Tuesday, 2 June 2026

கண்ணுக்குப்புலனாகா சமூகப் போராளி அமரர் ச. பாஸ்கரன்

கலாநிதி தே.தேவானந்த்

நாடகக் கலைஞரும் ஆயுள் வேத வைத்தியருமான . பாஸ்கரன் அவர்கள் 28 மே 2026 அன்று லண்டனில் காலமானார். அமைதியான சுபாவம், தமிழர் விடுதலையின் மீதான ஆழ்ந்த பற்றுறுதி, நாடகக் கலையின் மீதான அளப்பரிய ஈடுபாடு, சமூகச் சிந்தனை ஆகிய உயரிய பண்புகளைக் கொண்டவர் அவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்ததுடன், சிறந்த தொடர்பாடல் திறனும் மனிதநேயப் பண்பும் கொண்டவராக அறியப்பட்டார். உறவுகளைப் பேணுவதிலும் மனிதர்களை இணைத்துச் செயற்படுத்துவதிலும் தனித்திறன் மிக்கவராக விளங்கினார். சிறந்த சாரணர், சாரணப்பண்பாட்டின் வழி வந்தர்.

ஈழத் தமிழ் நாடக வரலாற்றில் பாஸ்கரனுக்கு தனித்துவமான இடமுண்டு. யாழ்ப்பாணம் அரியாலையின் வளமான நாடகப் பண்பாட்டின் பேறாக அவரைக் குறிப்பிடலாம்.

மேடைநடிப்பின் மீது இளமையிலிருந்தே ஆர்வம் கொண்டிருந்தவர். அரியாலை சுதேச தின விழாக்களில் அரங்கேற்றப்பட்ட வரலாற்று நாடகங்களில் நடித்தார். அவர் கடைசியாக நடித்த வரலாற்று நாடகமாக ராஜராஜ சோழன் குறிப்பிடப்படுகிறது. மேலும், மோகன் மாஸ்டரால் நடத்தப்பட்ட அரியாலை ரேடியன் கல்வி நிறுவனத்துடன் இணைந்து பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். பின்னர் மோகன் மாஸ்டர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, குழந்தை . சண்முகலிங்கத்தின் சத்தியசோதனைஇ முயலார் முயல்கிறார், தாயுமாய் நாயுமானார் போன்ற நாடகங்களை நெறிப்படுத்தியுள்ளார். யாழ் மத்திய கல்லூரிஇ சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி, ஸ்டான்லி கல்லூரி போன்ற பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான நாடகப் பயிற்சிகளையும் நாடக நெறிப்படுத்தல்களையும் மேற்கொண்டார்.

அரியாலை கிராமிய நாடகப் பண்பாட்டின் வழி வந்தவர் மேலும் நாடகம் பற்றிக்  கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் குழந்தை . சண்முகலிங்கத்தின் களப்பயிற்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார். அதன் வழியாக நாடக அரங்கக் கல்லூரியும் விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகமும் இணைந்து தயாரித்த முருகையனின் உயிர்த்த மனிதர் கூத்து நாடகத்தில் நடித்தார்.

இதன் பின்னர் நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த 'நாம் இருக்கும் நாடு நமது', ‘பெரிய மனிதர்பற்றி….’ ‘பாஞ்சாலி சபதம்’,யாரொடு நோகேன்’,கூடி விளையாடு பாப்பாஉள்ளிட்ட பல நாடகங்களில் நடித்தார். ஊர்கள் தோறும் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாங்களிலும் தெருவெளி நாடகங்களை மேடையேற்றினார்.

அவரது மிக முக்கியமான அரங்கப் பங்களிப்பாக 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக நடத்தப்பட்ட கண்ணுக்குப் புலனாகா அரங்கு நடவடிக்கையைக் குறிப்பிடலாம். இதில் மாட்டு வண்டி ஓட்டிச் செல்லும் வயோதிபராக வேடமணிந்து இரு புகுமுக மாணவர்களை மாட்டு வண்டியில் ஏற்றி பல்கலைக்கழக வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார். இந்த நிகழ்வு பகிடிவதை தொடர்பாக சமூக மட்டத்தில் நீண்டகால உரையாடலை உருவாக்கிய முக்கியமான அரங்கச் செயற்பாடாக அமைந்தது.

இடம்பெயர்வின் பின்னர் வன்னிப் பிரதேசத்தில் பல கிராமங்களில் மக்களை அணிதிரட்டும் பணிகளில் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து அங்கும் தனது நாடக நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் கொழும்பில் நடத்தப்பட்ட பண்பாட்டுப் பவனியை முன்னின்று ஒழுங்குபடுத்தி நடத்தியவர்களில் ஒருவராக விளங்கினார்.


 

வவுனியா  திருகோணமலை மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களில் அரங்கக் களப்பயிற்சிகளை முன்னின்று நடத்தி புதிய நாடகக் குழுக்களை உருவாக்கும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார். சிறந்த கற்பனைத் திறனும் நடிப்பாற்றலும் கொண்ட பாஸ்கரன் குழந்தை . சண்முகலிங்கத்துடன் இணைந்து ஆசிரியர் கலாசாலைகளில் ஆசிரியர்-மாணவர்களுக்காக நடத்தப்பட்ட நாடகக் களப்பயிற்சிகளில் வளவாளராகவும் செயற்பட்டார்.

பழம்பெரும் நாடகக் கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியிருந்தார். தமிழ்நாட்டில் . தாசீசியஸ் அவர்களின் முயற்சியால் நடத்தப்பட்டநாராய் நாராய்அரங்கப் பயணத்தில் பங்கேற்று மகாகவியின்புதியதோர் வீடு’, ‘பொறுத்தது போதும்’ போன்ற நாடகங்களில் நடித்தார்.

அரங்கச் செயற்பாட்டுக் குழு மற்றும் விழுது போன்ற பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் அவர் விளங்கினார். அவரது சமூக அக்கறையும் அரசியல் விழிப்புணர்வும் காரணமாக நேரடி ஆயுதப் போராட்டத்திற்கு அப்பாற்பட்ட கண்ணுக்குப்புலனாகாப் போராளியாகத் திகழ்ந்தார். இதனால்,

பாதுகாப்புக் காரணங்களால் பின்னர் லண்டனுக்கு இடம்பெயர்ந்து அங்கு வாழ்ந்தபோதிலும் தனது பண்பாட்டு மற்றும் நாடகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்தார். விழுது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அகவிழி இதழின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று அதன் தொடர்ச்சியான வெளியீட்டிற்காக அயராது உழைத்தார்.

நாடக மேதை குழந்தை . சண்முகலிங்கத்தின் மீது ஆழ்ந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தார். லண்டனிலும் நாடகங்களில் நடித்தும் அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டும் வந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சியாக உருவான பொங்கு தமிழ் நிகழ்வின் ஆரம்பச் சிந்தனை விதைகளை விதைத்தவர்களில் பாஸ்கரனும் ஒருவர் என்பது பலருக்குத் தெரியாத வரலாற்று உண்மையாகும்.

நாடகக் கலைஞரும் வைத்தியருமான . பாஸ்கரன், ஈழத் தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்ற சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். சமூக விழிப்புணர்வையும் மனிதநேயப் பார்வையையும் வளர்க்கப் பாடுபட்டவர். அவரது அரங்கப் பங்களிப்புகள் ஈழத் தமிழ் நாடக வளர்ச்சியிலும் மாற்று அரங்கு மரபுகளின் உருவாக்கத்திலும் அழியாத தடத்தைப் பதித்துள்ளன.

அவரது மறைவு ஈழத் தமிழ் நாடக உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது நினைவும் பணிகளும் எதிர்கால தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.

 

No comments:

Post a Comment