“‘கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கவனத்திற்காக..!’: கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர்களின் கவனயீர்ப்புக் கட்டுரைக்கான விமர்சனப் பார்வை”
---------------------------------------------------------------------------------------------
இந்த விமர்சனத்தில் முன்வைக்கப்படும் சில கவலைகள் ஏற்புடையவையே. இவ்வாறான திறந்த உரையாடல்கள் மூலம் அவை எதிர்காலத்தில் சீர்செய்யப்பட வேண்டும். அந்த உரையாடல் வெளியைத் திறந்ததற்காக கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர்களுக்கு நன்றி. குறிப்பாக ஆய்வரங்குகளின் தரம், தேர்வு செய்யப்பட்ட தலைப்புகள் மற்றும் பங்கேற்பாளர்களின் பொருத்தம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானவை.
ஆனால், இந்த விமர்சனம் சுயபரிசோதனைக்கும் சுயவிமர்சனத்திற்கும் உரியதாகவும் அமைகிறது. இங்கு விமர்சனத்தை முன்வைப்பவர்கள் தம்மைத்தாமே ஒரு முக்கியமான முரண்பாட்டில் நிறுத்துகின்றனர். ஏனெனில் இங்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் நாடக மற்றும் அரங்கியல் துறைகளுக்குள் சாதாரணமாக நிலவி வருகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை.
குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் நாடகத் துறைகளை எடுத்துக்கொண்டால், அங்கு அறிவார்ந்த திறந்த உரையாடல் (intellectual space) வளர்க்கப்படுவதற்குப் பதிலாக, ஒரே குழுவினரின் சிந்தனைகள் சுற்றிச் சுழல்கின்ற ஒரு குழுவாத கலாச்சாரம் (groupism) நீண்டகாலமாகக் காணப்படுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரே மாதிரியான உரையாடல்களே பல்கலைக்கழக வெளியில் நடைபெற்று வருகின்றன; புதிய சிந்தனைகளுக்கான இடங்கள் குறைவாக உள்ளன. பல ஆய்வுகள் மற்றும் நாடகப் பயிற்சிகள் ஒரே வட்டாரத்திற்குள் சுழன்று சுருங்கி, புதிய குரல்கள் அல்லது மாற்றுக் கோட்பாடுகள் நுழைய இடமளிக்கப்படாத சூழல்கள் உருவாகியுள்ளன. இதனால் “ஆய்வு” என்ற பெயரில் நடைபெறும் செயல்பாடுகள் பல சமயங்களில் உண்மையான அறிவியல் ஆராய்ச்சிகளாக அல்லாமல், ஏற்கனவே நிலைபெற்ற கருத்துக்களின் மறுபதிப்பாகவே இருந்து வருகின்றன.
மேலும், பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்படும் முறைகள் பற்றியும் தெளிவான அளவுகோல்கள் காணப்படுவதில்லை. இங்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல. பல்கலைக்கழகங்களுக்குள் கூட குறிப்பிட்ட நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஆதரவுப்போக்கு (favoritism), ஒரே குழுவைச் சேர்ந்தவர்களுக்குள் வாய்ப்புகள் பகிர்ந்துகொள்ளப்படும் நிலை, மற்றும் வெளிப்புற செயற்பாட்டாளர்களுக்கு இடமளிக்காத மனப்பான்மை போன்றவை காணப்படுகின்றன. ஆகவே, பொதுத்தளத்தில் மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைப்பாட்டில் இருப்பவர்களே தம்மை சுயவிமர்சனத்திற்குள் உட்படுத்தாமல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வுகளை விமர்சிப்பது ஒரு விதமான இரட்டை நிலைப்பாட்டைக் (double standard) காட்டுகிறது.
அதேபோல், ஆய்வு செயற்பாடுகள் குறைவாக உள்ளன என்ற குற்றச்சாட்டும் கவனிக்கப்பட வேண்டியது தான். ஆனால் பொதுநிதியில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்குள்ளேயே தொடர்ந்து ஆழமான மற்றும் தரமான ஆய்வுகள் எவ்வளவு அளவில் நடைபெறுகின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நடிப்பு மற்றும் அரங்கியல் துறைகளில் உண்மையான முன்னேற்றம் நிகழ்வதற்கு திறந்த பரிமாற்றமும் பல்வேறு அணுகுமுறைகளுக்கான இடமும் அவசியம். ஆனால் அது கல்வி அமைப்புகளுக்குள் பல சமயங்களில் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்து வருகிறது.
இதன் ஒப்பீட்டில், கொழும்புத் தமிழ்ச் சங்கம் போன்ற ஒரு பொது அமைப்பு, அரசு சாரா அமைப்பாக இருந்து பல்வேறு அணுகுமுறைகளை ஒரே மேடையில் கொண்டு வந்து ஒரு உரையாடல் தளத்தை உருவாக்க முயற்சிப்பது ஒரு முக்கியமான செயற்பாடாகும். அது முற்றிலும் பூரணமானதாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் திறந்த பரிமாற்றத்திற்கு வாய்ப்பளிக்கிறது. பல்கலைக்கழகங்களுக்குள் காணப்படும் மூடப்பட்ட நிலைமைகளை விட, இத்தகைய மேடைகள் பல்வேறு குரல்களுக்கு இடமளிக்கும் சாத்தியத்தை உருவாக்குகின்றன.
எனவே, விமர்சனம் முன்வைப்பது அவசியமானது. ஆனால் அது ஒருதலைப்பட்சமாக ஒரு அமைப்பை மட்டும் குறிவைத்து நிற்காமல், அதே குறைகள் எங்கு எங்கு உள்ளன என்பதையும் நேர்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட விருப்பங்கள், குழு ஆதிக்கம் மற்றும் அறிவார்ந்த செயற்பாட்டிற்கு இடமின்மை போன்றவை கல்வி அமைப்புகளுக்குள்ளேயே நிலவி வரும் போது, அவற்றை மறைத்து வைத்து ஒரு பொது அமைப்பை மட்டும் விமர்சிப்பது முழுமையான கல்விசார் அணுகுமுறையாகத் தோன்றவில்லை.
இன்னும் முக்கியமாக, எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தனிப்பட்ட நோக்கங்களிலிருந்து விலகி, உண்மையான அறிவுப் பரிமாற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை முழுமையாக நிராகரிக்காமல், அவற்றை மேம்படுத்தும் நோக்கில் அணுகுவது தான் துறையின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். செயல் திறன் அரங்க இயக்கம் Active Theatre Movement 17 ஏப்ரல் 2026

No comments:
Post a Comment