‘போர் விளையாட்டுகளை’ வெளிப்படுத்தும் சினிமா
Dr
தேவநாயகம் தேவானந்த்
அரசியல் அதிகாரம்
என்பது வெறும் இராணுவ வலிமையாலோ அல்லது நேரடி கட்டுப்பாட்டாலோ மட்டுமே நிலைநிறுத்தப்படுவது
அல்ல. அது சமூகத்தின் சிந்தனை, கலாசாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளின் வழியாக
இயல்பான ஒன்றாக உருவாக்கப்படுகிறது. இந்தக் கருத்தை தெளிவாக முன்வைத்தவர் இத்தாலிய
மார்க்சிய சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்ஸ்சி (Antonio Gramsci) ஆவார். அவரது hegemony
(ஆட்சி ஆதிக்கம்) என்ற கோட்பாடு, அரசியல் ஆட்சி எவ்வாறு மக்களின் சம்மதத்தை உருவாக்கி,
அதே நேரத்தில் மறைமுகமான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது என்பதை விளக்குகிறது.
இலங்கை உள்நாட்டு
யுத்த அனுபவங்களிலும் இதே நிலையை காணலாம். சிறுவர்களின் விளையாட்டுகள் கூட “போர் விளையாட்டுகள்”
ஆக மாறியிருப்பது, சமூகத்தில் இராணுவமயமான சிந்தனை எவ்வாறு இயல்பாக்கப்படுகிறது என்பதை
காட்டுகிறது. “துப்பாக்கி இல்லாமல் என்ன விளையாட்டு?” என்ற ஒரு குழந்தையின் பதில்,
கிராம்ஸ்சியின் ஆட்சி ஆதிக்கம் கோட்பாட்டின் ஆழமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.
அதாவது, வன்முறையும் ஆயுதங்களும் வாழ்க்கையின் சாதாரண கூறுகளாகவே ஏற்றுக்கொள்ளப்படும்
நிலை உருவாகிறது.
மேலும், இந்திய
அமைதிப்படை சம்பந்தமான செயல்பாடுகள், இலங்கை மோதல்களை மேலும் தீவிரப்படுத்தின. இத்தகைய
தலையீடுகள் இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, கலாசார மற்றும் மத அடையாளங்களையும்
பாதித்தன. இந்தச் செயல்முறைகள் சமூக ஒப்புதலின் மூலம் செயல்படும் “ஆதிக்க அமைப்பு”
(consensual domination) எனப் புரிந்துகொள்ளப்படலாம். கிராம்ஸ்சியின் பார்வையில், மக்கள்
தாங்களே அறியாமலேயே அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அதைத் தங்களது அன்றாட வாழ்க்கையில்
மீண்டும் உருவாக்குகிறார்கள் என்பது முக்கியமான அம்சமாகும்.
இந்த அடிப்படையில்,
யுத்தம், இராணுவம் மற்றும் புவியியல் அரசியல் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து, ஒரு சமூகத்தின்
நினைவுகள், அடையாளம் மற்றும் கலாசார வெளிப்பாடுகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்களை கலை,
குறிப்பாக சினிமா மிக ஆழமாகப் பதிவு செய்கிறது.
இலங்கை இராணுவத்திற்கும்
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சிறுவர்களின்
விளையாட்டுகளிலும் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன் இருந்த “கள்ளன்–பொலிஸ்” போன்ற விளையாட்டுகள்,
பின்னர் “புலி–ஆமி” விளையாட்டாக மாறின. இந்த மாற்றமே திரைப்படத்தின் தொடக்கக் காட்சியாக
அமைகிறது.
சிறுவர்கள் விளையாடும் இந்த “போர் விளையாட்டு”, இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களின் ஒரு மீள்நிகழ்வாகக் காணப்படுகிறது. இது, சிறுவர்கள் தாமே அந்தச் சூழலின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி, அறியாமலேயே ஆயுதமயமான மனநிலைக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஒரு உண்மையான
கலைப்படைப்பு பார்வையாளர்களின் அனுபவப் பரப்பைத் திறந்து விடும் சக்தி கொண்டது. அந்த
வகையில், நீளிரா திரைப்படம் ஈழப் பார்வையாளர்களின் ஆழமான அனுபவங்களையும் நினைவுகளையும்
கிளறி எழுப்பும் திறன் கொண்ட ஒரு முக்கியமான படைப்பாகக் கருதப்படலாம்.
இத்திரைப்படம்
யதார்த்தப்பாணி சினிமாவாக அமைந்திருந்தாலும், சுயரியலிச (Surrealism) பண்புகளையும் தாங்கியதாகவும்
தோன்றுகிறது. சுயரியலிசம் என்பது யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிப்பதல்ல; மாறாக,
மனிதனின் கனவுகள், உளவியல் நினைவுகள் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை காட்சியாக
வெளிப்படுத்தும் கலைநோக்கு ஆகும். இதில், தர்க்கம் மற்றும் வழக்கமான யதார்த்தக் கட்டுப்பாடுகளை
உடைத்து, மறைந்துள்ள மனஅழுத்தங்கள், ஆசைகள் மற்றும் உணர்வுகளை வெளிக்கொணர முயற்சிக்கப்படுகிறது.
பிள்ளையார்
ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை நிறுத்தி, பிள்ளையாரை தரையில் வைக்கச் செய்து, பின்னர்
அவர்களை தலையாட்டி முன் நிறுத்தும் காட்சி, மதமும் அதனைப் பின்பற்றுபவர்களும் துன்புறுத்தப்பட்ட
சூழலை வெளிப்படுத்துகிறது.
இலங்கை யுத்த
வரலாற்றில் கோவில்கள் எரிக்கப்பட்டதும், தேர்கள் அழிக்கப்பட்டதும் போன்ற சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன. அவ்வகை நினைவுப் பிம்பங்களை இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகளுடன்
இணைத்து காட்டும் முயற்சி சுயரியலிசப் பாணியைச் சார்ந்ததாகப் படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தலையாட்டி
காட்டிக்கொடுத்தவர்கள் அனைவரும் உண்மையான எல்.டி.டி.இ. உறுப்பினர்களாகவே இருப்பார்கள்
என்ற Iak; சில நேரங்களில் நிஜத்தை மீறும் அழுத்தமாகத்
தோன்றுகிறது. எனினும், “கடவுளரே தம்மைக் காப்பாற்ற முடியாத நிலைமையில் மனிதர்கள் எவ்வாறு
தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள்?” என்ற இயலாமை உணர்வை இந்தக் காட்சி ஆழமான குறியீடாக
வெளிப்படுத்துகிறது.
இத்திரைப்படத்தில்
இலங்கை மற்றும் இந்திய இராணுவ மனப்பாங்குகள் ஒரே தளத்தில் பிரதிபலிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு காட்சியும் மனத்திரையில் நீளவிரியும் அனுபவங்களாகத் தோன்றுகின்றன. திடீர் சுற்றிவளைப்புகள்,
விடியற்கால சோதனைகள் போன்றவை யுத்த யதார்த்தத்தின் பகுதிகளாகவே அமைந்துள்ளன. அதேவேளை,
வீடுகள் எப்போதும் திறந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை விதித்த இராணுவ மனப்பாங்கும்
மக்களின் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகிறது. இந்தக் கையறு நிலையை, கடவுளும் கைவிடப்பட்ட
நிலையில் காட்டும் காட்சிகள் நினைவுக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சமூகத்தின்
ஒரு குறுக்கு வெட்டாக ஒரு நீட்சியான குடும்பத்தைத் தேர்வு செய்து, அதன் வழியாக நீண்டகால
யுத்த அனுபவத்தைச் சொல்லுவது மிகவும் சிக்கலான செயல். அதை நீளிரா திரைப்படம் கலை அனுபவமாகக்
கச்சிதமாக வெளிப்படுத்துகிறது. இருப்பினும், சில காட்சிகளின் பின்னணியில் உள்ள பெரும்
வரலாற்றுப் பிம்பங்கள் மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதால், பார்வையாளர்களின்
அனுபவ ஓட்டத்தில் சில இடங்களில் தடைகள் ஏற்படுகின்றன. மேலும், சில சம்பவங்களின் இணைப்புகள்
தர்க்க ரீதியான தொடர்ச்சியை இழக்கும் தன்மையும் காணப்படுகிறது.
திரைப்படத்தில்
முக்கியமான சமூக-பண்பாட்டு அம்சமாக, மாப்பிள்ளை இல்லாத திருமண நிகழ்வு காட்டப்படுகிறது.
இங்கு யுத்தகாலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்ற
ஆண்களுக்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து பெண்களைத் திருமணம் செய்து அனுப்பும் நடைமுறை
இருந்தது. மாப்பிள்ளை இல்லாமல் திருமண நிகழ்வு நடைபெற்றது; பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளையின்
தாயாரால் தாலி கட்டப்பட்டு, பின்னர் வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு
சென்றடைந்த பின்னர், மீண்டும் திருமணம் நடத்தப்படும் சூழலும் காணப்பட்டது.
இதனுடன் தொடர்புடைய
பல அபாயங்களும் இருந்தன பெண் சென்றடையாமல் போகலாம்; உயிரிழப்பு, துஷ்பிரயோகம் போன்ற
தீவிர விளைவுகளும் ஏற்படக்கூடும்.
இத்திரைப்படத்தில்,
மாப்பிள்ளை இல்லாத திருமணக் கொண்டாட்டமும், இறுதியில் எடுக்கப்படும் குடும்பப் புகைப்படத்தில்
மாப்பிள்ளைக்கான இடம் வெறுமையாக விடப்படுவதும் ஆழமான குறியீடுகளை வெளிப்படுத்துகின்றன.
மேலும், வெள்ளைக் கொடியுடன் திருமண வீட்டிற்குள் வருவது போன்ற காட்சிகள், யுத்தகால
திருமணங்களே மரணச் சூழல்களுடன் இணைந்திருந்தன என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ் பண்பாட்டில்
மங்கள நிகழ்வுகளுக்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன; ஆனால்
இங்கு வெள்ளை (அமங்கலத்தின் குறியீடு) பயன்படுத்தப்படுவது முரண்பட்ட அர்த்தங்களை உருவாக்குகிறது.
மேலும், இராணுவத்தினரால் “சிவிலியன்” என்பதை அடையாளப்படுத்த வெள்ளைத் கொடி கட்டுமாறு
கூறப்பட்ட நடைமுறையும் இந்தக் காட்சிகளுடன் இணைக்கப்படுகிறது.
கலைப்படைப்புகள்
வெறும் காட்சிகள் அல்ல; அவை அதிகார கட்டமைப்புகளை வெளிப்படுத்தும் அரசியல் உரைகளாக
மாறுகின்றன. இந்த அடிப்படையில், நீளிரா திரைப்படம் முரண்பட்ட அதிகாரங்களை வெளிப்படுத்தும்
முக்கியமான படைப்பாகும்.


No comments:
Post a Comment