நீளிரா: சினிமா விமர்சனம்
Dr தேவநாயகம் தேவானந்த்
நீளிரா திரைப்படத்தின் முக்கியமான
பகுதி, இந்திய அமைதிப்படையினர் விடுதலைப்புலிகளைத் தாக்கும் நோக்கில் திருமண வீட்டிற்கு
அருகில் முகாமிடும் காட்சியிலிருந்து தொடங்குகிறது. யுத்த யதார்த்தத்தில், பதுங்கித்
தாக்குதல் (ambush) என்பது மறைவு, இரகசியம் மற்றும் திடீர் தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டதாகும். ஆனால் இத்திரைப்படத்தில், மக்கள் கூடியிருக்கும் வெளிச்சமான இடத்தில்
படையினர் பதுங்கியிருப்பது, யதார்த்தத்தை மீறும் காட்சியமைப்பாகத் தோன்றுகிறது.
இந்த
இடத்தில் திரைப்படம் யதார்த்தப் பாணியை மீறி சினிமா மாயைக்குள் நுழைகிறது. இங்கு இராணுவத்தினர்
ஊரார்வீட்டுக் கோழியை உரிமையாகப் பிடித்து வாட்டி, சப்பாத்தி செய்து ஆறுதலாக உண்பது
போன்ற காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இதனை மேல்மாடியில் இருந்து தொலைநோக்கி மூலம்
சிறுவர்கள் பார்ப்பதும், “சப்பாத்தி” என்ற உணவு அவர்களுக்கு புதிதாக இருப்பதும், யதார்த்தத்தை
மீறும் சினிமா மாயைக் காட்சிகளாக அமைகின்றன.
அதேவேளை,
அந்த இராணுவக் குழு வழிதவறி வீட்டிற்குள் நுழைகிறது என்ற காட்சியமைப்பு யதார்த்த ரீதியாக
பலவீனமாகத் தோன்றுகிறது. காட்டுப் பகுதிகளில் வழிதவறுவது சாத்தியமானதாயினும், குடியிருப்புப்
பகுதிகளில் அவ்வாறு வழிதவறுவது நம்பத்தகுந்ததாகத் தோன்றுவதில்லை. எனினும், திட்டமிட்டே
“வழிதவறல்” என்ற நாடகத்தைக் கையாள்ந்து பொதுமக்களைத் துன்புறுத்தும் இராணுவ மனப்பாங்கை
வெளிப்படுத்தும் முயற்சியாக இதை அணுகலாம். கலைப்படைப்பில் அனைத்தும் காரண-காரியத் தொடர்போடு
அமைய வேண்டிய அவசியமில்லை; கலைச் சுதந்திரம் பல்வேறு வெளிப்பாட்டு வழிகளை உருவாக்குகிறது.
இத்திரைப்படத்தின்
மையக் குடும்பம் பெண்தலைமை தாங்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தக் குடும்பத்தின் தலைவி,
“எனது அனுமதி இன்றி நீங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடாது” என்று இராணுவத்தினரிடம் கூறும்
காட்சி முக்கியமான அரசியல் அடையாளமாகும். ‘இந்த
வீட்டிலயாவது சமாதானத்தை நிலைநாட்டுங்கோ’ என்று கெஞ்சுவது இது, இந்திய அரசு ஈழத் தமிழர்களின்
வாழ்க்கையில் அனுமதியின்றி தலையீடு செய்ததற்கான விமர்சனமாகப் படைக்கப்பட்டுள்ளது எனக்
கருதலாம்.
இங்கு,
பதுங்கித் தாக்குதல் நோக்கத்துடன் வந்த இராணுவம் ஏன் பொதுமக்களின் வீட்டிற்குள் நுழைகிறது
என்பதற்கான தர்க்க ரீதியான விளக்கம் தெளிவாக இல்லை.
கர்ப்பிணிப்
பெண்ணைச் சோதனை செய்ய முனையும் இராணுவ வீரனின் நடத்தை, யுத்தகால வன்முறைகளின் பிரதிபலிப்பாக
அமைகிறது. ஆனால் பின்னர் அந்த வீரன் தடுக்கப்பட்டு, இராணுவம் ஒரு “ஒழுக்கக்கட்டுப்பாட்டுடன்
கூடிய நியாயாதிக்க” போலக் காட்டப்படுவது, வன்முறையின் தீவிரத்தை மென்மைப்படுத்தும்
முயற்சியாகத் தோன்றுகிறது. இத்தகைய முரண்பாடுகள் திரைப்படத்தின் அரசியல் தாக்கத்தை
சில இடங்களில் தளர்த்துகின்றன.
தாய்
கதாபாத்திரம் கற்பனையுடனும் கடுமையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் சேலையுடன்
காணப்படும் அவரது தோற்றம், தென்னிந்திய சினிமாவில் காணப்படும் யதார்த்தமற்ற “அம்மா”
உருவத்தை நினைவூட்டுகிறது. இராணுவம் வீட்டிற்குள் நுழைந்தபோது, பெண்கள் தமது வீட்டு
உடையின்மேல் ஆண்களின் சட்டையை அணிவது ஒரு குறியீட்டு அர்த்தத்தை வழங்குகிறது. அது பெண்புலிகள்
அணியும் மேலாடையை நினைவூட்டுவதால், அமைதிப்படையின் இராணுவ நடவடிக்கைகள் பெண்களை ஆயுதப்
போராட்டத்திற்குள் தள்ளுகின்றன என்ற மறைபொருளை வெளிப்படுத்துகிறது.
திரைப்படத்தின்
காட்சிப் பிம்பங்களில் நாய்கள் குரைக்கும் காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. இருண்ட சூழலில்
அந்நியர்களை உடனே உணரும் நாய்களின் குரல், வரவிருக்கும் அபாயத்தை முன்னறிவிக்கும் ஒரு
ஒலிக் குறியீடாகச் செயல்படுகிறது. மனிதர்களுக்கு முன்பாகவே ஆபத்தை உணரும் உயிரினப்
பதிலாக, இந்தக் குரல்கள் ஆதிக்க ஆட்சிக்கெதிரான முதல் இயற்கை எதிர்ப்பாகவும் வாசிக்கப்படலாம்..
இத்திரைப்படத்தின்
மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாக சித்தசுவாதீனமற்ற நிலை கொண்ட மகள் விளங்குகிறார்.
அவரது வாழ்க்கை முறிந்துபோனதன் விளைவாக, அவர் கடந்த கால நினைவுகளில் மூழ்கி வாழ்கிறார்.
தனது வைத்தியரான காதலனை நினைத்து வாழும் அவர், இந்திய அமைதிப்படையினர் வைத்தியசாலையில்
நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களும் வைத்தியர்களும் உயிரிழந்த சம்பவத்திற்குப்
பின்னர், தனது காதலன் விடுதலைப்புலிகளுடன் இணைந்ததன் காரணமாக அவருடனான தொடர்பை இழக்கிறார்.
இதன் விளைவாக, அவரது வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் சுருங்குகிறது.
இந்த
மனநிலையின் உடைப்பு, இராணுவத்தினர் தாயைச் சுடும் காட்சிக்குப் பின்னர், அவர் துப்பாக்கியைப்
பறித்து எதிர்த்து நிற்கும் தருணத்தில் வெளிப்படுகிறது. அடக்கப்பட்ட உணர்வுகள் போராட்டமாக
வெளிப்படும் போது, அவர் ஒரு வகையான தெளிவை அடைகிறார். வாக்கி-டாக்கி மூலம் தனது காதலனின்
இருப்பை உணர்ந்து, “இன்னும் துப்பாக்கிச்சத்தம் ஓயவில்லை; போங்கள்” என்று கூறும் அவரது
உரை, போராட்டத்தின் அவசியத்தையும் அதன் உளவியல் பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது.
போராளிகளுக்கும்
பொதுமக்களுக்கும் இடையிலான உணர்ச்சி பிணைப்பும் இத்திரைப்படத்தின் முக்கிய அம்சமாகும்.
“எங்களுக்கு சாப்பாடு போட்ட அம்மாவை மீட்க வேண்டும்” என்று போராளிகள் கூறுவதும், “நான்
பேசினால் அவர்கள் கேட்பார்கள்” என்று தாய் நம்பிக்கை கொள்வதும், அந்த உறவை வலியுறுத்துகின்றன.
மொத்தத்தில்,
நீளிரா திரைப்படம் பலவீனமான கதைக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், அதைச் சிறப்பான
சினிமா மொழியின் மூலம் தாக்கமிக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளது. காட்சிநேர அமைப்பும்
தொகுப்பும் சலிப்பின்றி பார்வையாளரை ஈர்க்கின்றன. தொழில்முறை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ள
இந்தப் படைப்பில், சோமிதரன் ஒரு படைப்பாளராகக் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
ஆனால்,
ஈழத்தின் மிகக் கடுமையான யுத்தகால அனுபவங்களையும், குறிப்பாக இராணுவ நடவடிக்கைகளால்
ஏற்பட்ட இரத்தக்கறைகளையும் மென்மைப்படுத்தி அல்லது “வெள்ளையடித்து” காட்டும் முயற்சி,
ஈழ விடுதலைப் போராட்டத்தின் வேதனையை அரசியல் ரீதியாகத் தளர்த்தும் முயற்சியாகத் தோன்றுகிறது.
வரலாற்று
ரீதியாகப் பார்க்கும்போது, பல நாடுகள் யுத்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும்
மனித உரிமை மீறல்களுக்கு பின்னாளில் மன்னிப்பு கோரியுள்ளன. ஆனால் இலங்கையில் இந்திய
அமைதிப்படையின் செயல்பாடுகளின் போது நிகழ்ந்த படுகொலைகள், கைது நடவடிக்கைகள் மற்றும்
பொருட்சேதங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான மன்னிப்பு கோரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச்
சூழலில், திரைப்படத்தின் இறுதியில் இராணுவத்தினர் “உங்கள் குடும்பத்தைக் குழப்பியதற்கு
மன்னிக்கவும்” என்று கூறும் காட்சியும், அதற்கு பதிலாக “இப்படி எத்தனை பேரிடம் மன்னிப்பு
கேட்பீர்கள்?” என்று பெரியவர் கேட்பதும் ஆழமான அரசியல் எதிரொலியை ஏற்படுத்துகின்றன.
இருந்தாலும், இந்த மன்னிப்பு காட்சி மொத்த இராணுவ வன்முறையின் தீவிரத்தைக் குறைத்து
காட்டும் ஒரு குறியீடாகவும், இரத்தக்கறைகளின் மீது பூசப்படும் வெள்ளையடிப்பாகவும் தோன்றுகிறது.
மேலும்,
ஒரு இராணுவ நடவடிக்கை உயிரிழப்புகளின்றி முடிவடைந்ததைப் பெருமையாகக் காட்டும் காட்சியமைப்பும்,
இராணுவத்தின் வன்முறைச் செயல்பாடுகளை மென்மைப்படுத்தும் முயற்சியாகவே விரிகிறது. இத்தகைய
அணுகுமுறைகள் வரலாற்று உண்மைகளின் தீவிரத்தைக் குறைத்து காண்பிக்கும் அபாயத்தை உள்ளடக்கியவை.
யதார்த்தத்தை
பதிவு செய்யும் முயற்சியுடன் தொடங்கும் இந்த திரைப்படம், பிரதானமாக
சினிமா மாயையின் வழியாக மாற்று அர்த்தங்களையும் நிஜமற்ற பிம்பங்களையும் உருவாக்குகிறது. நீளிரா திரைப்படம் காட்சிப்படைப்பாக வெற்றி
பெற்றிருந்தாலும், ஈழத்தமிழர் அரசியல் நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது.

No comments:
Post a Comment