத்தக் மதக்குழுக்களுடன் மொழி, மற்றும் மதம் ஆகியவற்றில் வேறுபடுகின்றனர். ரோஹிங்கியர்கள் 15ஆம் நூற்றாண்டிலிருந்து அங்கு வாழ்கிறார்கள். மியான்மர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. 1948ல் மியான்மாருக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து, ரோஹிங்கியர்களின் வரலாற்று உரிமைகளை மறுத்து, அவர்களை நாட்டின் 135 அதிகாரப்பூர்வ இனக் குழுக்களில் ஒன்றாக அங்கீகரிக்க அந்த நாட்டில் ஆட்சிசெய்தவர்கள் மறுத்துவிட்டனர். ரோஹிங்கியர்கள் மியான்மரில் வந்தேறுகுடிகளாக கருதப்பட்டு அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது பெரும்பான்மை பௌத்த மதத்தினார் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டு அரசியல் பிரதிநிதிகள் கூட இல்லாத நிலைமை காணப்படுகின்றது. ரோஹிங்கியர்கள மியான்மரில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் என்று ஒரு வெள்ளை அட்டையை விநியோகிததிருக்கிறார்கள். இதே நிலைமை இலங்கைத்தமிழர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். தமிழராய்ச்சி மாநாடு அதனைத்தாடர்ந்து வட்டுக்கோட்டைத் தீர்மானம், ஆயதப்போராட்டம் என்று போராடாதுவிட்டிருந்தால் இலங்கைத் தமிழர்களும் இனச்சுத்திகரிப்புக்கு ஆளாகியிருப்பார்கள்; என்பது முக்கியமான ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து நிலையாகும்.
No comments:
Post a Comment