இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற பெண்களுடனும் இணைந்து வேலை செய்த போது கிடைத்த அனுபவங்களை இந்நாடகத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள முயற்சித்ததை அவதானிக்க முடிந்தது. இந்நாடக அளிக்கையூடாக கிடைக்கின்ற நிதி பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில் பாதிப்புக்களுக்கு பரிகாரம் தேட வேண்டியதும் இனியும் பாதிப்புக்கள் வராது பாதுகாக்க வேண்டியதும் முக்கியமாகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளை நாமே கண்டு கொள்ளல் அவசியமாகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கான அபிவிருத்தியில் மன அபிவிருத்தி பற்றி சிந்தித்தல் மிக அவசியம். மன அபிவிருத்தியை ஏற்படுத்தும் செயற்திட்டத்தில் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அரங்கு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்குகின்ற செயல்திறன் அரங்க இயக்கம் (யுஉவiஎந வுhநயவநச ஆழஎநஅநவெ) இவ்வாறான பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது. பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகத்தையும் செயல்திறன் அரங்க இயக்கமே தயாரித்துள்ளது. இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தே. தேவானந்த், ஒன்றரை மணிநேரத்தைக் கொண்ட இந்நாடக அளிக்கைக்கான இசையமைப்பை த. றொபேட் செய்துள்ளார்.
