யுத்த நினைவுகளின் சினிமா
Dr.தேவநாயகம் தேவானந்த்
சினிமா
என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது
ஒரு மொழி. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை இனங்களுக்கு, தமது வரலாறு, நினைவுகள்
மற்றும் அரசியல் அனுபவங்களை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த காட்சிமொழியாக அது செயல்படுகிறது.
ஈழத் தமிழர்களின் யுத்த அனுபவங்களும் அதனுடன் தொடர்புடைய மனநிலைகளும் சினிமா வழியாகவும் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம்
உள்ளது. அந்த வகையில், நீளிரா திரைப்படம் ஒரு கலைப்படைப்பாக மட்டுமல்லாது, ஒரு
இனத்தின் நினைவுகளையும் குரலையும் வெளிப்படுத்தும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படக்
கூடியது.
ஈழத்
தமிழ் சினிமாவை யுத்தத்திற்கு முன், யுத்தகாலம் மற்றும் யுத்தத்தின் பின் என்று பிரித்து
பார்க்க வேண்டியுள்ளது. எமக்கான சினிமா, எமக்கான வானொலி, எமக்கான தொலைக்காட்சி தேவை
என்பதை நீண்ட நாட்களாகவே ஈழத் தமிழர்கள் உணர்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக, ஈழ விடுதலைப்
போராட்ட காலத்தில் இத்துறைகளுக்கான கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
யுத்தம்
நிறைவடைந்த பின்னர், இந்த எண்ணம் ஓரளவு தளர்ந்த நிலையில், எண்பது ஆண்டுகள் பழமையான
இந்தியத் தமிழ்சினிமாவின் பாணியை பிரதிபலிக்கும் குறும்படங்களையும் முழுநீளப் படங்களையும்
உருவாக்கி சினிமா துறையை முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனலாம்.
இருப்பினும்,
கடந்த இருபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் சினிமா ஒரு உறுதியான சினிமாப் பண்பாட்டை உருவாக்க
முடியாமல் இருந்துள்ளது என்பதை இனங்காணலாம்.
இங்கு
ஒரு விநோதமான நிலை காணப்படுகிறது. அதாவது, ஈழத் தமிழர்களின் பணத்தில் தென்னிந்திய சினிமா
வளர்ச்சியடைந்து கொண்டிருக்கையிலேயே, ஈழச் சினிமா தன்னால் எழுந்து நிற்க முடியாத நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கிறது.
ஒரு
சுதந்திரத்திற்காகப் போராடிய இனம், சுயநிர்ணய உரிமைக்காக உயிர்தியாகங்களைச் செய்த தேசம்,
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமக்கான சினிமாவை உருவாக்கத் தவறியுள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
ஆகவே, “யுத்தத்திற்குப் பிந்தைய சினிமா” என்பது என்ன? அதன் பண்புகள் என்ன? என்பதைக்
புரிந்துகொள்ள, இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஐரோப்பிய சினிமாவைப் நோக்குவது அவசியமாகிறது.
இரண்டாம்
உலகப்போரின் போது சுமார் 70 முதல் 85 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்; இதனால் பல ஐரோப்பிய
நாடுகள் கடுமையான பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு அழிவைச் சந்தித்தன. போருக்குப் பிறகு,
அமெரிக்கா Marshall Plan மூலம் ஐரோப்பாவின் மறுசீரமைப்பில் முக்கிய பங்கு வகித்தது.
இதன் மூலம் பொருளாதார உதவியுடன் சேர்ந்து, அமெரிக்காவின் கலாச்சார மற்றும் திரைப்படத்
தாக்கமும் அதிகரித்தது.
ஆனால்,
இந்தச் சூழலில் ஐரோப்பிய திரைப்பட இயக்குநர்கள் ஹாலிவுட் வளங்களின் மீது சார்ந்திருக்காமல்,
குறைந்த செலவில் திரைப்படங்களை உருவாக்கும்
புதிய முறைகளை உருவாக்கினர். இந்த நிலைமையே புதிய சினிமா பாணிகளுக்குத் துவக்கமாக அமைந்தது.
குறிப்பாக, இத்தாலிய “Neorealism” இயக்கம் உண்மை வாழ்க்கையை நெருக்கமாக பிரதிபலிக்கும்
விதத்தில் இயற்கை இடங்களில் படப்பிடிப்பு, தொழில்முறை அல்லாத நடிகர்களின் பயன்பாடு
மற்றும் எளிய தயாரிப்பு முறைகள் போன்ற அம்சங்களால் தனித்துவம் பெற்றது.
குறிப்பாக,
பெரிய நட்சத்திர நடிகர்கள் இல்லாமல், சாதாரண மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைகள்
உருவாக்கப்பட்டன. தொழில்முறை அல்லாத நடிகர்கள் நடித்தனர்; இயல்பான வாழ்விடங்கள் காட்சிகளாக
பயன்படுத்தப்பட்டன. யுத்தத்தின் பின்னணிக் கதைகளும் அதன் தாக்கங்களும் திரையில் வெளிப்பட்டன.
இவை அனைத்தும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டன. இத்தகைய படைப்புகள் இன்றளவும் சிறந்த
சினிமாக்களாகப் போற்றப்படுகின்றன. உதாரணமாக, Bicycle Thieves போன்ற படங்களைச்
சுட்டிக்காட்டலாம்.
ஆனால்,
ஈழச் சினிமாவில் இத்தகைய அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டியிருந்த போதிலும், அது நடைமுறைக்கு
வரவில்லை. மாறாக, தென்னிந்திய வர்த்தக சினிமாவைப் போன்ற கதைகளே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இது
ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாக அமையவில்லை எனலாம்.
இன்றைய நிலையில், தென்னிந்திய சினிமா உலகளாவிய வருமானத்தைப் பெரிதும் ஈட்டுவதற்கு
‘ஈழத் தமிழர் சந்தை’ முக்கிய பங்காற்றுகிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இதன்
விளைவாக, ஈழத் தமிழ் சந்தையில் தமது படைப்புகளை விற்பனை செய்வதற்காக, அதன்மூலம் கிடைக்கும்
இலாபத்தை நோக்கி, ஈழத் தமிழர் கதைகளின் சில கூறுகள், பேச்சுமொழி மற்றும் கலாசார அம்சங்களைத்
தொடும் வகையில் சந்தை நோக்கமுடைய தென்னிந்திய வணிகச் சினிமாவும் உருவாகியுள்ளது.
ஆக,
ஈழத் தமிழ் சினிமா இன்னும் ஆரம்பநிலையிலேயே தொடர்கிறது என்பதை உணர முடிகிறது.
இந்தச்
சூழலில் நீளிரா திரைப்படம்
சினிமா மொழியைக் கற்றறிந்து அதில் பட்டறிவைப் பெற்ற ஒருவரின் நேர்த்தியான படைப்பாகும்.
இதன் இயக்குநர் சோமிதரன், தொன்னூறுகளின் இறுதிப்
பகுதியில் கல்விக்காக தென்னிந்தியாவிற்கு சென்றவர். பின்னர் சினிமா துறையில் தீவிரமாக
ஈடுபட்டு, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக திரைப்படக் கலைஞராகத் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
பாலுமகேந்திரா போன்ற முக்கிய சினிமா ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் அவருக்குண்டு.
இந்த
அடிப்படையில், தென்னிந்திய வணிகச் சினிமா சூழலில் தன்னை நிலைநிறுத்திய முழுநேர சினிமா
கலைஞராக அவரைப் பார்க்கலாம். அவரது எழுத்தும் இயக்கமும் இணைந்த படைப்பாக நீளிரா
திரைப்படம் வெளிவந்துள்ளது. இது ஒரு ஈழச் சினிமா என்ற அடையாளத்தை மட்டும் தாங்குவது
அல்ல; மாறாக, தென்னிந்திய வணிகச் சினிமா சூழலில் ஒரு ஈழக் கதையைச் சொல்லும் முயற்சியாகவும்
பார்க்கலாம்.
இது
சினிமா மொழியைக் கற்றறிந்து அதில் பட்டறிவைப் பெற்ற ஒருவரின் நேர்த்தியான படைப்பாகும்.
அவரது முதல் படைப்பே சிறப்பாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, அவரில் நம்பிக்கை
வைத்து தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் முதலீடு செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஈழத் தமிழர்கள் பலர் தென்னிந்திய சினிமாவில் முதலீடு செய்யும் நிலையில், தென்னிந்திய
தயாரிப்பாளர் ஒருவர் ஈழக் கதைக்கு முதலீடு செய்திருப்பது ஒரு முக்கியமான மாற்றமாகக்
கருதப்படலாம்.
இந்தப்
படம் 1988 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, இலங்கையில் செயல்பட்ட இந்திய அமைதிப்படையை
மையமாகக் கொண்டு, ஒரு இரவு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு நகர்கிறது. ஆனால் அந்த “ஒரு
இரவு” என்பது தனித்த நிகழ்வாக இல்லாமல், அதற்கு முந்திய பல அனுபவங்களின் தொடர்ச்சியாகவும்,
எதிர்காலத்தின் நீட்சியாகவும் அமைந்துள்ளது என்பதை படம் உணர்த்துகிறது.
இலங்கையில்
நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் தமிழர் பகுதிகளில் பல படுகொலைகள், மற்றும் பொருட்சேதங்களை
ஏற்படுத்தியது என்பது வரலாற்று உண்மை. இந்தப் பின்னணியில், ஈழத் தமிழர்களின் மனஅனுபவங்களையும்
நினைவுகளையும் நீளிரா திரைப்படம் ஆழமாகத் தொடுகிறது. ( தொடரும்)

No comments:
Post a Comment