Sunday, 2 March 2025

அரிசிக்கு அரோகரா!!

 


Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை அரசி மற்றும் தேங்காய்த்தட்டுப்பாட்டில் திண்டாடுகிறது. பாராளுமன்றத்தில் இதற்கு விநோதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் அரிசித்தட்டுப்பாட்டுக்குக்காரணம் இலங்கையில் உள்ள  நாய்கள் என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏதிர்காலத்தில் நாய் ஒழிப்புத் திட்டம் ஒன்றுக்கான முன்மொழிவாகவும் அதனைக்கருதலாம். இந்தச் சுழலில் "அரிசிக்கு அரோகரா" என்று சொல்லத் தூண்டுகிறது. இது பொதுவாக அரிசிக்காக வாழ்த்தும் ஒரு கோஷமாக கருதமுடியும்.

அரோகரா என்ற சொல்லுக்கு தமிழ் மதச்சார்ந்த மற்றும் பாரம்பரிய முறையில் "வாழ்த்துக்கள்" அல்லது "பெருமிதக் கூச்சல்" என்ற அர்த்தம் இருக்கிறது. பெரும்பாலும் இந்தச் சொல் கோவில் விழாக்களில், சமய நிகழ்ச்சிகளில், மற்றும் மகிழ்ச்சி தெரிவித்தல் போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையைப்பொறுத்தளவில் அரிசி என்பது வாழ்வின் அடிப்படை உணவாக இருப்பதால், அந்த அரிசி உற்பத்திக்கு நன்றி கூறுதல். அரிசி ; சீரான கிடைப்பதற்கு  வாழ்த்து தெரிவிப்;பதைக்குறிப்பதாகக் கருத முடியும். 

ஆனால் இலங்கை அரிசி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நிலையில்,உணவுப் பொருள் பற்றாக்குறைக்கு எதிராக ஒரு எதிர்மறை அரத்தத்தையும் தருவதாகவும் இதனைக் கருதமுடியும். அரிசி விலையேற்றம், பற்றாக்குறை, அல்லது அரசு கொள்கைகளால் மக்களுக்குத் ஏற்பட்ட சிரமங்களுக்கு ஒரு விமர்சன உரையாடலாகவும் கருதமுடியும்.

இலங்கை அரசின்  தவறான விவசாயக் கொள்கைகள், இறக்குமதி குறைபாடு, சீரான விநியோக்கட்டமைப்பின்மை போன்றவற்றால் ஏற்பட்ட உணவுப் பொருள் நெருக்கடியால் மக்கள் உணவின்றி கஷ்டப்படுவதான நிலைமையைச் சுட்டுவதாகவும் கருதலாம். அரிசி செழிப்படைய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் விவசாயம், உணவுப் பாதுகாப்பு, மற்றும் சமூக நலத்திற்காக எழுப்பப்படும் ஒரு எதிர்வினையாகவும் கருதப்படக் கூடியது. 

அரிசி என்பது உலகின் பாதியிலுள்ள மக்களின் பிரதான உணவாகும், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் அரிசி பிரதான உணவாக உள்ளது. இலங்கையின் வருடாநதம் சுமார் 3.5 முதல் 4 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை உற்பத்தி செய்கிறது. அதே வேளை அரசிப்பயன்பாடு 2.3 முதல் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். பொதுவாக, இலங்கை தனது உள்நாட்டு தேவையை கிட்டத்தட்ட முழுவதுமாக உற்பத்தி செய்யும திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும் இயற்கை பேரழிவுகள், அரசியல் கொள்கைகள் மற்றும் பொருளாதார சிக்கல்களால் சில வேளைகளில் அரிசியை இந்தியா தாய்லாந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இலங்கையின் ஒரு மனிதரின் ஆண்டுக்கு ஒன்றிற்கான அரிசிப் பயன்பாடு சுமார் 100 முதல் 110 கிலோகிராம் ஆகும். இது ஒரு நாளைக்கு சுமார் 275-300 கிராம் அரிசி என்ற அளவில் உள்ளது. 

உலகவரலாற்றில் அரிசி ஃகோதுமை பற்றாக்குறை பிரஞ்சு புரட்சியைத் (1789-1799) தூண்டிய முக்கிய காரணமாக இருந்தது. இதே போல சீன வரலாற்றில், அரிசி பற்றாக்குறை பல புரட்சிகளுக்குக் காரணமாக இருந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் தென் கிழக்காசிய அரிசி உற்பத்தி பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. இதனால் இந்தியா மற்றும் சீனாவில் பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. 1943 ஆம் ஆண்டில் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 

இலங்கையின் அரிசி உற்பத்தி பருவமழைகளில் அதிகம் தங்கியுள்ளது. தவறான மழைப்பொழிவு, நீண்ட வறட்சி ஆகியவை நெல் உற்பத்தியை பெரிதும் பாதித்தன. 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் இலங்கையின் காலநிலை மாறுபாடு காரணமாக பெருமளவு விளைச்சல் குறைந்தது. அதே வேளை ஆட்சியாளர்களின் தவறான விவசாயக் கொள்கைகள் அரசித்தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.


2021 இல், கோட்டபாய ராஜபக்ச ஆட்சியமைத்ததும் இலங்கை அரசு இரசாயன உரங்களை தடை செய்து முழுமையாக இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தது. ஆனால், இந்த மாற்றம் திடீரென கொண்டுவரப்பட்டதால் விவசாயிகள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். விளைச்சல் கடுமையாக குறைந்து, நாட்டில் அரிசி பற்றாக்குறை தீவிரமாகியது.

அதே வேளை அரிசித்தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை பெரும்பாலும் அரிசி இறக்குமதி செய்தது.  ஆனால், நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்புகள் கடுமையாக சரிந்ததால், இறக்குமதியை மேற்கொள்ள முடியாமல் போனது. மேலும், இலங்கை ரூபாயின் மதிப்பு குறைந்ததால், இறக்குமதி செய்யும் அரிசியின் விலை அதிகரித்தது. அதே வேளை பனையால விழுந்தவன மாடேறி மிதித்த கதையாக, நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாய இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் விளைச்சலை மேலும் பாதித்தன. இதற்கு முன்னர் கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விலை அதிகரித்தது. மேலும், இந்தக்காலகட்டத்தில் காணப்பட்ட பொது முடக்க நிலை காரணமாக விவசாயத் தொழிலாளர்களின் வேலைமுடக்கம் உணவுப் பொருள் உற்பத்தியை மேலும் குறைத்தது. இந்தத் தொடர் பாதிப்புக்கள் தற்போது இலங்கையின் அரிசி விலையை அதிகரிப்பதற்கான காரணமாகக் குறிப்பிட முடியும். 

இந்த நெருக்கடியிலிருந்து குறிப்பாக விவசாயத்துறையை மீட்டெடுப்போம் என்ற உறுதிமொழியுடன் ஆட்சி அமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு சிறந்த திட்டங்களை முன்வைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள்து. இதற்காக, விவசாயிகளுக்கு உரம், மேம்பட்ட விதைகள் மற்றும் தண்ணீர் மேலாண்மை உதவிகளை வழங்கி உள்நாட்டு அரிசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு புதிய நவீனமயப்படுத்தப்பட்ட  தொழில்நுட்பங்களை பயன்படுத்தல் அவசியமாகிறது. உயர் விளைச்சல் தரும் அரிசி வகைகள், தானியங்கி இயந்திரங்கள், மேம்பட்ட பாசன முறைகள் போன்றவை பயனுள்ள வழிமுiறாயக இருக்கும்.

அதே வேளை இலங்கை அரசாங்கம் நிலையான வேளாண்மை கொள்கைகளை ஏற்படுத்தி, இயற்கை மற்றும் இரசாயன விவசாயத்தின் சமநிலையை வலியுறுத்த வேண்டும். மேலும் மாற்று உணவுப் பொருட்களை ஊக்குவித்தலினூடாக அரிசிப்பாவனையை குறைக்க வழிசெய்யமுடியும். அரிசிக்கு மாற்றாக சிறுதானியங்கள் மரவள்ளிக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்களை ஊக்குவிப்பது சிற்நத வழியாகும். பருவநிலையை எதிர்கொள்வதற்கான விவசாய முறைகளில் தீவிரகவனம் செலுத்த வேண்டும். வறட்சிக்கும் வெள்ளத்திற்கும் நிலைத்து விளைச்சல் தரக்கூடிய நெல்வகைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும்.  நீர் மேலாண்மை திட்டங்கள் போன்றவை வருங்கால உணவுப் பாதுகாப்புக்கு அவசியம.; 

வரலாற்றில் அரிசி பற்றாக்குறை சமூக கலவரங்களுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்துள்ளது. இலங்கையின் தற்போதைய அரிசி நெருக்கடி பல காரணங்களால் ஏற்பட்டுள்ளது. இது உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துதல், தொழில்நுட்ப நவீனமாக்கல், நிலையான கொள்கைகள், மாற்று உணவுகள், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் போன்ற பன்முக முகாமைத்துவத்தினூடாகவே எதிர்கொள்ள முடியும்.


No comments:

Post a Comment