Tuesday, 2 June 2026

புதுவை அன்பன்: கலைக்கும் கொள்கைக்கும் உண்மையாக வாழ்ந்த அரங்கக் கலைஞர்

         கலாநிதி தேவநாயகம் தேவானந்த்

அறிமுகம்

புதுவை அன்பன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்தவர்  தனது சிறுவயதில் காவோலை கொழுத்தி அந்த வெளிச்சத்தில் கூத்தாடிய பரம்பரையில் வந்தவர். ஊரில் காத்தவராயன் கூத்தை அறுபது அடி நீள மேடையில் பிரமாண்டமாக நிகழ்த்தியவர். அந்தக் கூத்தை மேடையேற்றும்போது அதில் காணப்பட்ட பாலியல் விரசங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் கூறுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றை நீக்கி, புதிய சமூகப் பார்வையுடன் மறுவடிவமைத்தார்.

அவர் முறையான நாடகக் கல்வி கற்றவர் அல்லர். பட்டறிவின் வழியாகத் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட கலைஞர். விடுதலைப் போராட்டத்தின் அரசியல் மற்றும் சமூகத் தேவையை ஆழமாக உணர்ந்து, அதற்கான அரங்கியல் வடிவங்களை உருவாக்கியவர். தான் பேசிய விடுதலை அரசியலுக்கு உண்மையாக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கையும் கலைப் பயணமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருந்தன.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவிற்காக அவர் தயாரித்த பல நாடகங்கள் 500 முதல் 1500 தடவைகள் வரை மேடையேற்றப்பட்டுள்ளன. இதுவரை அவரது நாடகங்கள் மொத்தமாக 35,000 தடவைகளுக்கும் அதிகமாக மேடையேற்றப்பட்டிருக்கலாம் என அண்ணளவாக மதிப்பிடப்படுகிறது. ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட நடமாடும் நாடகக் குழுக்களைப் பயிற்றுவித்து, அவற்றை சைக்கிள்களில் கிராமம் தோறும் பயணம் செய்து நாடகங்களை மேடையேற்ற அனுப்பியுள்ளார். அதேவேளை புதிய நாடகக் குழுக்களையும் உருவாக்கி, தொடர்ந்து அரங்கச் செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார்.

அவரது படைப்பாற்றல் எழுதப்பட்ட உரைகளிலிருந்து உருவானதல்ல; நடிகர்களுடனான கலந்துரையாடல்களிலும் சமூக அனுபவங்களிலும் இருந்து உருவானது. அவர் தயாரித்த பெரும்பாலான நாடகங்கள் எழுத்து வடிவில் பதியப்படவில்லை. இருந்தபோதிலும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தி, மேடையேற்றியுள்ளார்.

அவர் சிறந்த கவிஞரும் ஆவார். கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, தனது இயற்பெயரை விட “புதுவை அன்பன்” என்ற கலைப்பெயரைத் தேர்ந்தெடுத்தார். பாடல்களை எழுதுவதிலும் அவற்றுக்கு இசை உருவாக்குவதிலும் திறமை பெற்றவர். குறிப்பாக நடிகர்களாக இல்லாத சாதாரண மக்களை திறமையான நடிகர்களாக மாற்றும் அரிய ஆற்றல் கொண்டவர். ஒருவருக்குள் மறைந்திருக்கும் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் தனித்துவமான பயிற்சி முறையைக் கொண்டிருந்தார்.

உலக நாடக நாளை முன்னிட்டு, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை ஏற்பாடு செய்யும் நாடக விழாவில், 03.06.2026 அன்று, கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கலைஞராக விளங்கிய நாடகக் கலைஞர் புதுவை அன்பன் என அறியப்படும் திரு. நாகமுத்து செல்வம் அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்களின் குரலாகிய அரங்கக் கலைஞர்

ஈழத் தமிழ் அரங்கியல் வரலாற்றில் சிலர் காலத்தின் குரலாகவும் சிலர் மக்களின் குரலாகவும் விளங்கியுள்ளனர். ஆனால் மக்களின் துயரங்கள், போராட்டங்கள், அரசியல் கனவுகள் மற்றும் சமூக நினைவுகளை ஒரே நேரத்தில் அரங்கின் மொழியாக மாற்றிய கலைஞர்களில் புதுவை அன்பன் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். அவர் வெறும் நாடக ஆசிரியர், இயக்குநர் அல்லது நடிகர் மட்டுமல்ல; சமூகச் சிந்தனையாளர், கலாச்சாரப் போராளி மற்றும் மக்களின் வரலாற்றை அரங்கில் பதிவு செய்த ஆவணகர்த்தாவாகவும் திகழ்ந்தார்.

அவரது அரங்கியல் பயணம் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. குறிப்பாக 1980களின் இறுதியிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், போராட்டங்கள், இடம்பெயர்வுகள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் சமாதான முயற்சிகள் ஆகியவை அவரது நாடகங்களின் கருப்பொருள்களாக அமைந்தன.

விடுதலைக்கான அரங்கின் படைப்பாளர்

புதுவை அன்பனின் ஆரம்பகால நாடகங்கள் விடுதலை அரசியலோடு நெருக்கமாக இணைந்திருந்தன. இந்திய அமைதிப்படை செயற்பட்ட 1987–1990 காலப்பகுதியில் வட இலங்கையின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. இந்தச் சூழலில் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வையும் விடுதலை உணர்வையும் உயிர்ப்புடன் வைத்திருக்க அரங்கு முக்கிய கருவியாக மாறியது.

களத்தில் காத்தான்”, “சதியை வென்ற சாவுகள்போன்ற நாடகங்கள் இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டன. இந்நாடகங்கள் வெறும் கலை நிகழ்வுகளாக அல்லாமல் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய கலாச்சார இயக்கங்களாகச் செயல்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், தேசிய அடையாளம், சமூக நீதி, எதிர்ப்பு மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவை இந்நாடகங்களின் மையக் கருத்துக்களாக அமைந்தன.

குருத்தோலை அழுவதேன்?” – இடம்பெயர்வின் அரங்கியல் ஆவணம்

1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வு தமிழர் வரலாற்றின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகும். இந்த வரலாற்றுச் சம்பவத்தை ஆவணப்படுத்தும் கலை முயற்சியாக புதுவை அன்பன்குருத்தோலை அழுவதேன்?” என்ற தெருவெளி நாடகத்தை உருவாக்கினார்.

இந்த நாடகம் தெருக்களிலும், அகதி முகாம்களிலும், திறந்த வெளிகளிலும் மேடையேற்றப்பட்டது. போரின் கொடுமை, இடம்பெயர்ந்த மக்களின் துயரம், குழந்தைகளின் மனநிலை, எதிர்கால அச்சம் ஆகியவை அதன் மையக் கருப்பொருள்களாக அமைந்தன. குறிப்பாக குழந்தைகளை நடிப்பில் ஈடுபடுத்தியமை புதுமையான முயற்சியாகும். யுத்தத்தைப் பற்றிப் பேசும் உரிமை குழந்தைகளுக்கும் உண்டு; அவர்களின் அனுபவங்களும் சமூக நினைவின் ஒரு பகுதியாகும் என்ற பார்வையை அவர் முன்வைத்தார்.

மக்களின் கதைகளை அரங்காக்கிய கலைஞர்

நாடகத்தின் முக்கிய நோக்கம் மக்களின் கதைகளைச் சொல்வதாக இருக்க வேண்டும்என்ற கொள்கையை புதுவை அன்பன் தனது முழுக் கலைப் பயணத்திலும் பின்பற்றினார். போரால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், நிலங்களை இழந்த விவசாயிகள், வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சமூக அநீதிகளுக்கு உள்ளானவர்கள் ஆகியோரின் வாழ்க்கை அனுபவங்கள் அவரது நாடகங்களின் அடிப்படையாக அமைந்தன.

அவரது நாடகங்களில் மக்களின் உண்மைக் கதைகள் மேடையேறின. இதனால் அரங்கு ஒரு கலை நிகழ்வாக மட்டுமல்லாமல் சமூக நினைவகமாகவும் செயல்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தும் இடமாக அவரது அரங்கு விளங்கியது.

சைக்கிள் நாடகக் குழு: அரங்கே வாழ்க்கையாக மாறிய அனுபவம்

புதுவை அன்பனின் அரங்கியல் பயணத்தில் சைக்கிள் நாடகக் குழு ஒரு தனித்துவமான அத்தியாயமாகும். 2006–2009 காலகட்டத்தில் இந்தக் குழுக்கள் வட இலங்கையின் பல கிராமங்களுக்கு சைக்கிள்களில் பயணம் செய்து நாடகங்களை மேடையேற்றின. மாதத்திற்கு 22 நாட்கள் தொடர்ந்து பயணித்து, நாளொன்றுக்கு குறைந்தது மூன்று இடங்களில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.

விமானக் குண்டுவீச்சுகள், இடம்பெயர்வுகள் மற்றும் போர்ச் சூழ்நிலைகளின் மத்தியிலும் இந்தப் பயணம் தொடர்ந்தது. நடிகர்களின் சம்பளம் அவர்களின் திறமையின் அடிப்படையில் அல்ல, குடும்பத் தேவைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது. மக்கள் உணவளித்தனர்; மக்கள் தங்குமிடமளித்தனர்; மக்கள் நாடகத்தின் அங்கமாகவே மாறினர்.

இதனால் அரங்குக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான எல்லைகள் மறைந்தன. நிஜ வாழ்க்கை நாடகமாகியது; நாடகம் மீண்டும் வாழ்க்கையை மாற்றியது.

சமாதானத்திற்கான அரங்கின் தேடல்

2002ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் புதுவை அன்பனின் அரங்கியல் புதிய திசையை நோக்கி நகர்ந்தது. “கரைதேடும் ஓடங்கள்என்ற நாடகத்தின் மூலம் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்தல் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

நீண்டகாலம் விடுதலை அரசியலோடு பயணித்த கலைஞர், இப்போது நிலையான சமாதானத்தை நோக்கிய கலாச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். சமாதானம் என்பது வெறும் போரின்மை அல்ல; இனவாதம், அநீதி மற்றும் அதிகார ஒடுக்குமுறைகளை நீக்கும் சமூக மாற்றமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார்.

இதன் மூலம் விடுதலைக்கான அரங்கும் சமாதானத்திற்கான அரங்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; மாறாக ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் அரசியல் மற்றும் மனிதநேயப் பயணங்கள் என்பதை அவர் தனது கலைப்பணியால் நிரூபித்தார்.

முடிவுரை

புதுவை அன்பன் ஈழத் தமிழ் அரங்கின் ஒரு கலைஞர் மட்டுமல்ல; ஒரு காலத்தின் கலாச்சாரச் சாட்சியாளர். அவர் மக்களின் துயரங்களை அரங்காக்கினார்; அவர்களின் எதிர்ப்பை கலை மொழியாக மாற்றினார்; அவர்களின் நம்பிக்கைகளை மேடையில் உயிர்ப்பித்தார். விடுதலைக்கான அரங்கு, தெருவெளி அரங்கு, சைக்கிள் அரங்கு, சமாதான அரங்கு ஆகிய அனைத்துப் பரிமாணங்களிலும் அவர் விட்டுச் சென்ற பங்களிப்பு ஈழத் தமிழ் அரங்கின் வரலாற்றில் அழியாத தடமாகத் திகழ்கிறது.

அவரது படைப்புகள் வெறும் நாடகங்களாக அல்ல; ஒரு மக்களின் நினைவகம், அரசியல் ஆவணம், சமூக வரலாறு மற்றும் மனிதநேயத்தின் கலை வடிவமாக விளங்குகின்றன. எனவே, புதுவை அன்பன் ஈழத் தமிழ் அரங்கின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக மட்டுமல்லாமல், போராலும் இடம்பெயர்வாலும் சிதைந்த ஒரு சமூகத்தின் குரலை வரலாற்றில் பதித்த கலாச்சார வரலாற்றாசிரியராகவும் மதிப்பிடப்பட வேண்டும்.

No comments:

Post a Comment