Sunday, 23 February 2025

2025-ஆம் ஆண்டின் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை - விமர்சனப் பார்வை

Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் மலிந்து கிடக்கின்ற ஊழல், முறைகேடு போன்ற விடயங்களில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்கான முறைமை மாற்றத்தை முன்னினைப்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி அதனை நோக்கி நகர்கிறதா? ஆல்லது ஏலவே இருக்கின்ற அதிகாரக்கட்டமைப்புக்களில் ஏறிக்குந்தியிருந்து அதனைச்சுவைக்கிறதா? ஏன்ற கேள்வி வலுவாகிறது. கடந்த வாரம் பிரதமமந்திரி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார் அப்போது சிறுவர் உளநலமேம்பாடு தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்காக அவரைச்சந்திப்பதற்கு வாயப்புக்கேட்டு அமைச்சர் சந்திரசேகரத்தைத் தொடர்புகொண்டிருந்தோம். பின்னர் அவர் குறிப்பிட்ட ஒரு நபரைத் தொடர்பு கொண்டு இறுதியாக கந்தர்மடத்திலுள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். என்னொடு ஊடக நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அது ஏலவே சினிமாஅரங்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் வைத்திருந்த அலுவலகத்திற்கு ஒப்பானதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதே கேள்விகள்,அதே அணுகுமுறைகள், அதே மூடிய அறைகள், முறைத்த முகங்கள் என்று எந்த மாற்றத்தையும் காணவில்லை. தெளிவான பதில்கள் இல்லை, தமது அலுவலத்திலேயே மக்கள் அணுகும் முறைமையில் மாற்றத்தை செய்ய முடியாதவர்கள் எப்படி நீண்ட காலம் புரையோடிப்போன நிலைத்த கட்டமைப்புக்களில் மக்கள் சார்பு நிலையை உருவாக்கப்போகிறார்கள் என்பது புரியவில்லை. அது நிற்க,

இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டம் வடக்கு மக்களுக்கு அதிக நிதிஒதுக்கிய வரவுசெலவுத்திட்டமாக குறிப்பிடப்படுகின்றது. "வடக்கின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மாகாண ரயில்வே மற்றும் பாதை வசதிகளை மேம்படுத்துவோம்" என்று ஜனாதிபதி உரையில் தெரிவித்துள்ளார். மேலும், விவசாய மற்றும் கடல் தொழில்களுக்கு அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படும். சிறப்பாக, யாழ்ப்பாணத்தில் தண்ணீர் மேலாண்மை திட்டங்கள், கிளிநொச்சியில் விவசாய பரப்புகளை விரிவுபடுத்துதல், வவுனியாவில் புதிய தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், "இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வடக்கு மாகாணத்தில் தொழில்துறை வலயங்களை மேம்படுத்துவோம்" என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு பெரிய ஆதரவாக இருக்கும். மேலும், யாழ்ப்பாண நூலகத்திற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் இரசாயனச் தொழிற்சாலைக்கு 750 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது

2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதார மறுசீரமைப்பு, வறுமை ஒழிப்பு, முதலீட்டு வளர்ச்சி மற்றும் இலங்கையின் அரசியல் நிலைமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு அதனைச் சமாளிக்கும்முகமாக இநதத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவே உணரமுடிகிறது. வரவுசிலவுத் திட்டத்தின் முக்கிய அம்சம் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதை அடிப்படையாகக் கொண்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. இலங்கையின் பொருளாதாரத்தில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார துயர நிலைதான் இன்று வரை தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், இந்த உரையில் முன்மொழியப்பட்ட திட்டங்கள் சாத்தியமானதா?  என்ற கேள்விகள் எழுந்துள்ளன. வரி உயர்வு, நிதி நிர்வாக கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது.

2025-ம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னதாக இவ்வகையான ஒரு வரவுசெலவுத் திட்ட உரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தேவையாகவுள்ளதை மறுப்பதற்கில்லை. இது அரசின் மீது  மக்களிடையே நம்பிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த காலத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட தவறுகளைப், முறைகேடுகள்,ஊழலுக்கான சரியான பரிகாரநடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் இதற்கான முறைமை மாற்றம் நடைபெறவேண்டும். அது நடைபெறாமல் வெறும் பேச்சுக்களின் சோடனைகளால் மட்டுமே உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ள முடியாது. 

உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் நிலையான கொள்கைகள் மற்றும் சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் குறித்த உறுதிப்பாட்டை எதிர்பார்க்கின்றனர். இது சரியாக அமையாவிட்டால், வணிக துறையில் எந்த வளர்ச்சியும் கண்டு கொள்ள முடியாது."நாட்டின் முதலீட்டு சூழலை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக செயல்படும்," என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது சரியாக அமையாவிட்டால், வணிக துறையில் எந்த வளர்ச்சியும் கண்டு கொள்ள முடியாதிருக்கும்.

"அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பது அரசின் திடமான நோக்கம்," என்று ஜனாதிபதி உரையில் வலியுறுத்தினார். வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கல்வி முன்னேற்றம் போன்ற முக்கிய அம்சங்கள் இந்த உரையில் உள்ளன. ஆனால், இதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் இல்லை. குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் திட்டங்கள் நீடிக்கப் போவதா, இல்லையா என்பதும் சரியாக விளக்கப்படவில்லை.

"எல்லா இனத்தவரும் ஒன்றாக முன்னேற வேண்டும்," என்று மேலும் தனது உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் சிறுபான்மையினருக்கு இந்த வரவு செலவுத் திட்டம் எந்தளவிற்கு பயனளிக்க முடியும் என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. தற்போதைய இலங்கையின் நீதி நிர்வாகம் சட்டவாக்க கட்டமைப்புக்களில் முஸ்லிம்கள், தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட சமூகங்களுக்கு பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. அரசாங்கத்தின் புதிய முதலீட்டு திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள்  அவர்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதில் கேள்விகள் எழுகின்றன. இதற்கான தெளிவான திட்டவரைபை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அத்துடன், சிறுபான்மையினருக்கான கல்வி மற்றும் ஆரோக்கியத் துறையில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்கள் குறைந்த அளவில் மட்டுமே உள்ளன. இன ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் சமநிலையான அபிவிருத்தி திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இனவாதம் மற்றும் பெரும்பான்மையின மதவாதம்தத்திலிருந்து விலகி, அனைவருக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டிய அவசியம் மிகுந்துள்ளது.

2025-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆவணமாக இருக்கிறது. "நாம் எல்லோருக்கும் பொருளாதார நலனை உறுதி செய்ய வேண்டும்," என ஜனாதிபதி உரையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அரசின் நடவடிக்கைகள் வெறும் அரசியல் உத்தியாகவே மாறாமல், அதன் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என்பதே மிகப் பெரிய கேள்வி. சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார பின்னணியில் பின்தங்கிய சமூகங்கள் நியாயமான அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்யாவிட்டால், இது வெறும் காகிதத் திட்டமாகவே நிலைத்தும் விடலாம்.


No comments:

Post a Comment