Showing posts with label Indo - Sri Lanka. Show all posts
Showing posts with label Indo - Sri Lanka. Show all posts

Sunday, 19 April 2026

நீளிரா: ஈழத்தமிழர் அரசியல் நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது.

 நீளிரா: சினிமா விமர்சனம்

Dr தேவநாயகம் தேவானந்த்


 

நீளிரா திரைப்படத்தின் முக்கியமான பகுதி, இந்திய அமைதிப்படையினர் விடுதலைப்புலிகளைத் தாக்கும் நோக்கில் திருமண வீட்டிற்கு அருகில் முகாமிடும் காட்சியிலிருந்து தொடங்குகிறது. யுத்த யதார்த்தத்தில், பதுங்கித் தாக்குதல் (ambush) என்பது மறைவு, இரகசியம் மற்றும் திடீர் தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் இத்திரைப்படத்தில், மக்கள் கூடியிருக்கும் வெளிச்சமான இடத்தில் படையினர் பதுங்கியிருப்பது, யதார்த்தத்தை மீறும் காட்சியமைப்பாகத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் திரைப்படம் யதார்த்தப் பாணியை மீறி சினிமா மாயைக்குள் நுழைகிறது. இங்கு இராணுவத்தினர் ஊரார்வீட்டுக் கோழியை உரிமையாகப் பிடித்து வாட்டி, சப்பாத்தி செய்து ஆறுதலாக உண்பது போன்ற காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இதனை மேல்மாடியில் இருந்து தொலைநோக்கி மூலம் சிறுவர்கள் பார்ப்பதும், “சப்பாத்தி” என்ற உணவு அவர்களுக்கு புதிதாக இருப்பதும், யதார்த்தத்தை மீறும் சினிமா மாயைக் காட்சிகளாக அமைகின்றன.

அதேவேளை, அந்த இராணுவக் குழு வழிதவறி வீட்டிற்குள் நுழைகிறது என்ற காட்சியமைப்பு யதார்த்த ரீதியாக பலவீனமாகத் தோன்றுகிறது. காட்டுப் பகுதிகளில் வழிதவறுவது சாத்தியமானதாயினும், குடியிருப்புப் பகுதிகளில் அவ்வாறு வழிதவறுவது நம்பத்தகுந்ததாகத் தோன்றுவதில்லை. எனினும், திட்டமிட்டே “வழிதவறல்” என்ற நாடகத்தைக் கையாள்ந்து பொதுமக்களைத் துன்புறுத்தும் இராணுவ மனப்பாங்கை வெளிப்படுத்தும் முயற்சியாக இதை அணுகலாம். கலைப்படைப்பில் அனைத்தும் காரண-காரியத் தொடர்போடு அமைய வேண்டிய அவசியமில்லை; கலைச் சுதந்திரம் பல்வேறு வெளிப்பாட்டு வழிகளை உருவாக்குகிறது.


இத்திரைப்படத்தின் மையக் குடும்பம் பெண்தலைமை தாங்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தக் குடும்பத்தின் தலைவி, “எனது அனுமதி இன்றி நீங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடாது” என்று இராணுவத்தினரிடம் கூறும் காட்சி முக்கியமான அரசியல் அடையாளமாகும்.  ‘இந்த வீட்டிலயாவது சமாதானத்தை நிலைநாட்டுங்கோ’ என்று கெஞ்சுவது இது, இந்திய அரசு ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் அனுமதியின்றி தலையீடு செய்ததற்கான விமர்சனமாகப் படைக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

இங்கு, பதுங்கித் தாக்குதல் நோக்கத்துடன் வந்த இராணுவம் ஏன் பொதுமக்களின் வீட்டிற்குள் நுழைகிறது என்பதற்கான தர்க்க ரீதியான விளக்கம் தெளிவாக இல்லை.

Monday, 26 May 2025

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தியில் தாமதம் ஏன்?

                                                                                                                                                                    


Dr.தேவநாயகம் தேவானந்த்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இந்தியாவிற்கு தெளிவான பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக, சீனா மோதல்களில் எவ்வளவு பங்கு வகித்தது என்பது தான் இங்கு நோக்கப்பட வேண்டியது. சீனா யுத்தத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிரான ஒரு சோதனைக் களமாகப் பயன்படுத்தியது, அதன் ஆயுதங்களை விளம்பரப்படுத்தியது மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பைச் சோதித்தது. இந்தச் சூழலில் இந்திய அயலுறவுக் கொள்கை முக்கியம் பெறுகிறது. இந்தச்சந்தர்ப்பத்தில் இலங்கை மிக முக்கிய ஸ்தானத்திலிருப்பதால் அதனோடுடனான இந்திய உறவு முக்கியமாகிறது.  

வரலாற்றுரீதியாக இலங்கை பொருளாதார நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இடர்கால நண்பனாக செயற்பட்டிருக்கிறது. இந்தியாவின் அண்மைய கொள்கையில் முக்கியமானதாக இருப்பது ‘அயல்நாடுகளுக்கு முன்னுரிமை’ என்பதாகும். இதில் ஏனைய அயல்நாடுகளைவிட இலங்கையில் இந்தியாவின் கவனம் மிகஅதிகமாகவே உள்ளதை அவதானிக்கலாம். இந்தச்சூழலில் இலங்கை இந்தியாவின் நேசக்கரத்தை எவ்வாறு பற்றுறிதோடு தொடர்ந்து தனது பொருளாதார நிலைத்த தன்மையைப் பேணப்போகிறது என்பது முக்கியமாகிறது. இலங்கை புதிய அரசியல் கலாச்சாரத்திற்குள் தன்னை நிலைநிறுத்த முற்படுகின்றதான இந்தக்காலகட்டத்தில் தனது அயலுறவுக்கொள்கையை தெளிந்த மனதோடு வடிவமைத்தாக வேண்டும். இந்திய உதவிகளிலிருந்து இலங்கையின் பொருதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய அணுகுமுறைகள் தேவை எனலாம். இலங்கை அரசாங்கம் தனது ‘தறுக்கணித்த’ நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு நகரமுற்படுவதன் விளைவுகளை,; அதன்நகர்வு வேகம் மிக மந்தமாகவே இருக்கிறது. இதற்கு ஏலவே இருந்த நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு புதிய சிந்தனைகளையும் நடைமுறைகளையும் நகர்த்த முடியாத இக்கட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும் இந்திய உதவிகளை துரிதகதியில் பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை நோக்கி நகர்ந்தாக வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியப்பங்களிப்பை பயன்படுத்தும் திறன் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும். சந்தேகங்களையும் தயக்கங்களையும் தாண்டி எதிர்கொண்டு வளரும் உத்தியைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.