Dr.தேவநயாகம் தேவானந்த்
கடந்த சில மாதங்களின் இரண்டு நாடபளுமன்றங்களில் நடந்த சம்பவங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன.
கடந்த ஒக்ரோபர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் பிரித்தானிய மன்னர் சார்ல்ள்ஸ் அவரே அவுஸ்ரேலியாவின் குடியரசு தலைவராக தற்போதும் இருக்கிறார். அவுஸ்திரேலிய விஜயத்தின் இரண்டாவது நாளன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் 'நீங்கள் எனது மன்னரில்லை' என கோசம்எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டுள்ளார். ஆனால் அவரை பாதுகாப்பு ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் இல்லை என தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ள செனெட்டர் மன்னர் சார்ல்சிற்கு தெளிவான செய்தியை தான் தெரிவிக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவராக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த நிலத்தவராகயிருக்கவேண்டும். மன்னர் இந்த நாட்டவர் இல்லை . சார்ல்ஸின் மூதாதையர்களே இனப்படுகொலையில் ஈடுபட்டனர். பாரிய படுகொலைகளில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சப்பவத்தின் பின்னர் குடியரசு குறித்த விவாதங்கள் அவுஸ்திரேலியாவில் தீவிரமடைந்துள்ளன. இதிலும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போது செனட்டர் தனது பழங்குடிகளின் தோலாலான பாரம்பரிய உடையணிந்திருந்தார். இது பாராளுமன்ற உடைப்பாரம்பரியத்திற்கு மாறானதாக இருந்தது.
அதே போல நவம்பர் மாதம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் நடனமாடி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது பலரது கவனத்தை அவரின் மீதும் அவர் எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரத்தின் மீதும் ஈர்த்துள்ளது.
184 ஆண்டுகள் பழமையான ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரும் சர்ச்சைக்குரிய மசோதா மீதான வாக்கெடுப்பின் போது இது நடந்தது. பழங்குடிகளின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் தனது பழங்குடிகளின் பாரம்பரிய உடையணிந்து நடனம் ஆடி தனது எதிர்ப்பை பதிவிட்டிருந்தார். அப்போது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரோடு சேர்ந்து பாடி ஆடினார்கள். இது, தமக்கெதிரான எதிர்ப்பை ஏற்புடமையாக்கியது அந்தப் பாராளுமன்றம் எனலாம். இது பழங்குடியினர் உரிமைகளை மதிப்பதில் உலகில் முன்னணி நாடாக உள்ள நியூசிலாந்து பாராளுமன்றத்தில் நடந்திருக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மசோதா பழங்குகளின் உரிமைகளை ஆபத்தில் ஆழ்த்தும் என அஞ்சுவதன் காரணமாக இந்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. இங்கு பழங்குடியினரின் மொழியில் பாரம்பரிய நடனமாடி தனது பண்பாட்டைப்பிரதியபலிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களும் எதை உலகிற்கு தெரிவிக்கின்றன? தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வெளியை பயன்படுத்துவதையும் அதன்மூலம் எல்லோரது கவனத்தையும் குறித்த விடயம் தொடர்பாக ஈர்ப்பதையும் கருத்தாக கொண்டுள்ளதை காணலாம். இரண்டு எதிர்ப்புக்களும் தாய்நிலத்தின் பழங்குடிகளின் உரிமைக்கான குரலாக இருந்ததைப் பார்க்கலாம். இந்த அடையாள எதிர்ப்பிற்கு அவர்கள் இருவருமே தமது மொழியில், பண்பாடு கலைசார்ந்த அடையாளத்தை முன் நிறுத்தியிருந்தார்கள். பிரித்தானியா மன்னர் சார்ள்ஸ்சிற்கு எதிரான குரல் என்பது மிக ஆழமானது தாங்கமுடியாத் துயரின் பல நூற்றாண்டு கால பழியின் விளைவாக வெளிவந்தது. ‘எனது மூதாதையரை இனப்படுகொலை செய்தாய் நீ இந்த நாட்டின் பூர்வீகக்குடியல்ல அதனால் நீ எனது மன்னன் அல்ல.’ என்ற கோசம் கவனத்தில் கொள்ளத்தக்க முக்கியமான விடயம். வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டு மிஞ்சியிருக்கும் சொற்ப பேரிலிருந்து வருகின்ற ஆள்மனதின் குரலாக பிரித்தானிய மன்னர் பரம்பரைக்கெதிரான குரலாக அது ஒலித்தது. மன்னருக்கும் அவரது நாட்டுக்கும் உலகிற்கும் அது அதிர்ச்சியைத் தந்தது. அதே வேளை இனப்படுகொலைக்கு மன்னர் பரம்பரை என்றோ ஒரு நாள் பதில்சொல்லியாக வேண்டும் என்ற ஒரு செய்தியைச் சொல்லி நிற்கிறது.
இந்தப்பின்னணியில், இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் வடக்குக்கிழக்கிலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் சென்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விரிவாகப்பார்க்க வேண்டும். விரிவஞ்சி அதனைத் தவிர்த்துக் கொள்கின்றேன்.
இருந்தாலும் மேலே விபரித்த இரண்டு சம்பவங்களும் தமது அடையாளத்தை நிலைநாட்டுவதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள். இப்போது பாராளுமனறம் சென்ற தமிழர்கள் தமது இனத்தின் பண்பாடு மொழி கலை சார்ந்த அடையாளங்களோடு தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள் எனலாம். ஆனால் இந்த நிலைமை விமர்சனத்துக்குரியதாகவே காணப்படுகின்றது. ஒரு சில தமிழ் பா.உ பலமொழி ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாம் அவர்களை நிலைத்து பெருமைப்பட வேண்டும். அது மிக்க மகிழ்ச்சி தரும் ஒன்று தான். ஆனால் பாராளுமன்றம் எமது மொழித்திறனை, மொழி வாண்மையை வெளிப்படுத்துவதற்கான களமா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட பா.உ தனது கன்னி உரையில் மூன்று மொழிகளிலும் வணக்கம் சொன்னார் தனது பேச்சை சிங்களம் ஆங்கிலம் என்று தானே உரைபெயர்த்தார். இவ்வாறு செய்கின்ற போது தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் எதைப்பேச வேண்டும் என்பதை வரையறுத்துக்கொள்ள தவறுகிறார். இதே போன்றே மட்டக்களப்பு பா.உ ஒருவரும் தனது பேச்சை தானே உரைபெயர்ப்பு அல்லது மொழிமாற்றம் செய்யும் நிலைமையையும் காணமுடிந்தது. அதே போல தேர்தல் பிரச்சாரங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளை மேலாடையென்று பாரம்பரிய உடைகளில் படங்களிலும் நேரடியாகவும் தோன்றியவர்கள் கோட்டும், சூட்டும் போட்டபடி பாராளுமன்றத்தில் காணப்படுகிறார்கள் தாங்கள் நுனி நாக்கால் ஆங்கிலத்தில் பேசத்தெரிந்தவர்கள் ஆங்கிலப்பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள் என்று தம்மை இனங்காட்டுவதில் இவர்கள் மிகக்கவனமாக இருக்கிறார்கள். இந்த இடத்தில் நாம் எந்த மக்களுக்காக பாராளுமன்றம் வந்திருக்கிறேன?!; என்பதை மறந்து விடுகிறார்கள். இங்கு நாம் பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு எமது விடையத்தை தெரியப்படுத்துவதற்காக ஆங்கிலத்தில் பேசுகிறோம் என்ற சப்பைக்கடடை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் பாராளுமன்றம் தெரிவான பலருக்கு ஆங்கிலப்புலமை இல்லை என்பதை புரிந்தாக வேண்டும். ஆகவே தமிழர்கள் இலங்கையில் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் அவர்களின் பிரதிநிதிகளான இவர்கள், அதற்கான தீர்வுக்காக குரல்கொடுக்க வேண்டியவர்கள், அந்த அடையாளத்தோடு அந்தப்பணியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. தமிழ் மொழிப்பற்று பண்பாட்டு விருப்பம் மக்களை உணர்வுநீதியாக நேசிக்கின்றவர்களாக தமிழ் பா.உ இருக்கத் தவறுகிறார்கள்.
No comments:
Post a Comment